சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு - பொது மன்னிப்பு கோரிக்கைக்கான சட்ட நடைமுறைகள் குறித்து ஆராய ஏற்பாடு
ஈரானியக் கப்பல்களால் இலங்கைக்கு நெருக்கடி அமெரிக்க, ஈரான் தூதரகங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ; இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கம் வலியுறுத்தல்
ஞானசார தேரர் கைது
இலங்கை கடற்பரப்புக்கு அருகாமையில் அமெரிக்கா தடை விதித்த ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் - சிக்கலாக இராஜதந்திர சூழ்நிலைக்கு இலங்கை முகங்கொடுத்திருப்பதாக அமெரிக்க ஊடகம் தகவல்
விஜித ஹேரத் - டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு புகைப்படம் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு - பொது மன்னிப்பு கோரிக்கைக்கான சட்ட நடைமுறைகள் குறித்து ஆராய ஏற்பாடு
03 Oct, 2026 | 05:47 PM
(எம்.மனோசித்ரா)
அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்த சட்ட முன்னெடுப்புக்களுக்காக இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட நால்வரடங்கிய விசேட இலங்கைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (05) சவுதி செல்லவுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர்.
அனோஜனுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து இதன் போது ஆழமாக ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும கேசரி வார வெளியீட்டுக்கு தெரிவித்தார். தற்போது இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொது மன்னிப்பிற்கான கோரிக்கையை எவ்வாறு சவுதி மன்னர் தலைமையிலான அரசாங்கத்திடம் முன்வைப்பது என்பது குறித்த சட்ட நடைமுறைகள் குறித்தே நாம் ஆராயவுள்ளோம். இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட கடிதத்தையும் கொண்டு செல்லவுள்ளோம் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்தார்.
இக்குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அனோஜன் சிவராசாவின் விடுதலையை உறுதி செய்ய தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமஞ்ஞ மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் மனுவொன்றைக் கையளித்தனர்.
அவரது தண்டனையைக் குறைக்கக் கோரும் மேல்முறையீடொன்று சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இவ்விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இராஜதந்திர வழிகள் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஈரானியக் கப்பல்களால் இலங்கைக்கு நெருக்கடி அமெரிக்க, ஈரான் தூதரகங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ; இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கம் வலியுறுத்தல்
03 Oct, 2026 | 05:02 PM
(எம்.மனோசித்ரா)
இலங்கையின் கடல் எல்லைக்கு சற்று அப்பால் ஈரானியக் கொடியை ஏந்திய 19 கப்பல்கள் வந்து நங்கூரமிட்டுள்ளன. இது இராஜாதந்திர ரீதியில் எமது நாட்டுக்கு பெரும் நெருக்கடிகளை தோற்றுவிக்கக் கூடிய நிலைமையாகும். எனவே எமது அரசாங்கமானது காலந்தாழ்த்தாமல் உடனடியாக அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதரகங்களின் அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்த நடத்தி, இந்தச் சிக்கலுக்கு விரைந்து ஒரு சரியான தீர்வைக் காண வேண்டும் என இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் இப்னம் கஃபூர் வலியுறுத்தினார்.
கொழும்பில் சனிக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் கடல் எல்லைக்கு சற்று அப்பால் ஈரானியக் கொடியை ஏந்திய 19 கப்பல்கள் வந்து நங்கூரமிட்டுள்ளன. இதனால் தற்போது ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச மனிதநேய விதிகளின்படி அக் கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டிய சட்டப் பொறுப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் அமெரிக்காவுடனான பொருளாதாரத் தொடர்புகளுக்குப் பயந்து அந்தப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை இலங்கை அரசாங்கம் இந்த ஈரானியக் கப்பல்களுக்கு உதவிகளை வழங்கினால், அமெரிக்கா இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதல் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதால் எமக்குக் கூடுதல் டொலர் கையிருப்பு தேவையாக உள்ளது. இத்தகைய சூழலில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தால், நாட்டின் ஏற்றுமதித் துறைக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே, எமது அரசாங்கமானது காலந்தாழ்த்தாமல் உடனடியாக அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதரகங்களின் அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்த நடத்தி, இந்தச் சிக்கலுக்கு விரைந்து ஒரு சரியான தீர்வைக் காண வேண்டும். இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்த 19 கப்பல்களிலும் கப்பலுக்கு 25 முதல் 30 ஊழியர்கள் வீதம் நூற்றுக்கணக்கான கப்பல் ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் உயிருக்கு ஆபத்தோ அல்லது மனிதநேயப் பிரச்சினைகளோ ஏற்படும் போது இலங்கை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பொறுத்தமான செயலாக இருக்காது.
அதேபோல, வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பொறுத்தவரை, முன்னர் ஈரானியக் கொடியுடன் ஐ.ஆர்.ஐ.எஸ்.எல். எனப்படும் கப்பல் நிறுவனத்தின் கப்பல்கள் இலங்கைக்கு நேரடியாக வந்து சென்றன. ஆனால் தற்போது அந்த வழித்தடம் மாற்றப்பட்டு, அக்கப்பல்கள் நேரடியாக இந்தியாவுக்குச் செல்கின்றன. இதனால் இலங்கையின் இறக்குமதிகளான உரம், தார் போன்ற பொருட்களுக்கும், ஏற்றுமதிகளான தேயிலை மற்றும் தென்னை சார்ந்த பொருட்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கு எமது ஏற்றுமதிகளில் பெரும் பங்கு உள்ளது. தற்போது பொருட்கள் இந்தியா வழியாகச் சுற்றி வருவதால் கப்பல் கட்டணங்கள் இரட்டிப்பாக உயர்ந்துள்ளன. இதற்கு முன்னர் 50 அல்லது 60 டொலருக்குக் கிடைத்த கொள்கலன்கள் தற்போது 100 டொலராக அதிகரித்துள்ளதால், நாட்டின் டொலர் கையிருப்பு மேலும் வெளிச் செல்லக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
வணிகக் கப்பல்கள் இந்தியாவுக்குச் சென்றுவிடும் போது, இலங்கையின் துறைமுகங்களுக்குக் கிடைக்க வேண்டிய கப்பல் கட்டண வருமானம் இழக்கப்படுகின்றது. இந்தியாவுக்கு இத்தகைய கப்பல்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்றால், இலங்கையால் ஏன் அதனைச் செய்ய முடியாது? எனவே அரசாங்கம் விரைந்து செயல்பட்டு அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுடனும் சுமுகமான முறையில் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இரு நாடுகளையும் பகைத்துக் கொள்ளாமல் ஒரு தகுந்த தீர்வைக் காண வேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கையாகும் என்றார். நன்றி வீரகேசரி
ஞானசார தேரர் கைது
03 Oct, 2026 | 07:59 PM
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையில், களுத்துறை – தினியாவல பகுதியில் உள்ள வனவாச மடாலயம் ஒன்றில் வைத்து கொழும்பு குற்றப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
இலங்கை கடற்பரப்புக்கு அருகாமையில் அமெரிக்கா தடை விதித்த ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் - சிக்கலாக இராஜதந்திர சூழ்நிலைக்கு இலங்கை முகங்கொடுத்திருப்பதாக அமெரிக்க ஊடகம் தகவல்
03 Oct, 2026 | 06:02 PM
(நமது நிருபர்)
அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலங்கையின் கடற்பிராந்தியத்துக்கு மிக அருகாமையில் தரித்து நிற்பதாகவும், இதன் காரணமாக இலங்கை சிக்கலானதொரு கடல்சார் இராஜதந்திர சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்குக்கரையில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில் தரித்து நிற்பதாகவும், அவற்றில் சில கப்பல்கள் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கப்பல்கள், தடை விதிக்கப்பட்ட ஈரானிய மசகு எண்ணெயை சீனாவுக்குக் கொண்டுசெல்வதில் ஈடுபட்டிருந்த ஈரானுடன் தொடர்புடைய கப்பல் தொகுதிகளின் ஒரு பகுதியாகும் எனவும், ஈரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய கப்பல்களுக்கு அவசியமேற்படும் சேவைகளை வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை அமெரிக்க அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'இந்தக் கப்பல்கள் வழமையாக ஈரானிய மசகு எண்ணெயை மலேசியாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்புக்குக் கொண்டுசெல்லும். அங்கு அந்த மசகு எண்ணெய் ஏனைய கப்பல்களுக்கு மாற்றப்பட்டு, அதன்பின்னரே அவை சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும். மசகு எண்ணெய் ஏனைய கப்பல்களுக்கு மாற்றப்பட்டதன் பின்னர், மீண்டும் சரக்குகளை ஏற்றுவதற்காக இந்தக் கப்பல்கள் ஈரானுக்குத் திரும்பும்.
இருப்பினும் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் பரந்துபட்ட தடைகள் இந்தச் செயன்முறையில் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதுடன், மசகு எண்ணெயை இறக்கிய கப்பல்கள் ஈரான் துறைமுகங்களுக்கு திரும்பமுடியாத அல்லது திரும்ப விரும்பாத நிலையைத் தோற்றுவித்துள்ளன' என்றும் அச்செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதேபோன்று இலங்கையின் கடற்பரப்புக்கு வெளியே, பிரத்யேக பொருளாதார வலயத்துக்கு அருகாமையில் ஈரானியக் கொடியிடப்பட்ட கப்பல்கள் தரித்து நிற்பதாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்தக் கப்பல்கள் தரித்துநிற்கும் சூழமைவு கடற்பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர அணுகுமுறை சார்ந்து ஒரு சிக்கலான நிலையைத் தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 'இக்கப்பல்கள் இலங்கைக்கு அருகாமையில் தரித்து நின்றாலும், நாட்டின் கடற்பரப்புக்கு வெளியே நிற்பதனால், அவற்றின் மீது இலங்கை அரசுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே உள்ளன. அதேவேளை தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்கான சேவைகளை வழங்கும் பட்சத்தில் வெளியக அழுத்தங்களுக்கு உள்ளாக நேரலாம்' என்றும் அதில் எதிர்வுகூறப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
விஜித ஹேரத் - டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு புகைப்படம் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
03 Oct, 2026 | 03:14 PM
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகக் கூறி, புகைப்படத்துடன் கூடிய பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்ட பின்னணியிலேயே இப் படம் பரப்பப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மைச் சரிபார்ப்பின் போது வெளிவந்த உண்மை விவரங்கள் வருமாறு:
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி செப்டம்பர் 28 ஆம் திகதி அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றியிருந்தார். இச்சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க ஜனாதிபதிக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இவ்வாறானதொரு இராஜதந்திர சந்திப்பு இடம்பெற்றிருந்தால், அது உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரதான ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், பிரதான ஊடகங்கள், நம்பகமான மூலங்கள் அல்லது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதிலும் இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றதாக எந்தவொரு பதிவும் வெளியாகவில்லை.
ஐ.நா. கூட்டத்தொடரின் போது அமைச்சர் விஜித ஹேரத் பின்வரும் தலைவர்களுடனும் இராஜதந்திரிகளுடனும் மட்டுமே இருதரப்புப் பேச்சுகளை நடத்தியுள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ், அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான துணைச் செயலாளர் நாயகம் ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸ் மற்றும் செயல்பாட்டு ஆதரவிற்கான துணைச் செயலாளர் நாயகம் அதுல் காரே ஆகியோரைச் சந்தித்து சர்வதேச அமைதி காக்கும் பணிகள் மற்றும் மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடினார்.
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி செய்யித் அப்பாஸ் அராக்சி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிஷிர் கானால் ஆகியோரைச் சந்தித்து வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழிலாளர் ஒத்துழைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் 22 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போதிலும், அவருக்கும் அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையே எவ்வித உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட சந்திப்புகளும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஊடகச் செயலாளரிடம் கூறியபோது,
சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், அமைச்சருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையே எவ்வித சந்திப்பும் இடம்பெறவில்லை என்றும் உறுதிப்படுத்தினார்.
சமூக வலைத்தளப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தைப் பரிசீலித்த போது, அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலியாக உருவாக்கப்பட்ட படம் என்பது தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment