ஏரிக்கரை
பத்திரிகை ( Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன்
1932 ஆம் ஆண்டு முதல்
நாளிதழாக வெளியாகிறது. 23-05-1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ்
வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
ஆங்கில,
சிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டுவரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake
House என்ற
பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி தினகரன், வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் மற்றும் ஒரு
இந்திய ஊடகம் என்ற மாயைதான் இலங்கை வாசகர்களிடம்
உருவாகியிருந்தது.
தினகரனை இலங்கையின் தமிழ்த்
தேசியப்பத்திரிகையாக்கிய
பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே
சாரும். இவருக்கு முன்னர் கே.க.ப. நாதன் தினகரன் ஆசிரியராக பணியாற்றினார்.
பின்னாளில் இவர் கொழும்பில் தினபதி, சிந்தாமணி, வெளியிட்ட சுயாதீன
பத்திரிகை சமாஜத்தின் தந்தி மாலைத் தினசரியின் ஆசிரியரானார்.
பாரதி
ஆய்வாளராகவும் அறியப்பட்ட பேராசிரியர் க.
கைலாசபதியின் தினகரன் ஆசிரியப்பணி குறித்தும் இருவேறு கருத்தியல்கள்
இலக்கிய உலகில் நிலவியதை அறிவோம்.
"பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ்ச்சிறப்பு பட்டதாரியாக அவர் முதல் வகுப்பில்
சித்தியெய்திய பின்னர், அன்று
உயர்வாக மதிக்கப்பட்ட அரச நிர்வாகப்பதவியொன்றினைத்
தேடியிருக்கவோ அல்லது உயர் கல்வி ஆராய்ச்சித்துறையில்
இந்நாட்டிலோ வெளிநாடு சென்றோ, மேலுக்கு வந்திருக்கவோ கூடும்.
ஆனால், கைலாஸ் அவ்வாறு செய்யாது பத்திரிகையுட் புகுந்தார். அதனை வருவாய்க்கு
வழியாக அன்றி, அதன் வாய்ப்புகளை உகந்தவாறு பயன்படுத்துவதில்
கைலாஸ் குறியாயிருந்தமை தெளிவாகும்.
கைலாஸ்
பத்திரிகைத்துறையுட் புகுந்த காலம் மேலைத்தேய நாகரிகமும் ஆங்கில
மொழியும் தம் ஆதிக்கத்தை இழக்கத்தொடங்கிய காலம்.
பொருளாதார
அரசியல் துறைகளில் மட்டுமின்றிப்பண்பாட்டுத் துறையிலும் அந்நிய ஆதிக்கம்
தளரத்தொடங்கிய காலம். சிங்களம் மட்டும் அரசகரும
மொழியாக்கப்பட்டதன் விளைவாகத் தமிழ்ப்பேசும் மக்கள், இந்நாட்டில்,
தங்கள் இருப்பு, வரலாறு, வருங்காலம், தனித்துவம் முதலானவை குறித்து உத்வேகத்துடன்
உணர சிந்திக்கத்தலைப்பட்ட காலம். தமிழ்மொழி உபயோகச்சட்டம்
நிறைவேற்றப்பட்டமை, சுதேச மொழி முக்கியத்துவம் பெறத்தொடங்கியமை, புதிதாக
உருவான கலாசார அமைச்சு தமிழ்க்கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தமை, அதுவரை
ஆங்கிலப்பத்திரிகைகளே பெற்றிருந்த அரசியல் செல்வாக்கையும்
முக்கியத்துவத்தையும் பொதுமக்களைப் பரவலாகச் சென்றடைந்த சிங்கள,
தமிழ்ப்பத்திரிகைகளும் பெறத்தக்க வாய்ப்புத்தோன்றியமை, வெளிநாட்டுச்
செலாவணிக்கட்டுப்பாடு காரணமாக இந்திய எழுத்தாளர்களுக்குப்
பணம் அனுப்பும் வசதி கட்டுப்படுத்தப்பட்டமை --- இவை யாவும் கவனத்திற்
கொள்ளப்படவேண்டியவை" என்று விரிவாக கைலாசபதியின் தினகரன் பிரவேசம்
பற்றி பேராசிரியர் சி. தில்லைநாதன் பதிவுசெய்துள்ளார், ( நூல்: பன்முக ஆய்வில்
கைலாசபதி)
இந்திய எழுத்தாளர்களுக்கு பிரசுரம் களமும்
கொடுத்து அதற்காகப்பணமும்
தினகரன் வழங்கியது தவறல்ல. எழுத்தாளர்களுக்கு சன்மானம்
வழங்கத்தக்க மூலதனமும் வருவாயும் நிரம்பப்பெற்றதுதான்
லேக்ஹவுஸ் நிறுவனம்.
ஆனால், அக்காலப்பகுதியில் ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள்
புறக்கணிக்கப்பட்டதுதான் விமர்சனத்திற்குரியது.
தினகரனில்
அவ்வேளையில் கதைகள் படைத்தவர்கள் சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா
பீச்சையும் பகைப்புலமாகக்கொண்டு எழுதினார்கள். இதனால்
அன்றைய ஈழத்து தமிழ்த்தேசிய படைப்பிலக்கியம் தேக்கம்
கண்டது.
அதனை
உடைத்தெறிந்தவர்தான் கைலாசபதி. இவர் ஈழத்து எழுத்தாளர்களுக்கு
தினகரனில் களம் தந்து ஊக்கமளித்தார். பத்திரிகையின்
செல்நெறியை வகுத்தார். பாரதி தொடர்பாக ஏராளமான
ஆய்வுகள் மேற்கொண்டவர். இரு மகாகவிகள், பாரதிஇயல்
ஆய்வுகள் முதலானவற்றை எழுதியிருப்பவர்.