இலங்கைச் செய்திகள்

 அமெரிக்கா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதி

பிரேசில் வெளியுறவு அமைச்சருடன் அமைச்சர் விஜித்த சந்திப்பு : விவசாயம், கரும்புத் தொழில் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணக்கம்

சிந்துபாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை - சட்டத்தரணி வி.எஸ் நிறைஞ்சன்



அமெரிக்கா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதி

24 Jul, 2026 | 10:16 AM

( வீ.பிரியதர்சன் )

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பொறுப்புத் தூதுவர் ஜெயின் ஹோவெல் (Chargé d'Affaires) Jayne Howell, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகரவை (மேஜர் ஜெனரல் (ஓய்வு)) சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – இலங்கை இடையேயான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இருநாடுகளின் கூட்டுப் பொறுப்பும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கூட்டுப் பயிற்சிகள் (Joint Training) ஊடாக இரு நாடுகளின்


பாதுகாப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்துதல், செயற்பாட்டு ஒருங்கிணைப்பு (Interoperability) திறனை வலுப்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை, இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்காளியாகத் தொடர்கிறது என அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பாதுகாப்பான, நிலையான, வளமான இந்தியப் பெருங்கடல் என்ற பொதுவான இலக்கை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா – இலங்கை கூட்டுறவு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அந்தச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது    நன்றி வீரகேசரி 





பிரேசில் வெளியுறவு அமைச்சருடன் அமைச்சர் விஜித்த சந்திப்பு : விவசாயம், கரும்புத் தொழில் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணக்கம்

24 Jul, 2026 | 09:55 AM

( வீ.பிரியதர்சன் )

33ஆவது ஆசியான் பிராந்திய மன்றம் (ARF) மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தங்கியிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மௌரோ வியராவை ( Mauro Vieira ) ஜூலை 23ஆம் திகதி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் பிரேஸிலுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

மேலும், விவசாயம், வர்த்தகம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறிப்பாக, இலங்கையின் கரும்புத் தொழில்துறையை


நவீனமயப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப உதவிகளை வழங்க பிரேசில் முன்வந்துள்ளமைக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்தார்.

கரும்பு உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் விவசாயத் துறையின் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்காலத்திலும் நெருக்கமான ஒத்துழைப்பை தொடர இரு தரப்பினரும் உறுதியளித்தனர்.    நன்றி வீரகேசரி 




சிந்துபாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை - சட்டத்தரணி வி.எஸ் நிறைஞ்சன்

Published By: Vishnu

24 Jul, 2026 | 05:13 AM

வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் புதைப்பதில்லை என வைத்திய சாலை தரப்பினர் கூறியுள்ளனர். அதேவேளை இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை என சட்டத்தரணி வி.எஸ் நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

இது ஒரு இந்து மயானம். இதில் சட்டரீதியான புதைத்தலும் நடைபெறலாம். சிறுவர்கள் என்றால், அனுமதி எடுத்து அடக்கம் செய்யப்பட்டும்.

ஆனால் இங்கு அதிகமான என்புக்கூடுகளை  பார்க்கும்போது எங்களுக்கு இது ஒரு குற்றம் நடந்தது, அவசரமாக புதைக்கப்பட்டது என எங்கள் சாதாரண கண்களுக்குத் தெரிகின்றது. 

இது சம்பந்தமாக அறிக்கைகள் வந்த பிற்பாடுதான். அது தொடர்பில் மேலதிகமாக சொல்லக்கூடியதாக இருக்கும்.

இங்கு மீட்கப்பட்ட சில மனித என்புகள் சட்டரீதியாக புதைக்கப்பட்டதற்கான ஆடைகளோடு, சவப்பெட்டிகளோடு காணப்பட்டது. சில இடங்களில் உடற்கூற்று பரிசோதனை சான்றுகளும் காணப்பட்டன.ஆனால் அவைகள் இங்கு புதைக்கப்பட்டதற்கு இந்த  இந்து மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை.

அதேநேரம் வைத்தியசாலையை அணுகிய போது, அவர்களும் இந்த இந்து மயானத்தில் சடலங்களை புதைக்க வில்லை என்றும், தாங்கள் கோம்பயன்மணல் மயானத்தையே பயன்படுத்துவதாகவும்  கூறியுள்ளார்கள். 

எனவே செம்மணி புதைகுழி தொடர்பில் முழுமையான அறிக்கைகள் வந்த பின்னரே , தெளிவாக கூற முடியும் என தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 





No comments: