போராட்டம் திரைப்படம் என் பார்வையில் - செ .பாஸ்கரன் (c.Paskaran)

 .

போராட்டம் காலம் காலமாக நமது மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று.

இன்று கந்தையா பாஸ்கரனின் தயாரிப்பில் ராஜ் சிவராஜ் அவர்களின் எழுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் போராட்டம். சிட்னியிலே நவம்பர் மாதம் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை    மாலை 3 மணிக்கு Blacktown Hoyst சினிமாவிலேயே திரையிடப்பட்டது. அந்த சினிமாவை பார்ப்பதற்கு சென்றிருந்தேன் அதன் விளைவுதான் இந்த பதிவு. மில்லர் என்கின்ற கடலோரக் கிராம இளைஞனின் உதை பந்தாட்ட National Team தேர்வுக்கான கற்பனையோடு வாழும் ஒருவனின் கதை தான் இந்த திரைப்படம். இது ஒரு மில்லருடைய கதை அல்ல ஆயிரம் ஆயிரம் நம் இளைஞர்களின் கதை. மில்லராக ரீகன் பாஸ்கரன் வாழ்ந்துள்ளார். புதுமுகம் அல்லது அறிமுகம் என்று கூற முடியாத அளவுக்கு அவருடைய நடிப்பு அமைந்திருந்தது.

சமூகப் பிரச்சினைகளையும் உதை பந்தாட்டத்தில் இடம்பெறுகின்ற போராட்டங்களையும், ஊழல்களையும் ,முகமூடி அணிந்த பெரிய மனிதர்களின் குள்ளத்தனங்களையும் உரித்து காட்டுகின்றார் கதை ஆசிரியரும் இயக்குனருமான ராஜ் சிவராஜ் அவர்கள். இந்தப் போராட்ட்ங்களுக்கு மத்தியிலே அந்த இளைஞனின் காதல், அவனுடைய காதலியாக நிவேதிகா வருகிறார். இயல்பான நடிப்பு, காதல், உணர்ச்சி, கோபம் என்று எல்லாவற்றையுமே அழகிய முகத்தில் பிரதிபலித்து விடுகின்றார்.

ஒரு கயிற்றின் மேல் நடப்பது போல் எல்லாவற்றையுமே எல்லா ரசிகர்களையுமே கவர்ந்திழுத்து இருக்கின்றார் என்று தான் கூற வேண்டும் ராஜ் சிவராஜ் அவர்கள்.

விளையாட்ரங்கை ரசிக்க வைக்க பூவன் மதீசன் கையாண்டிருக்கும் இசை வெற்றிக்கிண்ண மைதானமாகவே மாறி இருந்தது திரை அரங்கம். அருமையான பல பாடல்கள் அந்த பாடல்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் போல இருந்தது. எங்களுடைய ஈழத்து மண்ணிலே அருமையான இசையமைப்பாளர்கள் எல்லாம் இருக்கின்றார்கள் என்பதை பூவன் மதீசன் மீண்டும் ஒருமுறை முத்திரை பதித்திருக்கின்றார். பாடல்களாக

இருந்தாலும் சரி, பின்னணி இசை ஆக இருந்தாலும் சரி மிக அருமையாக கொண்டு வந்திருக்கின்றார்.





அத்தனை காட்சிகளையும் தன் கமராவினால் அழகாக காட்டி இருக்கின்றார் ஏ கே கமல். கடற்கரை காட்சியாக இருக்கட்டும், மைதான காட்சிகளாக இருக்கட்டும், பந்தாட்டமாக இருக்கட்டும், ஏன் கொலைக் களத்தைக் கூட அழகாக காட்டியது கமலின் புகைப்பட கருவி என்று தான் கூற வேண்டும். வாழ்த்துக்கள் ஏகே கமல்.



இந்த திரைப்படத்திலே அத்ததை கலைஞர்களும் சேர்ந்து இயங்கியிருக்கின்றார்கள் என்று தான் கூற வேண்டும் அருண் யோகதாசனின் editing, கடுமையான உழைப்பு கலை இயக்குனர் கோபிதனின் அருமையான காட்சி அமைப்புகளிலேயே தெரிகின்றது. உமாகரன் ராசையா, வாகிசன், சாந்தகுமார் போன்றவர்களின் பாடல் வரிகள் மிக அற்புதமாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக அந்த மைதானத்தில் ஒலிக்கின்ற பாடல் திரையரங்கை அதிரவைத்துவிட்டது. அவ்வளவு அழகாக அந்த பாடல் அமைக்கப்பட்டு இருக்கின்றது.


திரைப்படத்தில் நடித்து இருக்கின்ற ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கின்றார்கள் என்று தான் கூற வேண்டும். பல நடிகர்களின் பெயர்கள் தெரியாமல் இருக்கின்றது, அதிலே காக்காவாக வருகின்ற அந்த இளைஞர் உதை பந்தாட்டம் அதோடு போதை விற்பனை இந்த இரண்டு காட்சிகளிலும் அவருடைய நடிப்பு மிக அற்புதமாக இருக்கின்றது. பழக்கடை அக்கா அருமையான நடிப்பு .   


ஒரு சாதாரண யாழ்ப்பாணத்து இளைஞனின் விரக்தி, வெறுப்பு, அவன் விலகிப் போகும் பாதை, இவர்களை வைத்து பணம் சம்பாதிக்கின்ற நல்லவர்கள் போன்று முகமூடி அணிந்து கொண்ட பெரியவர்கள், அரசியல்வாதிகள் என்று எல்லாவற்றையுமே மிக யதார்த்தமாக காட்டி இருக்கின்றது இந்த திரைப்படம். இறுதியாக ஒரு நடுத்தர வர்க்கத்திலே கனவுகளோடு வாழும் இளைஞனுக்கு நடக்கின்ற அத்தனை விடயங்களையும் போராட்டம் சுமந்து வந்திருக்கின்றது . இது இன்று நேற்றல்ல எமது சமுதாயம் தொடர்ந்து எத்தனையோ ஆண்டுகளாக சுமந்து கொண்டிருக்கும் ஒரு வலி. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு சிட்னியிலிருந்து அதிக மக்கள் வரவில்லை, ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள்தான் வந்திருந்தார்கள் அதுவும் திரைப்படங்களோடு சம்பந்தமானவர்கள் நான் அதிகம் என்று கூறலாம். அதற்கான ஒரு காரணம் இங்கு சரியான விளம்பரம் செய்யப்படாமல், சரியான சினிமா அரங்கை தேர்வு செய்யாதவை என்று குறிப்பிடலாம். ஆகவே இன்னும் ஒரு முறை இந்த திரைப்படம் வெளியிடப்படுமாக இருந்தால் அதற்கான சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் நல்ல திரைப்படத்தை ஒரு ஆரோக்கியமான கதை அமைப்பைக் கொண்ட திரைப்படத்தை பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டிருந்தது. இருந்தாலும் ஒரு சில பொதுவான குறைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன் மற்றவற்ரை நேரடியாக இது சம்பந்தமான ராஜ் சிவராஜ் அவர்களுக்கும் குழுவினருக்கும் தெரிவிக்கின்றேன். அதிலே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று, பல் துலக்கும் காட்சியை காட்டுதல் இந்திய தமிழ் படங்களிலேயே அதிகமான படங்களிலே அது காட்டப்படுகின்றது அதை பார்க்கின்ற போது ஒரு அருவருப்பாக இருக்கும் ஏன் அப்படி ஒரு காட்சியை வைக்க வேண்டும் என்ற கேள்வி எப்போதுமே எனக்கு எழுகின்றது. இந்த திரைப்படத்திலும் அந்த பல் துலக்கும் காட்சி ஒன்று காட்டப்படுகின்றது இதை தவிர்த்துக் கொண்டால் மிக நல்லதென்று நினைக்கின்றேன். முன்பாதியிலே திரைப்படம் சற்று மெதுவாக நகர்ந்து சென்றது ஆனால் பிற்பகுதியில் மிக அருமையாக நடத்திச் செல்லப்பட்டு இருக்கின்றது. காமெடி அல்லது ஹாஷ்யம் என்று வருகின்றபோது கொஞ்சம் தரமான காமெடிகள் அர்த்தம் பொதிந்த காமெடிகளை கொண்டு வந்தால் அது மிகச் சிறப்பாக இருக்கும். இது இந்த திரைப்படத்தின் நிறைகளோடு பார்க்கின்ற போது இது பெரிய குறைகள் அல்ல என்று தான் கூற வேண்டும்.


எனக்கு பிடித்த இன்னும் ஒரு முக்கியமான விடயத்தை நான் இங்கு குறிப்பிட வேண்டும். திரைப்படத்தை வெளியிடுகின்ற போது இறுதியிலே A flim by ஒருவருடைய பெயர் தான் வரும் , அதாவது ஒரு நெறியாளர் பெயர் அல்லது ஒரு தயாரிப்பாளர் உடைய பெயர் அதிகமாக போடுவார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் ஆறு பேருடைய பெயர்களை போட்டிருந்தார்கள். இப்படி போட்டிருந்தது ஒரு குழுவாக நாங்கள் இயங்கி இருக்கின்றோம் இந்த திரைப்படம் எங்கள் திரைப்படம் என்ற ஒரு அற்புதமான விடயத்தை மற்றவர்களுக்கு காட்டி இருக்கிறது. வாழ்க உங்கள் கலை. நல்ல ஒரு திரைப்படத்தை பல சிட்னி மக்கள் தவற விட்டு விட்டார்கள். மீண்டும் ஒருமுறை இந்த திரைப்படம் திரையிடப்பட்டால் மக்களே நிச்சயமாக அதை சென்று பாருங்கள். பல குப்பை திரைப்படங்களை விழுந்தடித்து பார்க்கின்ற நீங்கள் நிச்சயமாக இந்த படத்தை ரசிப்பீர்கள் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.


போராட்டம் நெஞ்சில் நிறைந்துள்ளது .  


No comments: