உங்களுக்கு இலங்கையிலிருந்த
ஆபிராகாம் கோவூரைத் தெரியுமா…? 70 -80 காலப்பகுதியில் பகுத்தறிவாளராகவும்
அதிரடியாக கருத்துச்சொல்பவராகவும் விளங்கியவர்.
அவரை கொழும்பில் பாமன்கடை வீதியில்
வசித்த ஒரு இலக்கிய நண்பரை பார்க்கச்செல்லும் வேளைகளில் கண்டிருக்கின்றேன். அவரது வீட்டு
முற்றத்தில் வளர்க்கப்பட்ட பூமரங்களுக்கு
தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பார். ஆனால், ஒருநாளும் பேசியதில்லை. அவரது மேடைப்பேச்சைக்
கேட்டு ரசித்திருக்கின்றேன்.
கட்டுப்பெத்தை பல்கலைக்கழக வளாகத்தின்
தமிழ்மாணவர்
மன்றம் ஒருதடவை இராமகிருஷ்ண மண்டபத்தில்
நடத்திய கலைவிழாவில், அவரும் வந்து உரையாற்றியிருக்கிறார்.
“ மழைவேண்டி யாகம் வளர்க்கிறார்கள்.
அவ்வாறான யாகங்களுக்காகவே ஒரு அமைச்சகத்தை உருவாக்குவார்களா..? “ என்று
கேலியாக அவர் அன்று சொன்னபோது சபை சிரித்தது.
அவரது மனைவி இறந்ததும், சடலத்தை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்போகும்
செய்தியையே மரண அறிவித்தலாக இலங்கை வானொலிக்கு
அவர் வழங்கியபோது ஶ்ரீமா அம்மையாரின் அன்றைய அரசு அதற்கு தடைவிதித்தது.
பின்னாளில் ஆபிரகாம்கோவூரின் உடலும் மருத்துவக்கல்லூரிக்குத்தான் வழங்கப்பட்டது.
அவருடைய எலும்புக்கூட்டையும் படம் எடுத்து ஒரு ஊடகம் வெளியிட்டதும் நினைவிருக்கிறது.
ஆபிராகாம் கோவூரின் அனுபவங்களை வீரகேசரி பத்திரிகையாளர் தனரத்தினம் தொடர்ந்து
எழுதினார். அது புத்தகமாகவும் வந்ததும் உங்களுக்கு நினைவிருக்கிறதா..?
சரி, போகட்டும் அவரது நம்பிக்கை என்ற அனுபவப்பதிவைத் தழுவி கொழும்பில்
எங்கள் தமிழ்க்கலைஞர்கள் ஒரு நாடகத்தை மேடையேற்றினார்களே…! அதில் ஆபிரகாம் கோவூராக
இலங்கை வானொலி கலைஞர் ஜோர்ஜ் சந்திரசேகரன் நடித்தாரே…? இதுவெல்லம் உங்களில் எத்தனைபேருக்கு நினைவில் தங்கியிருக்கிறது…!
வருடங்கள் தசாப்தங்களாக ஓடிவிட்டன. மறந்திருப்பீர்கள். நான் அன்று கண்ட
ஆபிராகாம் கோவூரின் தோற்றத்திலேயே ஒருவரை நான் தற்போது வாழும் ஊரில் பார்த்திருக்கின்றேன்.
பேசியிருக்கின்றேன்.