உலகச் செய்திகள்

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது - ராகுல் காந்தி கைது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் கருத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - பிரித்தானியப் பிரதமர் அண்டி பர்ன்ஹாம் தொலைபேசியில் உரையாடல்

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன்-ஹுய்



தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது - ராகுல் காந்தி கைது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் கருத்து



நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் புது டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்குபற்றிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை பொலிஸார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதற்கு தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ராகுல் காந்தி கைது விவகாரத்தில் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் 'தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது' என கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது....

''தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!

டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அஹிம்சை போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தியை டெல்லி காவல்துறை இழுத்துச் சென்று கைவிலங்கிட்டு கைது செய்தது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு அமுல்படுத்தப்பட்ட தருணத்திலிருந்து அதன் நம்பகத் தன்மை குறைந்து வருவது மட்டுமல்லாமல் மாணவர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். அவர்களின் எதிர்கால கனவுகள் ஒரு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளன.

நீட் தேர்வினால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே நீட் தேர்வை மத்திய அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்'' என தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 





அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - பிரித்தானியப் பிரதமர் அண்டி பர்ன்ஹாம் தொலைபேசியில் உரையாடல்

Published By: Digital Desk 3

21 Jul, 2026 | 10:32 AM


பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள அண்டி பர்ன்ஹாம் உடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை ( 20) தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடல் "மிகவும் நன்றாக அமைந்தது" எனவும், "விரைவில் இருவரும் நேரில் சந்திக்கவுள்ளதாகவும்" ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"புதிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம் உடன் வடகடல் எண்ணெய் வளங்கள், வர்த்தகம், இராணுவக் கூட்டணி, ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கடற்படைக் கண்ணிவெடிகளை அகற்றுதல் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் உரையாடினேன். உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் சிறப்பாகவும் அமைந்தது.

அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரினால் அடைக்கப்பட்டுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' கடல் வழியை பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்குப் பிரித்தானியா முழு ஆதரவு அளிக்கும் எனப் பிரதமர் பர்ன்ஹாம் உறுதியளித்துள்ளார்.

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் விவாதிக்க இரு தலைவர்களும் விரைவில் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

பர்ன்ஹாம் பிரதமராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இரு தலைவர்களும் பேசியிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 





ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன்-ஹுய்

Published By: Digital Desk 3

20 Jul, 2026 | 12:49 PM

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லாவ்ரோவின் விசேட அழைப்பை ஏற்று, வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன்-ஹுய் உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளதாக வடகொரியாவின் கொரிய மத்திய செய்தி சேவை தெரிவித்துள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையிலான எதிர்வரும் உச்சிமாநாட்டுக்கான முன்னேற்பாடுகளை ஒருங்கிணைப்பதே இந்த உயர்மட்ட விஜயத்தின் பிரதான நோக்கமாக இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சோ சோன்-ஹுய் சனிக்கிழமை பியோங்யாங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டதாகவும், வடகொரியாவிற்கான ரஷ்யத் தூதரக அதிகாரிகள் மற்றும் வடகொரிய பிரதி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோர் அவரை வழியனுப்பி வைத்ததாகவும் கொரிய மத்திய செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் சோ சோன்-ஹுய் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்காக வடகொரியாவிற்கு புட்டின் நன்றி தெரிவித்துள்ளதாக ரஷ்ய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024 ஜூன் மாதம் பியோங்யாங்கில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது, கிம் ஜாங்-உன்னை ரஷ்யாவுக்கு வருமாறு புட்டின் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள கிம் ஜாங்-உன்னின் ரஷ்ய விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே சோ சோன்-ஹுய்யின் பயணத்தின் முக்கிய இலக்காகக் கருதப்படுகிறது.

அதேவேளை, அண்மையில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் கிம் ஜாங்-உன் நடத்திய உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, சீனா–வடகொரியா உறவுகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.

சீனாவுடனான நல்லுறவு, ரஷ்யாவுடனான விரிவான மூலோபாய கூட்டாண்மையை பாதிக்காது என்பதை மொஸ்கோவிற்கு உறுதிப்படுத்துவதும் இந்த விஜயத்தின் மற்றொரு நோக்கமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியா–அமெரிக்கா–ஜப்பான் கூட்டணிக்கு மாற்றாக, வடகொரியா–சீனா–ரஷ்யா மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த விஜயம் பார்க்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 



No comments: