நான் இலக்கிய உலகில் பிரவேசித்த ( 1971 ) காலப்பகுதியில்தான் தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியை
தொடங்கியது.
அவ்வேளையில்
அவசர கால சட்டமும் இரவில் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. என்னைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாட அஞ்சிய காலம். அதனால் வீட்டில் வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களிடம்
நூல்களை பரிமாறி வாசித்தோம்.
அப்போது
ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எம்மை பெரிதும்
கவர்ந்தன. அவர் மல்லிகை ஜீவாவின் நண்பராகவும் இருந்தார்.
ஜெயகாந்தனுடன்
கருத்து ரீதியாக முரண்பட்ட ஜீவா, மல்லிகையில் நீண்ட தொடரும் எழுதினார். ஜெயகாந்தனும் அவற்றை படித்திருந்தாலும், தனக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து
அலட்டிக்கொள்ளாத பிறவி அவர்.
பின்னாளில்
ஜீவா சென்னை சென்றவேளையிலும் வீட்டுக்கு அழைத்து உபசரித்தவர்தான் ஜெயகாந்தன் என்ற ஜேகே.
அவரது பெரும்பாலான
நூல்களை 1970 –
1980 காலப்பகுதியிலேயே
படித்து முடித்துவிட்டேன். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அந்த நூல்களில் அவர் எழுதும்
முன்னுரைகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
1984 இல்
சென்னை சென்றவேளையிலும் அவரை சந்திக்கத் தயங்கிய நான், வெகு தொலைவில் கோவில்பட்டிக்கு
அருகாமையிலிருக்கும் இடைசெவல் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் கி. ராஜநாராயணனை சந்தித்துவிட்டு
வந்து வீரகேசரியிலும் எழுதியிருக்கின்றேன்.
கி.ரா. ,
நான் ஜேகே.யை சந்திக்காமல் செல்வது குறித்து கவலைப்பட்டார்.
“ நீங்கள் நினைப்பது போன்று ஜே. கே. கோபக்காரர் அல்ல. அடுத்த முறை வந்தால் அவசியம் சந்தித்து பேசுங்கள். அவரை எவரேனும் சீண்டினால்தான்
கோபப்படுவார் “ என்றார் கிரா.
1990 ஆம் ஆண்டு மீண்டும் நான் சென்னை சென்றபோது, குடும்பத்தினரும் இலங்கையிலிருந்து வந்தமையால்
ஜே.கே. யுடனான சந்திப்பு இறுதி நேரத்தில்தான் நடந்தது.
சோவியத்
கலாசார நிலையத்தில் நடந்த தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாட்டுக்கும்
ஜேகே. வரவில்லை. திருநெல்வேலி, சாத்தூர், மதுரை,
திருச்செந்தூர் பயணங்களை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்தோம்.
சென்னை தினமணியில்
பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் கார்மேகமும் , இம்முறையாவது ஜேகே யை பார்த்துவிட்டு
திரும்புங்கள் என்றார்.