சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேச வைப்பதுமே ஒரு
படைப்பிலக்கியவாதியின் பிரதான கடமை. இக்கடமையை
தனது ஆசிரியப்பணியின் ஊடாகவும், கலை, இலக்கிய
செயற்பாடுகளின் மூலமும் மேற்கொண்டு வருபவர் சகோதரி திருமதி ராணி சீதரன் அவர்கள்.
இவர் பல்கலைக்கழகத்தில் பயின்ற
காலத்தில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சண்முகதாஸ் முதலானவர்களின் அபிமானத்திற்குரிய மாணவியாகத் திகழ்ந்தவர்.
அவர்களும் எமது சமூகத்தில் கல்வி மற்றும் கலை, இலக்கியத்துறையில்
ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் நிழலில்
வளர்ந்திருக்கும் ராணி சீதரன், தன்னையும்
இந்தத்துறையில் ஆளுமையாக்கிக்கொண்டிருக்கிறார்.
தான் கற்றதையும் பெற்றதையும் தனது சமூகத்திற்கு
உரியமுறையில் வழங்குவதற்கு இவர்
தேர்ந்தெடுத்த துறைகள்தான் கல்வியும், கலை, இலக்கியமும்..
ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக ,
தேசிய கல்வி
நிறுவகத்தின் தமிழ்த்துறையில் சிரேஸ்ட விரிவுரையாளராக தன்னை வளர்த்துக்கொண்டவர்.
சிறுகதை, கவிதை, கட்டுரை,
விமர்சனம் ஆகிய துறைகளில் தொடர்ந்தும் எழுதிவருபவர். அத்துடன் கவியரங்குகளிலும் பங்குபற்றி
வருபவர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்த காலமாக 24 மணிநேரமும் ஒலிக்கும் இன்பத்தமிழ் வானொலியை நடத்திவருபவர் திரு. பாலசிங்கம்
பிரபாகரன். இந்த வானொலி சில வருடங்களுக்கு
முன்னர் சித்திரை விழாவை மு;ன்னிட்டு மெய்நிகர் ஊடாக நடத்திய பன்னாட்டுக்கவிஞர்கள்
பங்கேற்ற கவியரங்கில் ராணி சீதரனும் பங்கேற்று பாராட்டுச்சான்றிதழ் பெற்றிருந்தார்.
அந்தப்போட்டியில் இவரைத்
தேர்ந்தெடுத்தவர் தமிழகத்தின் சிறந்த கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான சினேகன்.
இந்நிகழ்வில் திரைப்பட கலைஞர் நெப்போலியனும் பங்கேற்று, ராணி சீதரனை பாராட்டியிருந்தார்.
எழுத்துலகில் வாழ்ந்தவாறு
வான் அலைகளிலும் தனது குரலை ஒலித்தவர் ராணி சீதரன்.
ஆக்க இலக்கிய எழுத்துப்பணியில்
இவர் இதுவரையில் வரவாக்கியிருக்கும் நூல்கள் வருமாறு:
சிறுகதைத் தொகுப்புகள் :
மாங்கல்யம் தந்து நீயே,
கன்னியா தானம், நடுகல், நிலவும் சுடும்.
தேன்சிட்டு ( சிறுவர் பாடல்
)