தடை செய்யப்பட்ட ஓமான் விமானி எவ்வாறு இஸ்ரேல் செல்லும் விமானத்தில் பணியாற்றினார் ? விசாரணை தீவிரம் !
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் 20க்கும் மேற்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல்கள் முடக்கம் - வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவிப்பு
நீருக்கடியில் இயங்கும் தானியங்கி ட்ரோன்களை இயக்கி சீனா கின்னஸ் உலக சாதனை
நேபாளத்தில் கடும்மழை, வெள்ளம், மண்சரிவு: 24 பேர் உயிரிழப்பு
தடை செய்யப்பட்ட ஓமான் விமானி எவ்வாறு இஸ்ரேல் செல்லும் விமானத்தில் பணியாற்றினார் ? விசாரணை தீவிரம் !
Published By: Digital Desk 1
03 Oct, 2026 | 10:43 AM
ஓமனில் இருந்து வெளியேறிய பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்வதற்கு முன்னர் ஹமாமி தனது பெரும்பாலான காலத்தை சிரியாவில் கழித்ததாகவும், அங்கு அவர் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது தீவிரவாதக் கருத்துக்கள் தொடர்பாக கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஓமனின் தேசிய விமான நிறுவனமான ஓமன் ஏரில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாமி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், ஓமனைச் சேர்ந்த
தந்தைக்கும் சிரியாவைச் சேர்ந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், அவரது வாழ்க்கையின் பல ஆண்டுகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் கழித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், அவரிடம் ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் அவர் சுமார் எட்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றியதாகவும், இதற்கு முன்னர் மொராக்கோவின் தேசிய விமான நிறுவனமான ரோயல் ஏர் மரோக் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் ஹமாமி கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் சவூதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் எவ்வாறு விமானக் குழுவில் இடம்பெற்றார் என்பது தொடர்பாக ஷின் பெட், மொசாட், இராணுவம் மற்றும் போக்குவரத்து அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஹமாமியிடம் இருந்த உடமைகளில் “சுதந்திர பாலஸ்தீனம்” எனும் கருத்தை ஆதரிக்கும் குழுக்களின் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வெளியீடுகள் உள்ளிட்ட பாலஸ்தீன ஆதரவு பொருட்கள் காணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவையும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அவரது நடவடிக்கைகள் மற்றும் அவருக்கு இருந்ததாகக் கூறப்படும் தீவிரவாத நோக்கங்கள் தொடர்பில் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓமன் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை என்பதுடன், அந்நாட்டுடன் தூதரக உறவுகளையும் கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில், ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாமி, டெல் அவிவ் நோக்கிப் பயணிக்கும் விமானத்தில் பணியாற்றுவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது ஆரம்பகால பணிகள், பயண வரலாறு, தொடர்புகள் மற்றும் விமானக் குழுவில் பணியாற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் 20க்கும் மேற்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல்கள் முடக்கம் - வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவிப்பு
02 Oct, 2026 | 12:08 PM
இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில், நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்கு அப்பால் சுமார் 15 மைல் தொலைவில் 20 க்கும் மேற்பட்ட காலியான ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் நங்கூரமிட்டு முடங்கிக் கிடப்பதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடல்சார் கட்டுப்பாடுகளினால் இந்தக் கப்பல்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால், அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைகளுக்கு உள்ளாகியுள்ள ஈரானியக் கப்பல்களுக்கு உள்ளூர் நிறுவனங்கள் அல்லது படகுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதைத் தடுக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்குத் தீவிர அழுத்தம் கொடுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கும் இலங்கை நிறுவனங்கள் மீதும் அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படலாம் என கடந்த ஓகஸ்ட் மாதத்தில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
குறித்த கப்பல்கள் இலங்கையின் 12 கடல் மைல் பிராந்தியக் எல்லைக்கு வெளியே அமைந்திருப்பதாகவும், இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு எந்தவொரு தளவாடச் சேவைகளையும் வழங்கவில்லை எனவும் இலங்கைத் தரப்பு முன்பே தெளிவுபடுத்தியுள்ளது.
ஜூலை மாதத்தில் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மீண்டும் கடல்சார் முற்றுகையை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, சீனாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றுவிட்டு மீண்டும் ஈரானுக்குத் திரும்ப முயன்ற எண்ணற்ற காலிக் கப்பல்கள் இலங்கை மற்றும் மலேசியக் கடற்பரப்புகளில் தேக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
நீருக்கடியில் இயங்கும் தானியங்கி ட்ரோன்களை இயக்கி சீனா கின்னஸ் உலக சாதனை
Published By: Digital Desk 1
30 Sep, 2026 | 03:42 PM
நீச்சல் குளத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய ரோபோக்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக எண்ணிக்கையிலான தன்னாட்சி தானியங்கி ட்ரோன்களை இயக்கியதற்கான உலக சாதனையை சீன குழு ஒன்று படைத்துள்ளது
ஷியான் தியான்ஹே மேரிடைம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து வடமேற்கு பாலிடெக்னிகல் பல்கலைக்கழகக் குழுவால் ஒரே நேரத்தில் இயக்கப்படும் மிக அதிகமான தன்னாட்சி ட்ரோன்களை இயக்கி உலக கின்னஸ் சாதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
வடமேற்கு பாலிடெக்னிகல் பல்கலைக்கழகம் TH-618 என
அழைக்கப்படும் 116 தன்னாட்சி ட்ரோன்களின் இந்த சோதனை ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது என செப்டம்பர் 24 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை அதிகாரிகளின் மேற்பார்வையில் 50 மீட்டர் (164 அடிகள்) நீளமும் 20 மீட்டர் (65 அடிகள்) அகலமும் கொண்ட நீச்சல் குளத்தில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.. கின்னஸ் அமைப்பினர் இந்த சாதனையை உறுதிப்படுத்தி தங்களது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தன்னாட்சி ட்ரோன்கள் வரிசையாக இயக்கப்பட்டு, மனித தலையீடு ஏதுமின்றி 500 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு 34 நிமிடங்களுக்கு தன்னாட்சி முறையில் நீருக்கடியில் அணிவகுத்து பயணித்தன. அவை தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையைப் பின்பற்ற நிகழ்நேரத் தரவைச் (real-time data) சார்ந்து இயங்கியுள்ளன.
சோதனையில் பயன்படுத்தப்பட்ட TH-618 வாகனங்கள் 61.5 செ.மீ (24.2 அங்குலம்) நீளமும் 20 செ.மீ (7.8 அங்குலம்) அகலமும் கொண்டவை என்று வடமேற்கு பாலிடெக்னிகல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன்கள் 5.14 கிலோ (11.33 பவுண்டுகள்) எடையுள்ளவை, அதிகபட்சமாக 30 கி.மீ (18.6 மைல்கள்) வரை செல்லக்கூடியவை மற்றும் தொடர்ச்சியாக எட்டு மணி நேரத்திற்கும் மேலாக இயங்கக்கூடியவை என்று அது கூறியுள்ளது.
வடமேற்கு பாலிடெக்னிகல் பல்கலைக்கழகமானது நிகழ்நேரத் தொடர்புகளின் சிரமம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் உட்பட நீருக்கடி வழிசெலுத்தலின் சிக்கல்களையும் இதன் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளது எனலாம்
நீருக்கடி இலக்குகளை உணர்தல், தகவல் உணர்தல், ஒலித் தொடர்பு மற்றும் காட்சிப் பார்வை ஆகியவற்றில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சியின் மூலம் இந்த சாதனை சாத்தியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடும்மழை, வெள்ளம், மண்சரிவு: 24 பேர் உயிரிழப்பு
Published By: Digital Desk 1
29 Sep, 2026 | 11:18 AM
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் மனங்க், மைகுடி, பெக்லங், பார்பட், பல்பா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடும்மழை பெய்து வருகிறது.
கடும் மழையினால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாளத்தில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வெள்ளப் பெருக்கு, மண்சரிவில் சிக்கி 14 பேர் மாயமான நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் தொடர்ந்து ஏற்படும் அசாதாரன வானிலையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது நன்றி வீரகேசரி



No comments:
Post a Comment