ஓ மஞ்சு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழில் வித்தியாசமான கதையமைப்பை கொண்ட படங்களை


எடுத்து வந்த ஸ்ரீதர் , இடையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எம் ஜி ஆரின் உரிமைக் குரல் மூலம் சரி செய்து விட்டு மீண்டும் மாறுபட்ட படங்களை டைரக்ட் பண்ணத் தொடங்கினார். அந்த வரிசையில் 1976ம் வருடம் அவர் எடுத்த படம் ஓ மஞ்சு. 



படத்தின் பெயர் ஓ மஞ்சு என்றவுடன் கதாநாயகி மஞ்சுளா என்றோ , லதா என்றோ எண்ணி விடக் கூடாது. இளம் நடிகையாக புதுமுகம் கவிதா இப் படத்தின் நாயகியாக அறிமுகமானார். கதாநாயகனாக நடித்தவர் புது முகம் அல்ல. கமல்ஹாசன் போல் பல படங்களில் சிறுவனாக நடித்து வாலிபனான மாஸ்டர் சேகர் படத்தின் நாயகனாக நடித்தார். இருவருமே இளசுகள், இளமை ஊஞ்சலாடுபவர்கள் . இவர்களை போட்டு கலரில் படத்தை இயக்கினார் ஸ்ரீதர். 


ஹிந்தியில் நட்சத்திர நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ,

டைரக்டராகவும் விளங்கியவர் ராஜ்கபூர். இவர் உருவாக்கிய ஆவாரா, திஷ் தேய்ஷ் மே கங்கா பட்டி ஹே , சங்கம் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தன. ஆனாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் அவர் எடுத்த மேரே நாம் ஜோக்கர் படம் தோல்வி கண்டு ராஜ்கபூரை மீளாக் கடனில் தள்ளியது. அதில் இருந்து மீள அவர் டீன் ஏஜ் கதை ஒன்றை படமாக்க தீர்மானித்தார். தன்னுடைய நடிப்பை மூட்டைக் கட்டி வைத்து விட்டு தன் மகன் ரிஷிகபூரை இளம் ஹீரோவாக அறிமுகப் படுத்தினார். நாயகியாக டிம்பிள் கபாடியா அறிமுகமானார். இளமை, அழகு, சிருங்காரம்,செக்ஸ், பாடல்கள், இசை என்று எல்லாம் கலந்த படமாக பாபி வெளிவந்து அகில இந்தியாவிலும் தூள் கிளப்பியது. 


ஏற்கனவே ஹிந்தியில் தர்த்தி, தமிழில் அவளுக்கென்றொரு மனம், அலைகள் , வைர நெஞ்சம் என்று தொடர் தோல்வியால் அதிர்ந்து போயிருந்த ஸ்ரீதர் ஹிந்தியில் ராஜ்கபூர் கையாண்ட அதே பாபி பார்முலாவை பின் பற்றி ஓ மஞ்சு படத்தை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கினார். 

 மஞ்சு, மாது இருவரும் பள்ளிக்கூட மாணவர்கள். மஞ்சு

தொழிலதிபரின் மகள். தாயில்லாத அவளை சுதந்திரமாக தந்தை வளர்க்கிறார். அவளை பராமரிக்க ஒரு பெண்ணையும் பணிக்கு அமர்த்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அப் பெண்ணுடன் தந்தைக்கு உறவு இருப்பதை மஞ்சு உணர்ந்து கொள்கிறாள். இது அவள் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறது. மாது ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கல்வியே கண் என முனைப்புடன் கற்கும் மாணவன். அவன் மனதிலும் சபலத்தையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தி விடுகிறாள் மஞ்சு. நீ ஓர் ஆண்மகன் என்று கூறி கூறி அவனை தன் இஷ்டத்துக்கு திருப்பி விடுகிறாள் அவள். ஒரு நாள் வீட்டுக்கு சொல்லிக் கொள்ளாமல் இருவரும் பிக்னிக் கிளம்பி விடுகிறார்கள் . 

 பதின்னெட்டு வயதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் ஏற்படும்

ஈர்ப்பு, பருவகிளர்ச்சி , மயக்கம் இவற்றை கருவாகக் கொண்டு படத்தின் கதையை ஸ்ரீதர் அமைத்திருந்தார். கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவனை சக மாணவி எவ்வாறு திசை திருப்பி விட முடியும் என்பதை படத்தில் சொல்லி இருந்தார் ஸ்ரீதர். மஞ்சுவுக்கு மது மேல் காதல் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் அவன் அவளின் விசுவாசியாக கடைசி வரை இருந்து அவளை ஆராதிக்கிறான். விடலை பருவத்தில் ஏற்படும் காதல் விபரீதமாகலாம் என்பதையும் ஸ்ரீதர் உணர்த்தி இருந்தார். மஞ்சுவும் , மதுவும் பஸ்ஸில் ஊட்டிக்கு போகிறார்கள். மண்டபம் ஒன்றில் தனியாகத் தங்குகிறார்கள், நீர்வீழ்ச்சியில் குளிக்கிறார்கள். மஞ்சுவுக்காக மது மூட்டை தூக்கி சம்பாதிக்கிறான், தெருவிலும் சண்டை போடுகிறான் , உணவின்றி தவிக்கிறான் , பார்க்க பரிதாபம் தான் வருகிறது. 



பாபி படத்தில் நாயகனும், நாயகியும் தீவிரமாக காதலிக்கிறார்கள். காஷ்மீருக்கு போய் பொழுதை கழிக்கிறார்கள். அனால் ராஜ்கபூர் கவர்ச்சியை படத்தில் தாராளமாக தூவியிருந்தார். ஸ்ரீதரோ அதனை தவிர்த்து விட்டார்.ஹிந்தி படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் தான். 


இப் படத்தின் ஹீரோயினாக கவிதா அறிமுகமானார். பணக்கார பெண்ணின் குணாம்சங்களை ஓரளவு வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகனாக சேகர் நடித்தார். பலம் பெரும் ஒளிப்பதிவாளரான விஜயம் அவர்களின் மகனான இவர் எம் ஜி ஆர் படங்களான என் அண்ணன் , குடியிருந்த கோயில் ஆகியவற்றில் சின்ன எம் ஜி ஆராக மாஸ்டர் சேகர் என்ற பேரில் நடித்தவர் . பின்னர் மணிப்பயல் , தம்பித்துரை படங்களில் ஹீரோவாக நடித்து விட்டு இதில் ரொமான்ஸ் ஹீரோவாக நடித்தார். திருப்பு முனையாக அமைந்திருக்க வேண்டிய படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. சில காலம் கழித்து கவரிமான் படத்தில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் கமல்ஹாசன் போல் இவரால் எனோ உயர முடியவில்லை. சில காலம் கழித்து தான் கட்டும் வீட்டின் கட்டிட வேலையை பார்க்க மாடி ஏறி சென்றவர் நிலை தடுமாறி உயரத்தில் இருந்து கீழே விழுந்து துரதிஷ்ட வசமாக காலமானார். 

 கவிதா பின்னர் சில படங்களில் நடித்தார். இப் படத்தில் இவர்களுடன்

எம் .என் .ராஜம், தேங்காய் சீனிவாசன், வி .எஸ் .ராகவன், ஏ .ஆர் .சீனிவாசன், மாலி, ஜூனியர் பாலையா, ஐசரி வேலன், டை பிஸ்ட் கோபு, விஜயசந்திரிக்கா ஆகியோரும் நடித்தனர். காமெடி நடிகர்கள் பலர் இருந்தும் சிரிப்பு லிமிட்டாகத்தான் இருந்தது. 

 பாடல்களை கண்ணதாசன், வாலி இருவரும் எழுத எம் எஸ் வி இசையமைத்தார். சபலம் சலனம் மயக்கம் எல்லாம் பரம்பரை பழக்கம், உலகம் ஒரு கவிதை பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுக் கொண்டது. 

 படத்தை ஸ்ரீதர் யூனிட்டிற்கு சம்பந்தமில்லாத லஷ்மண் கோரே ஒளிப்பதிவு செய்தார். கலரில் வெளிப்புற காட்சிகளை ரசிக்கும் படி எடுத்திருந்தார். 

 எதை படமாக்கினால் ரசிகர்களை கவரலாம் என்ற சலனத்தில் ஸ்ரீதர் படத்தை இயக்கியிருந்தார் . ஆனால் ஹிந்தியில் ராஜ்கபூர் இளம் ஜோடிகளை நடிக்க வைத்து எடுத்த கவர்ச்சி காட்சிகளை தமிழில் ஸ்ரீதர் எடுக்கவில்லை. ஒரு எல்லைக்குள்ளேயே படமாகியிருந்தார். இதனால் படம் ரசிகர்களை சரியான விதத்தில் கவரவில்லை. 

 இந்த படத்தில் ஸ்ரீதரின் உதவி டைரக்டராக சந்தான பாரதி பணியாற்றினார். ஐந்து ஆண்டுகள் கழித்து இதே போன்ற டீன் ஏஜ் கதையை பாரதியுடன் சேர்ந்து இயக்கினார். இவர்களின் பன்னீர் புஷ்பங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டது. 


No comments: