பேரும் புகழும் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

ஒரு பக்கம் சிவாஜி நடித்த படங்களை டைரக்ட் செய்து கொண்டு மறு புறம் ஏனைய நடிகர்களின் படங்களையும் இயக்கி பேரும் புகழும் பெற்றுக் கொண்டிருந்தார் முக்தா சீனிவாசன். அதன் தொடர்சியாக 1976ல் அவர் டைரக்ட் செய்த படம் பேரும் புகழும்! 


 தனது சொந்த நிறுவனமான முக்தா பிலிம்ஸ் படங்களை டைரக்ட் செய்து கொண்டிருந்த சீனிவாசன் தன் நண்பன் வேணுகோபாலன் என்பவரின் வித்யா மூவிஸ் தயாரிக்கும் படங்களையும் டைரக்ட் செய்து வந்தார். அந்த வகையில் இந்தப் படம் அவரின் தயாரிப்பில் உருவாகி சீனிவாசன் இயக்கத்தில் வெளியானது. 

 சுஜாதா நடித்த படம் என்றால் பேரும் புகழும் நிச்சயம் என்ற

நம்பிக்கை நிலவிய அந்த சீசனில் அவரை கதாநாயகியாக நடிக்க வைத்திருந்தார் அவர். அவருக்கு இணையாக முத்துராமன் நடித்தார். 

 முக்தா இயக்கும் படம் என்றால் ஒரு செட் மெனு போல் சிலர் அவர் படங்களில் தொடர்ந்து இருப்பார்கள். இப் படத்திலும் அது தொடர்ந்தது. மனோரமா, சோ, சுந்தரராஜன், ஶ்ரீகாந்த் , தேங்காய் சீனிவாசன் என்று வழமையான நடிகர்கள் எல்லோரும் இதில் நடிக்க போனசாக சவுகார் ஜானகியும் படத்தில் இடம் பெற்றார். இவர்களுன் வை .ஜி .மகேந்திரன், ஐ எஸ் ஆர் , பண்டரிபாய் , ஸ்ரீகாந்த் , வி .கோபாலகிருஷ்ணன் , சுகுமாரி , ராஜவேலு , மணிமாலா ஆகியோரும் நடித்திருந்தனர். 

 வசதியான வீட்டுப் பெண் நிர்மலா . பணக்காரத் தந்தையால் செல்லமாகவும், தாயினால் கண்டிப்பாகவும் வளர்க்கப்படுபவள். அவளுக்கு ஒரு வீக்கனஸ் , தினசரி தன்னைப் பற்றிய செய்தியும் , போட்டோவும் பத்திரிகையில் வர வேண்டும் என விரும்புவாள் . ஒரு நாள் தானே தன் காரை மரத்தில் மோதி விட்டு ஒரு ஆட்டை காப்பாற்ற போய் இந்த விபத்து ஏற்டபட்டது என்று போலி விளம்பரம் தேடுகிறாள். இதனை கோபி என்பவன் கண்டு பிடித்து கண்டிக்கிறான். சந்தர்ப்ப சூழ்நிலையால் அதே கோபி அவளை மணக்கிறான். அவள் பாதையில் சென்று அவளை திருத்த தீர்மானிக்கிறான். ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக விபரீதம் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து நிர்மலாவை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறான் கோபி. நிர்மலா திருந்தி தன் கணவனுடன் வாழ்ந்தாளா என்பதே படத்தின் மீதி. 

 படத்தின் கதையை கலைஞானம் எழுதினார். தான் எடுக்கும் சிவாஜி படத்துக்கு கதை வேண்டும் என்று சீனிவாசன் கேட்டுக் கொள்ள கலைஞானம் இக் கதையை சொன்னார். கதையை சிலாகித்த சீனிவாசன் இது ஹீரோயின் சப்ஜெக்ட் இக் கதை சிவாஜிக்கு பொருந்தாது என தீர்மானித்து , தன் நண்பன் வேணுகோபாலன் சிறிய பஜட்டில் எடுக்கும் படத்துக்கு இந்த கதையை தெரிவு செய்ய அதுவே பேரும் புகழும் ஆனது. 

 படத்தில் பேரும் புகழும் தேடி அலையும் பாத்திரத்தில் சுஜாதா

இயல்பாக நடித்திருந்தார். அன்றைய சீசனில் அவர் நடித்த எல்லா படங்களின் கதா பத்திரத்துடனும் அவர் ஒன்றிப் போய் நடித்திருந்தார் . இதிலும் அது தொடர்ந்தது. முத்துராமனுக்கு பழக்கப் பட்ட ரோல் சிக்கலின்றி நடித்திருந்தார். சௌகார் ஜானகி நடிப்பு படத்துக்கு வலுவூட்டியது. கண்டிப்பு , பாசம் என்று நடிப்பால் கவர்ந்தார். மனோரமா , சோ இருவரும் காமெடியில் சிரிக்க வைக்கிறார்கள் . சுந்தரராஜன் ஒரு காட்சியில் வந்தாலும் ரசிக்கும் படி இருந்தது. 

 படத்தின் வசனங்களை தூயவன் எழுதினார். சில இடங்களில் வசனங்கள் ரசிக்கும் படி இருந்தன . பாடல்களை கண்ணதாசன் இயற்ற எம் எஸ் வி இசையமைத்திருந்தார். ஜேசுதாஸ் குரலில் தானே தனக்குள் ரசிக்கிறாள் பாடல் இதமாக ஒலித்தது. 

 முக்தா சீனிவாசன் இயக்கும் படங்களில் கதாநாயகன் எதாவது ஒரு

வீக்னஸுடன் தான் சித்தரிக்கப்படுவான். இதில் ஒரு மாறுதலாக கதாநாயகிக்கு ஒரு வீக்னஸ் இருப்பதாக காட்டி படத்தை உருவாக்கியிருந்தார். ஆனாலும் சுஜாதாவை கதாநாயகியாக தேர்வு செய்ததே படத்துக்கு பிளஸ் ஆகி விட்டது ! 

 இந்தப் படம் உருவான கால கட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு மலிவான யுக்தி பரவத் தொடங்கி இருந்தது. அதாவது படத்தின் டைடில் கார்டில் நடிகர்கள், தொழில் நுட்பவியலாளர்களின் பெயர்களை இருட்டடிப்பு செய்யும் ஒர் அவல நிலை தொடங்கி சின்னப்பா தேவர் உட்பட சிலர் அதனை பின்பற்ற தொடங்கி இருந்தார்கள். இப் படத்திலும் அது தொடர்ந்தது. நல்ல காலம் , கால ஓட்டத்தில் அந் நிலை மாறி தொழில் நுட்பவியலாளர்களுக்கும் பேரும் புகழும் கிடைக்கத் தொடங்கியது!













No comments: