காடும் கடலும் (THE JUNGLE AND THE SEA) அரங்க அனுபவம் - கானா பிரபா

 “உங்கள் சமூகம் பட்ட துன்பத்தை ஒரு நாடகமாகப் பார்க்கவே


கஷ்டமாக இருக்கிறது”

எனக்குப் பக்கத்தில் இருந்து இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஆஸி வெள்ளையின மூதாட்டி, முடிவில் என்னிடம் இப்படிச் சொன்னார்.

காடும் கடலும் (THE JUNGLE AND THE SEA)
என்ற நாடகம் 2022 இல் அரங்கேற்ற போதும் பார்த்தேன். தற்போது மீளவும் அரங்கேற்றியுள்ளார்கள். இன்று மீண்டும் பார்க்கச் சென்ற போது கிடைத்த அனுபவத்தைத் தான் முற் பந்தியில் பகிர்ந்தேன்.
 1995 ஆம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) ஆலயத்தின் மீது இலங்கை விமானப்படை நிகழ்த்திய அநர்த்தத்தைத் தொடர்ந்து,  2009 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டதாகக் கொள்ளப்படும் முள்ளிவாய்க்கால் வரையான கால அளவைக் கொண்டு “காடும் கடலும்” அமைந்திருக்கிறது.

மங்கல் இருள் சூழ்ந்த அரங்கில் தட்டுத்தடுமாறி வரும் கண்

கட்டப்பட்ட அந்தத் தாய்க்குச் செய்தி ஒன்று வருகிறது.
அப்படியே காட்சி கடந்த காலத்துக்குத் தாவுகிறது.
எந்தவிதமான கவலைகளுமற்ற, ரியூசன் படிப்பும், கிறிக்கெட்டும், சினேகதரோடும், சகோதரங்களோடும் கொட்டமடித்து வாழும் அந்த அழகியலைக் காட்டும் ஆரம்பத்தைக் கண் முன்னே ஒரு ஓட்டமாகக் காட்டிய போது சிலிர்த்துக் கண் கலங்குமளவுக்கு நெகிழ வைத்து விட்டது.
முன்னால் இருந்த அந்த அரங்கின் வட்டம் சுழலாகப் போய்க் கொண்டிருக்க, நடிகர்கள் நடந்தும், ஓடியும் உரையாடலையும், காட்சித் தளங்களையும் கடத்தும் புதுமையானதொரு அனுபவம்.

தன் மகனைத் தேடும் “கெளரி” என்ற தாயாக புகழ் பூத்த நடனக் கலைஞர் ஆனந்தவல்லி, Emma Harvie, Jacob Rajan, Rajan Velu, Biman Wimalaratne இவர்களோடு
Counting & Cracking இல் நடித்த வகையில் சிட்னி அரங்குக்கு அறிமுகமான
Prakash Belawadi மற்றும், Nadie Kammallaweer இவர்களோடு காளீஸ்வரி என்ற பண்பட்ட நடிகையும் சேர்ந்து பாத்திரப் படைப்புகளாக இயங்குகிறார்கள். ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் நடிக்கவும் செய்கிறார்கள். ஆனால் எல்லோரிடமும் காணும் பொதுவானதொரு அம்சம் “நேர்த்தியான நடிப்பு”.  அந்தந்தப் பாத்திரப் படைப்புகளாகவே இயங்கி நிற்கின்றார்கள்.


மகாபாரதத்தின் காந்தாரி போலத் தன் மகனைக் காணாத உலகத்தை நான் காணப்போவதில்லை என்று கண் கட்டி நிற்கும் தாய்ப் பாத்திரமாக ஆனந்தவல்லி தன் மகனின் இயக்கத்தில் நடித்திருக்கிறார்.
காட்சிகள் மாறும் போது அவற்றைப் பிரதிபலிக்கும் பொருட்களை அவர்களே காவித் திரிந்தும், நகர்த்தியும் அந்தக் கதையோட்டத்தைத் தொய்வற்றுப் பயணிக்கவும் ஏதுவாகின்றார்கள்.
இலங்கை இனப்பிரச்சனையை மையப்படுத்திய ஒரு படைப்பில் அந்தச் சூழலின் பின்னணி இல்லாதவர்களும், படைப்புக்கு உயிர்கொடுத்து அச்சொட்டாகக் காட்ட முடியும் என்பதை இவர்களின் நடிப்பு யதார்த்தமாகப் பிரதிபலித்தது.

அளவான இசையமைப்பும், பாவேந்தர் பாரதிதாசனின் துன்பம்

நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?” பாடலைப் பயன்படுத்தியதும் வெகு சிறப்பு.
ஈழத்தின் கதைப் பின்புலத்தையும், இடங்களையும் இலகுவாகவும், எளிமையாகவும் மாற்றுச் சமூகத்திடம் காட்டிய விதமும் இந்தப் படைப்புக்கான உழைப்பையும், நுணுக்கத்தையும் காட்டுகின்றது.

“காடும் கடலும்” நாடகம் குறித்த விமர்சனப் பார்வையையும் இங்கே பதிவு செய்ய வேண்டியது மிக அவசியமானது.
இலங்கை இனப்பிரச்சனையின் ஒவ்வொரு காலப்பகுதி வரலாற்றுக்கும் இரு முகங்கள் உண்டு, மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு படைப்பாளி தன்னை நடுநிலையானவராகக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையை அப்பட்டமாகக் காட்டி விட்டாரோ என்பது போல ஒவ்வொன்றுக்கும் சமனும் எதிருமான பார்வையை முன்வைத்திருப்பது ஒரு கட்டத்தில் இந்தப் படைப்பினை இனங்களுக்கான சமரச முயற்சியின் பிரச்சாரமோ என்பது போன்ற ஐயப்பட்டை எழுப்பி நிற்கின்றது.
இம்முறை மீள் அரங்கேற்றப் போது முடிவில் சில மாற்றங்களோடு ஏற்றுக் கொள்ளத்தக்க வெகு ஜனப் பார்வையாக இருக்கிறது.


சிட்னியில் மகளுக்கும், தந்தைக்குமிடையிலான சந்திப்பில் “நேர் பாலீர்ப்பு (lesbian) குறித்த உரையாடல் அரங்கத்தில் சிரிப்பைத் தூவினாலும் இந்தக் காட்சியை அப்படியே கடாசி விட்டாலும் பாதகமில்லை என்பது போன்ற பொருத்தமற்றதாகவே பட்டது.
அவுஸ்திரேலியாவுக்குத் தன் தந்தையோடு புலம் பெயரும் லஷ்மியும், 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மார்ட்டின் ப்ளேஸ் இல் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்வதாகவும், சிட்னியில் ஒரு செயற்பாட்டாளராகக் காட்டிக் கொள்வதும் கூட

அதுபோல சிட்னியில் தன் முஸ்லீம் நண்பரிடம் மன்னிப்புக் கேட்கும் சமரசப் பேச்சும் முன் சொன்ன அந்த இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டுப் பிரச்சார நெடியாக அமைந்து விட்டது. இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ, பெளத்த மதங்களை வலிந்திழுத்து ஒற்றுமையாக்கும் செயற்பாடாகத் தான் இந்தப் படைப்பு அமைய வேண்டுமா?

தன் தம்பிக்கு இறுதி மரியாதை செய்யத் துடிக்கும் சகோதரியின் வாதங்களும், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட உரையாடல்களுமாக இருப்பது நம் பிரச்சனையை இன்னோர் சமூகத்துக்குக் காட்டும் தொனியில் தெளிவாக இருக்கிறது.

இறுதியில் ஒரு பாரிய இனச்சுத்திகரிப்பு நடந்திருக்கிறது இதற்கு

என்ன மாதியானதொரு பொறுப்புக்கூறலை இலங்கை அரசு செய்ய வேண்டும் போன்ற தர்க்க ரீதியான கோணத்தில் முடிவை நோக்கிப் பயணிக்கிறது.
“காடும் கடலும்”  நாடகப் படைப்பு உண்மையில் இலங்கை இனப்பிரச்சனையை மையப்படுத்தி, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பதிவுகளை விசாலமாகக் காட்டிய வகையிலும் சிட்னியில் இருப்பவர்கள் சென்று காண வேண்டியதும், இது குறித்த பரவலான பார்வைகளையும் கொடுப்பது மிக அவசியம்.
இரண்டு வாரங்களாக ஒவ்வொரு நாளும் அரங்கேறும் இன்றைய நிகழ்வும் அரங்கம் நிறைந்து விட்டது.
என்னோடு நான்கைந்து பேர் தவிர மீதி அனைவரும் வெள்ளை இனத்தவர்.
அடுத்தடுத்த நாட்களுக்கும் நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகி விட்டன.

அந்த வகையில் இந்த நாடகத்தின் கதாசிரியர் சக்திதரன் மற்றும் குழுவினருக்குப் பெரு வெற்றியே.

கானா பிரபா

No comments: