நீ ஒரு மகாராணி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 கருணாநிதியின் நெருங்கிய உறவினராகவும் , எம் ஜி ஆரின்


அபிமானத்துக்கு உரியவராகவும் விளங்கியவர் கதை வசனகர்த்தா கே. சொர்ணம். 1976ம் வருடம் இவர் படம் ஒன்றை டைரக்ட் செய்தார். அந்த படம்தான் நீ ஒரு மகாராணி. 


 கருணாநிதியின் முரசொலி பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிய சொர்ணம் ஆட வந்த தெய்வம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவுக்குள் நுழைந்தார். கருணாநிதியின் மற்றுமோர் உறவினரான கே .ஆர் . பாலன் தயாரித்த தாயின் மடியில் படம் வாயிலாக எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதத் தொடங்கியவர் எம் ஜி ஆரின் சொந்தப் படங்களான அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் , நூறாவது படமான ஒளி விளக்கு உட்பட குடியிருந்த கோயில் , என் அண்ணன் , குமரிக்கோட்டம் என்று பல படங்களுக்கு எழுதினார். 

 அசோகன் தயாரித்த நேற்று இன்று நாளை படத்தின்

வசனகர்த்தாவாக இவர் செயல் படும் போது தான் எம் ஜி ஆர் தி மு கவில் இருந்து வெளியேற்றப் பட்ட செய்தி பரவியது. அப்போது சத்யா ஸ்டுடியோவில் இருந்த சொர்ணத்தை எம் ஜி ஆர் பாதுகாப்பாக வெளியேற்றினார். நீங்கள் என்னுடன் பணியாற்றுவதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை , ஆனால் அவர் (கருணாநிதி) அதை விரும்ப மாட்டார் என்று கூறி எம் ஜி ஆர் அவரை அனுப்பி வைத்தார். அதன் பின் சொர்ணம் எம் ஜி ஆரின் படஙளுக்கு எழுதும் வாய்ப்பை இழந்தார். ஆனால் விரைவில் பட இயக்குனரானார் . 

 அன்றைய சீசனில் எம் ஜி ஆரால் கழற்றி விடப் பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவராக ஜெய்சங்கர் விளங்கினார். அதில் சொர்ணமும் சேர்ந்து கொண்டார். 

 ஜெய்சங்கர் நடிப்பில் உருவான நீ ஒரு மகாராணி படத்தில் சுஜாதா , ஸ்ரீப்ரியா இருவரும் கதாநாயகிகளாக நடித்தார்கள். எம் ஜி ஆர் படங்களுக்கு என்று ஒரு பார்முலாவை பின் பற்றி கதை வசனம் எழுதி வந்த சொர்ணம் இப்போது இயக்குனரானவுடன் அப் பாணியில் இருந்து சற்று விலகி மாறுபட்ட படங்களை இயக்கத் தொடங்கினார்.

 கொடியவன் ஶ்ரீகாந்த் தன் அக்காவை கொலை செய்ததை பார்த்த

கமலா அதனை பொலிஸாரிட கூறி அவனுக்கு சிறைத் தண்டனை பெற்று கொடுக்கிறாள். சிறையில் இருந்து மீளும் அவன் தான் திருந்தி விட்டதாக கூறி நடித்து கமலாவை ஒரு விபசார விடுதியில் சேர்த்து விடுகிறான். இதனிடையில் தனக்கு காதலியாக நடிக்க ஒரு பெண்ணைத் தேடி விபசார விடுதிக்கு வரும் சங்கர் கமலாவை சம்மதிக்க வைத்து அவளை அழைத்து சென்று மரணப் படுக்கையில் இருக்கும் தன் தந்தையிடம் இவள்தான் என் காதலி என்று அறிமுகப் படுத்துகிறான். அவரோ அவசர கதியில் அவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்து விடுகிறார். கமலாவின் குடும்பப் பாங்கான செயல்பாடுகள் அவரை கவருகிறது. இந்த சூழலில் கமலா வாழ்வில் ஸ்ரீகாந்த் மீண்டும் குறுக்கிடுகிறான்.அதே சமயம் சங்கரின் பழைய காதலியும் திடீர் என வந்து சேர்கிறாள். கமலா எவ்வாறு இப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறாள் என்பதே மீதி கதை! 

 பாலசந்தர் அரங்கேற்றம் படத்தில் நாயகியை விபசார விடுதியில் தள்ளியதைத் தொடர்ந்து பல படங்களில் இந்த பார்முலாவை பின் பற்றத் தொடங்கினார்கள். இதிலும் அது தொடர்ந்தது. ஆனால் கதாநாயகி சேதாரம் இன்றி அங்கிருந்து தப்பி விடுகிறாள். அப்பாடா . 

 படம் சுஜாதாவின் நடிப்பிலேயே தங்கியுள்ளது. அவரும் தன் நடிப்பை

குறையின்றி வழங்கி இருந்தார். அவருக்கு அடுத்து படத்தை தாங்குபவர் தேங்காய் சீனிவாசன். பல படங்களில் எஸ் .வி . ரங்காராவ் ஏற்ற மாமனார் வேடத்தை இதில் ஏற்று தன் குணச்சித்திர நடிப்பை நன்கு வெளிப்படுத்தி இருந்தார். கூடவே மனோரமாவும் சோபிக்கின்றார். ஜெய்சங்கர் , ஸ்ரீகாந்த், அசோகன் , ஸ்ரீப்ரியா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் தன் பங்குக்கு நடித்திருந்தார்கள். 

 படத்துக்கு இசை சங்கர் கணேஷ். படத்தில் ஒரு காட்சியிலும் தோன்றி இருந்தார்கள். இவர்கள் இசையில் நீ ஒரு மகாராணி, அவள் ஒரு பச்சை குழந்தை, பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் பாடல்கள் எடுபட்டன. 

 

படத்தின் கதையை டி. கே. தர்மராஜ் எழுதினார். டி . ராஜகோபால் படத்தை ஒளிப்பதிவு செய்தார். தன்னுடைய வசனங்கள் மூலம் சில காட்சிகளில் சொர்ணம் ரசிகர்களை கவர்ந்தார். ஏற்கனவே தங்கத்தில் வைரம் , டாக்டரம்மா , படங்களை இயக்கிய சொர்ணம் இந்தப் படத்தையும் நேர்த்தியாக இயக்கியிருந்தார். ஆனாலும் படத்தின் முடிவில் சமரசம் செய்து கொண்டார்.வசனகர்தாவாக வெற்றி பெற்ற சொர்ணத்தால் தொடர்ந்து வெற்றி இயக்குனராக பயணிக்க முடியவில்லை! 

 என்றாலும் தமிழக முதல்வர்களான கருணாநிதியுடன் முரசொலியில்

பணியாற்றி , பின்னர் எம் ஜி ஆர், ஜெயலலிதாவுடன் திரையில் செயல்பட்டு , அதன் பின் மு க ஸ்டாலின் நடித்த ஒரே இரத்தம் படத்தை இயக்கியதன் மூலம் நான்கு முதல்வர்களுடன் பணிபுரிந்த பெருமையை சொர்ணம் பெற்றுக் கொண்டார்.

No comments: