சிட்னியில் தீபாவளி விருந்து போல “போராட்டம்" திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
தீபாவளி நாளில் விருந்துண்டு, அலைந்து திரிந்து மதியம் மூன்று மணி காட்சிக்குப் படம் பார்ப்பதே போராட்டம் தான் ஆனாலும்
நம்மவர் படைப்புக்காக நம்மாலான ஆதரவு என்று படம் துவங்கும் வரை நித்திரையோடு போராடி வெற்றி கண்டேன்.
சரி இனி என் பார்வையில் போராட்டம்
படம் ஆரம்பித்து நம் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் கருவேலமரத்தைக் காவு எடுக்கும் அந்த முதற்காட்சி பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது. பூவன் மதீசன் வெகு யதார்த்தமாக அந்தப் பாத்திரத்தைக் கையாண்டிருந்தார்.
தான் விரும்பிய காற்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று முனைப்பெடுக்கும் இளைஞனின் கதை. ஒரு பக்கம் அவன் காதலில் சாதிக்க முனைவது தான் அதிகம் பிரயத்தனப்படுத்தப்படுகிறது. காற்பந்திலேயே அதிக கவனம் எடுத்திருக்கலாம். இது ஈழத்தவரின் பொதுவான பிரச்சனை. எனக்கும் கூட 
கிளைக் கதைகளாக, நம்மவரின் போதைக் கலாசாரம், அவுஸ்திரேலியா பயணம் போன்ற அவல நடப்புகளையும் பின்னப்பட்டிருப்பது படத்தின் மையவோட்டத்தோடு சிறப்பாகப் பொருந்துகிறது.
இளவட்டங்களின் டியூசன் காதல் நம்மை அந்தப் பழைய உலகுக்குக் கொண்டு போனது. அந்த அளவிலேயே அவர்களின் நட்பைக் காட்சிப்படுத்தி இருந்தால் அதுவொரு அழகியல்.படம் ஆரம்பித்து இடைவேளை வரை தேவை இல்லாத ஆணிகளாக, அந்தக் காதலிக்கும் காட்சிகள், காதலியின் அண்ணனோடு மோதல் போன்றவற்றை நறுக்கி இருக்கலாம்.
ஆக மொத்தத்தில் இந்தப் படத்தில் இடைவேளைக்கு முந்திய பாகத்தில் அரை மணி நேரத்தை நறுக்க வேண்டிய இடங்களை இலகுவாக அடையாளம் காட்டலாம்.
அதுவரை என்னைப் போல மதிய நேரத் தூக்கக் கலக்கத்தில் இருந்த படத்தொகுப்பாளரின் கத்திரி திடுக்கிட்டு எழுந்து நறுக்கித் தள்ளியது போலஇடைவேளைக்குப் பின்னர் வெகு விறுவிறுப்பு. அதையே முன் பாகத்தில் செய்திருக்கலாம்.
இடைவேளைக்குப் பின் ஒரு சில யதார்த்த மீறலும் உண்டு, குறிப்பாக பலி வாங்கப்பட்ட பையனின் போன் ஐ காவல்துறை தேடமாட்டார்களா? அந்த கோல்கீப்பர் வேறு மைதானத்தை விட்டு மக்களோடு மக்களாகக் களத்தில் நிற்கிறார்.
ஈழத்து சினிமாவில் காதல் பாட்டுகளைக் கண்டால் அந்தக் காதலர்களைத் தாண்டி அலறி அடித்து ஓடவேண்டி இருக்கிறது. பாடல் இனிமை தான் ஆனால் இதெல்லாம் படத்தின் மைய நீரோட்டத்தைக் குழப்பும் பந்தாடிகள்.
நாயகன் றீகன் இப்போதுதான் க.பொ.த சாதாரண தர மாணவன் போல முகவெட்டு. அவரைப் பள்ளிப் பையனாகவே, பள்ளிகளுக்கு இடையிலான போட்டி வீரனாகவே காட்டியிருக்கலாமோ?தன் காதலியின் அவல அழைப்பைக் கேட்டதும், துடிதுடித்துப் போயிருக்க வேண்டாமோ? இசையமைப்பாளர் கவனித்துக் கொள்வார் என்று அப்படியே உறைந்த மீனாட்டம் இருக்கிறார். அல்லது அந்த நேரம் தயாரிப்பாளரான அப்பா ஷூட்டிங் பார்க்க வந்து விட்டதால் வந்த பயபக்தியோ
காதலியாக நடித்த (நிவேதிகா) பெண்ணுக்கு இந்திய சினிமாக் கனவு இல்லைப் போல, இருந்திருந்தால் இரட்டைப் படையில் நடித்திருப்பார். ஆனால் வெகு பாந்தமாகத் தன் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவு சிறப்பு ஆனால் காட்சிகளுக்குக் கையாண்ட நிறமூட்டல் (Colour grading) ஒரே சீராக இல்லை. குறிப்பாக கதாநாயகியை Close-up இல் காட்டும் போது, வெளிறிப் போய் ChatGPT சித்திரமாக இருக்கிறார்.
துணை நாயகன் அல்லது நகைச்சுவை நாயகனாக நடித்தவர் சில இடங்களில் மிதமிஞ்சியும், சில இடங்களில் அளவாகவும் பயணிக்கிறார். குறிப்பாக “எப்ப எடுப்பினம்” என்று வயதான அம்மா கேட்கும் போது இவர் “அது உன்னைப் பொறுத்தது” என்று சொல்லும் போது திரையரங்கமே வெடிச்சிரிப்பில் அதிர்ந்தது. இந்த மாதிரிச் சின்னச் சின்னப் பஞ்ச் உடன் அவரைக் கையாண்டிருக்கலாம்.
படத்தின் சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.குறிப்பாக அவலச் சாவு அடையும் பள்ளி மாணவன், போ*தையால் தன்னை அழித்த இளைஞன், போ*தைப் பொருள் விற்கும் இளைஞன், கோல் கீப்பர், பொருள் விற்கும் இளைஞனின் மனைவி என்று ஒவ்வொருத்தரும் வெகு யதார்த்தமான நடிப்பு. அதுவும் அந்த கோல் கீப்பர் தன் நண்பனின் முடிவைக் கண்டு அலறும் போது உண்மையில் மெய் சிலிர்த்துக் கண்ணீரை வரவழைத்தது.
முன் சொன்ன திரைக்கதை விஷயத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு, இந்தப் படத்தை மீண்டும் அசைபோட்டால் இயக்குநர் ராஜ் சிவராஜ் இப்படியான ஈழத்துப் பின்னணி கொண்ட படத்தைக் கையாண்ட விதத்தில் பாராட்டுக்குரியவர்.
படத்தின் நிஜ நாயகன் இசையமைப்பாளர் பூவன் மதீசன் தான்.பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி அவர் தென்னிந்திய பெரும்பாகத்துச் சினிமாவோடு போடக்கூடிய தரத்தில் அள்ளி வழங்கி இருக்கிறார்.
தேனிசைத் தென்றல் தேவா பாடி இதுவரை இறுதியாக வெளிவந்த பாடல் என்ற ரீதியில் இந்தப் படத்தில் அவர் பாடிய பாடலைத் திரையில் காணும் போது, கலகலப்பான பாடல் என்றாலும் ஒரு பக்கம் மனதைத் தைத்தது.
இன்னொரு பக்கம் கே.பி.சுந்தராம்பாள் குரல் புகழ் பாடகி கோவை கமலாவுக்கு நெகிழ்வான பாடல் ஒன்று இருக்கிறது.
இந்தப் படக்குழு தெரியாமலேயே ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.ஆரம்பத்தில் தேவா திரைப்படங்களுக்கு இசையமைத்துப் புகழ் பெற முன்னர் அவரின் ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியவர் கோவை கமலா.
கோவை கமலா ஈழத்துத் தாயகப் பாடல்களையும் வழங்கியவர்.
போராட்டம் படத்தில் தேவாவையும் பாட வைத்து, கோவை கமலாவையும் பாட வைத்தது, தேவாவுக்கான மானசீக அஞ்சலி போலவும், கோவை கமலாவுக்கான கெளரவமுமாகவும், ஆரம்ப காலத்து இசைப்பறவைகள் இருவரையும் மீண்டும் இணைத்த வகையில் உண்மையில் ஈழத்தவர் என்ற ரீதியில் எனக்கு உள்ளூரப் பெருமையாகவும் பூரிப்பாகவும் இருந்தது.
No comments:
Post a Comment