அது ஒரு பொல்லாத இரவு. அந்த இரவு தலைநகராகிய கொழும்பில் ஆரம்பித்த வன்முறைகள் நாடெங்கிலும் பரவலாகி ஏழு தினங்களுக்கு மேலாக தொடர்ந்தன. ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், வன்முறைக் கும்பல்களின் தமிழர்;கள் மீதான தாக்குதல்கள் தணியவில்லை.
ஊரடங்கு உத்தரவின்போது, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய பொலிசாரும் இராணுவத்தினரும், கடற்படையினரும் எந்தவிதமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் தமிழர்கள் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்திருந்தனர். சில இடங்களில் இடம் பெற்ற தாக்குதல்களைப் பார்த்து; முறுவலுடன் ரசித்துக் கொண்டிருந்தனர். பல இடங்களில் வன்முறைக் கும்பல்களுக்குப் படையினரும் பொலிசாரும் உதவியாகவும் செயற்பட்டிருந்தனர்.
தடிகள், கம்புகள், கத்திகள் உள்ளிட்ட கையிலகப்பட்ட ஆயுதங்களுடன் பெட்ரோல் கேன்களையும் கையில் கொண்டிருந்த அந்தக் கும்பல்கள் தமிழர்களைத் தேடித் தேடி தாக்கின.
வாகனங்களை நிறுத்தி தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடிய அந்தக் கும்பல்கள், நாட்டையும் சிங்களவர்களையும் காப்பதற்காக உதவுங்கள் என்று கோரி சிங்கள வாகன சாரதிகளிடம் பெட்ரோலை பெற்றுக் கொண்டார்கள்.
கேன்களில் இருந்த பெற்றோலைக் கொண்டு, தமிழர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பவற்றிற்கு தீ வைத்தார்கள். கையில் அகப்பட்ட தமிழர்களை உயிரோடு எரிப்பதற்கும் அந்தக் கும்பல்களில் இருந்தவர்கள் தயங்கவில்லை.











