தசாவதாரம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

1.png

தமிழ் திரையில் உணர்ச்சிகரமான குடும்பக் கதைகளை படமாக்கி ரசிகர்களை கவர்ந்திழுப்பதில் வல்லவர் கே எஸ் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய சாரதா, கற்பகம், பணமா பாசமா, குலமா குணமா போன்ற படங்கள் அவர் அமைத்த உணர்ச்சிகரமான காட்சிகளால் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றி கண்டன. 

 இவருடைய திறமையை பாராட்டி கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன் திருச்சி தேவர் மன்றத்தில், திருச்சி தோழமை நாடக மன்றத்தினர் நடத்திய விசேட விழாவில் 'இயக்குநர் திலகம்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. 

 இயக்குனர் திலகம் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வெள்ளிக் கேடயத்தை, கோபால கிருஷ்ணனிடம், ஒளவை டி. கே. சண்முகம் வழங்கினார். 

 இவ்வாறு சமூகப் படங்களை எடுத்து வந்தவர் ஒரு கால கட்டத்தில் சமூகப் படங்களில் இருந்து சற்று விலகி புராணப் படங்களை இயக்கத் தொடங்கினார். அவர் டைரக்ட் செய்த ஆதி பராசக்தி நல்ல வரவேற்பை பெறவே அடுத்து மற்றுமொறு புராணப் படத்தை இயக்கினார். அப் படம்தான் தசாவதாரம் . 

 மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் விளக்கும் முகமாக இப் படம் உருவானது. பத்து அவதாரம் , பத்து வரலாறு ஆகவே ஏராளமான நடிகர்கள் என்ற விதத்தில் படம் தயாரானது. 

 படத்தில் பலர் நடித்த போதும் கதாநாயகன் நாராயணன் தானே , அதனால் அவரை சுற்றியே எல்லா நடிகர்களும் வலம் வந்தார்கள். கே எஸ் ஜி அனுபவமிக்க இயக்குனர் என்பதால் எல்லோரையும் தகுந்த முறையில் பயன் படுத்திக் கொண்டார். 
2.png

 உலகத்தை காக்க திருமால் பத்து அவதாரங்களை எடுக்கப் போவதாக நாரதரிடம் சொல்கிறார். அதன் படி:
  1. மச்ச அவதாரம் (மீன்): பிரளய காலத்தில் சோமுகாசுரனை வதம் செய்து வேதங்களைக் காப்பாற்றினார். 
  2. கூர்ம அவதாரம் (ஆமை): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது, மந்திரமலையைத் தாங்க முதுகைக் கொடுத்தார். 
  3. வராக அவதாரம் (பன்றி): இரண்யாட்சன் என்ற அசுரனை வதம் செய்து கடலுக்கடியில் சென்ற பூமியை மீட்டெடுத்தார். 
  4. நரசிம்ம அவதாரம் (சிம்ம-மனித வடிவம்): பிரகலாதனைக் காப்பாற்றவும், இரண்யகசிபுவை வதம் செய்யவும் எடுக்கப்பட்டது. 
  5. வாமன அவதாரம் (குள்ளமான வடிவம்): மகாபலியின் அகந்தையை அடக்க மூன்றடி மண் கேட்டார். 
  6. பரசுராம அவதாரம்: தந்தை சொல் காக்கவும், செருக்கடைந்த ஷத்திரிய அரசர்களை அடக்கவும் கோடாரி ஏந்தித் தோன்றினார். 
  7. ராமாவதாரம் (ஸ்ரீராமர்): ராவணனை வதம் செய்து, அறத்தை நிலைநாட்டினார். 
  8. பலராம அவதாரம்: ஆதிசேஷனின் வடிவமாகத் தோன்றி பலராமராக அவதரித்தார். 
  9. கிருஷ்ண அவதாரம் (ஸ்ரீகிருஷ்ணர்): குருஷேத்திரப் போரில் கீதையை உபதேசித்து, கம்சனை வதம் செய்தார். ஒன்பது அவதாரங்களை எடுத்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார் . 
  10. இதில் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டத் தோன்றும் எதிர்கால அவதாரம். என்று காட்டி படத்தை முடிக்கிறார்கள் ! 

படத்தில் நாராயணனாக ரவிக்குமார் நடித்தார். ஒவ்வொரு அவதாரத்திலும் திருமாலுக்கு ஒவ்வொரு வில்லன் இருப்பதால் படத்திலும் அது சித்தரிக்கப்பட்டது. சிறை சென்று திரும்பிய பின் இப் படத்தில் இரணியனாக எம் .ஆர் . ராதா நடித்தார். ராவணனாக அசோகன், மகாபலியாக எஸ் .வி . சகஸ்ரநாமம், துச்சாதனனாக பி. எஸ் . வீரப்பா , துரியோதனனாக எஸ் .வி .ராமதாஸ் ஆகியோரும் நடித்தார்கள். கே ஆர் விஜயா , சௌகார் ஜானகி, விஜயகுமாரி, ஸ்ரீதேவி ஆகியோரும் படத்தில் தோன்றினார்கள். இவர்களுடன் படம் முழுவதும் நாரதராக பாடி நடித்திருந்தார் சீர்காழி கோவிந்தராஜன். 
3.png


 படத்தின் பாடல்களை ஏ. மருதகாசி, உடுமலை நாராயணக்கவி , வாலி, ஆகியோர் இயற்றினார்கள். படத்துக்கு இசையமைத்தவர் பழம் பெரும் இசையமைப்பாளர் எஸ். ராஜேஸ்வரராவ். நீண்ட காலத்துக்கு பிறகு தமிழில் இப் படத்துக்கு இசையமைத்திருந்தார். 

 அதே போல் பழைய ஒளிப்பதிவாளர் ராமசாமி படத்தை ஒளிப்பதிவு செய்ய , தந்திரக் காட்சிகளை ரவிகாந்த் நிக்காய்ச் ஒளிப்பதிவு செய்தார். படத்துக்கான அரங்க அமைப்பை அருமையாக செய்திருந்தார் பி. நாகராஜன். 

 கே எஸ் ஜி படம் என்றால் வசனம் கொட்டும், அதோடு காட்சிகள் உணர்ச்சிகரமாகவும் இருக்கும் , இதிலும் அது தொடர்ந்தது. ஆனாலும் ஒன்பது பிளஸ் நடக்கவிருக்கும் பத்தாவது அவதாரங்களையும் சுவாரஸ்யமாக இயக்கி இருந்தார் அவர். பல விதமான சமூகப் படங்கள் வந்து கொண்டிருந்த கால சூழலில், சமூகப் படங்களை எடுத்து வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த கே எஸ் ஜி புராணப் படம் ஒன்றை இயக்கி தான் இயக்குனர் திலகம் தான் என்பதை நிரூபித்திருந்தார் !




4.png
5.png
6.png

No comments: