பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வைத்தியசாலையில் அனுமதி
மீண்டும் பிரித்தானியா திரும்புகின்றனர் இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி
கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிர்மாய்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வைத்தியசாலையில் அனுமதி
Published By: Digital Desk 3
21 Aug, 2026 | 11:04 AM
உடல்நலக் குறைவினால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான இம்ரான் கான் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவின் பேரிலேயே அதியுயர் பாதுகாப்பு நிறைந்த 'அடியாலா' சிறைச்சாலையில் இருந்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் சிறைச்சாலையில் இருக்கும் இம்ரான் கானுக்குப் பார்வைத் திறன் குறைபாடு உட்படப் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உள்ளதாகவும், சிறைச்சாலையில் அவருக்கு முறையான மருத்துவ உதவி கிடைக்கவில்லை எனவும் அவரது சட்டதரணிகள் குற்றம் சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக அவரது வலது கண்ணில் 15 சதவீதம் மாத்திரமே பார்வைத் திறன் எஞ்சியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கைதியின் உயிர், சுகாதாரம் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பது அரசியலமைப்பு கடமையாகும் எனக் குறிப்பிட்ட அந்நாட்டு உயர் நீதிமன்றம், 48 மணித்தியாலங்களுக்குள் அவருக்கு விசேட கண் வைத்தியர்கன் அடங்கிய நிபுணர் குழு மூலம் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
பல மாதங்களாகக் குடும்பத்தினரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்ரான் கான் தனது குடும்பத்தினரைச் சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையேற்று அவரது சகோதரி அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஷிபா வைத்தியசாலையைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொலிஸார் சீல் வைத்துள்ளனர். கவச வாகனங்கள் மற்றும் பொலிஸ் ரோந்து வாகனங்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் வைத்தியசாலைக்கு முன்பாகச் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தவோ அல்லது தொண்டர்கள் அங்கு திரளவோ கூடாது என நீதிமன்றம் கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.
2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராகப் பதவி வகித்த 73 வயதுடைய இம்ரான் கான் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு, 2023 ஆகஸ்ட் முதல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மீண்டும் பிரித்தானியா திரும்புகின்றனர் இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி
20 Aug, 2026 | 02:26 PM
பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி மீண்டும் பிரித்தானியாவுக்கு இடம்பெயரத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய நாளிதழான 'தி டெலிகிராஃப்' வெளியிட்ட தகவலின்படி, இளவரசர் ஹாரியும் மேகனும் இம்மாத பிற்பகுதியில் அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கு வெளியே உள்ள ஒரு தனியார் இல்லத்துக்கு இடம்பெயரத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், எதிர்வரும் கல்வித் தவணைக்காக தங்களது குழந்தைகளான ஆர்ச்சி (வயது 7) மற்றும் லிலிபெட் (வயது 5) ஆகியோரை பிரித்தானியப் பாடசாலைகளில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெயர்வது தொடர்பான திட்டம் குறித்து மன்னர் சார்லஸுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையே (16) முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை மாதம் இந்தத் தம்பதியினர் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட குடும்ப விஜயத்தின்போது இது குறித்து பேசப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், அரச குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் அடிக்கடி சந்திப்பதற்கான வாய்ப்பை மன்னர் சார்லஸ் வரவேற்பதாக கூறப்படுகிறது.
அத்துடன், ஹாரி - மேகன் தம்பதி அரச குடும்பத்தில் பணியாற்றும் உறுப்பினர்களாக அல்லாமல், தனிப்பட்ட நபர்களாகவே தொடர்வார்கள் என்றும் அவர்களின் பொறுப்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் மன்னர் சார்ல்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது கலிபோர்னியாவில் வசித்து வரும் இந்தத் தம்பதியினர், அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு 2020ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி வட அமெரிக்காவுக்குச் சென்றனர். அதன் பிறகு அரச குடும்பத்துடன் இவர்களுக்கு இடையே பகிரங்கக் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பத்திரிகையாளர்களின் தேவையற்ற தலையீடு, பிரித்தானிய நிறுவனங்களில் நிலவும் இனவெறி, இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இடையிலான சிக்கலான உறவுகள் ஆகியவையே தங்களது வெளியேற்றத்துக்கு முக்கியக் காரணங்கள் என ஹாரியும் மேகனும் முன்னதாக குறிப்பிட்டிருந்தனர்.
அரச வாழ்க்கையிலிருந்து விலகிய போதிலும், 2022இல் தனது பாட்டியான ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு மற்றும் அதற்கடுத்த ஆண்டில் தனது தந்தை மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்காக ஹாரி பல முறை பிரித்தானியாவுக்குச் சென்று வந்துள்ளார். நன்றி வீரகேசரி
கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிர்மாய்ப்பு
18 Aug, 2026 | 01:24 PM
பிலிப்பைன்ஸில் பாடசாலையொன்றில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு, பின்னர், தாக்குதல் நடத்திய மாணவர், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தாக்குதல் நடத்திய மாணவர், தான் தாக்குவதை நேரலையாக காட்சிப்படுத்துவதற்காக ஒரு கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் ஜம்போவாங்கா நகரில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவர் இரண்டு துப்பாக்கிகளை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அவ்வேளை முதலில் அந்த மாணவர், எதிரே வந்த ஆசிரியரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். அடுத்து, சக மாணவர் ஒருவரை நோக்கியும் சுட, அந்த மாணவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலில் மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment