கவிமணி தமிழைக் கனிரசம் ஆக்கினார் ! 


 













மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 





படிக்கும் பாங்கில் எடுத்துச் சொற்களை
பாட்டாய் ஆக்கிடும் தமிழ்மணி கவிமணி
எழுத்தும் பொருளும் இயல்பாய் இணைய
இனிய கவிதைகள் தருவார்  கவிமணி

வித்துவம் காட்டா வித்தகர் கவிமணி
சத்தியம் நேர்மை மிக்கவர் கவிமணி
உழைப்பை உயர்வாய் நினைப்பவர் கவிமணி
உளத்தில் இறையை இருத்தினார் கவிமணி 

குழந்தைக் கவிதைகள் கொஞ்சிக் கொடுப்பார்
படித்தவர் குழந்தையாய் ஆகியே மகிழ்வார்
அமுதாய் தேனாய் கவிதைகள் இனிக்கும்
அன்னைத் தமிழும் அணைத்தே நெகிழும்

தத்துவக் கருத்துகள் சமயக் கருத்துகள்
வித்துவ நிலையில்  விளம்பிட மாட்டார்
கற்பவர் கருத்தினில் பதிந்திடும் வண்ணம்
கவிமணி கனிவாய் கவிதைகள் தருவார்

அகமும் முகமும் அன்பே இருக்கும்
எளிமை இனிமை நிறைந்தே இருக்கும்
பக்தியின் வழியில் பயணப் படுவார்
பசுந்தமிழ் பாவலர் கவிமணி ஆவார் 

சமத்துவம் கவிமணி தனித்துவம் ஆகும்
உள்ள உயர்வே உன்னதம் என்பார்
நல்லதன் நிறைவே  செல்வம் என்பார்
சொல்வதைச் சுவையாய் சொல்வார் கவிமணி

மலரும் மாலையும் மனமமர் இலக்கியம்
ஆசிய ஜோதி அருந்தமிழ் பொக்கிஷம்
மணி மணியாகத்  தமிழ்பதம்  எடுத்து 
கவிமணி தந்தார் கவிதை  மாலையாய் 

பாட்டுக் கொரு புலவன் பாரதியடாயெனத் 
துணிவுடன் சொன்னவர் கவிமணி ஆவார் 
பாரதி தமிழை  இனிக்குது என்றான்
கவிமணி  தமிழைக்  கனிரசம்  ஆக்கினார்  ! 





No comments: