கனடாவிலிருந்த இலக்கிய
நண்பர்களுடனான சந்திப்புகளை குறுகிய காலத்திற்குள்
நடத்தவேண்டியிருந்தது. ஜூன் மாதம் 15 ஆம் திகதி அதிகாலையே டொரன்டோவை விட்டு புறப்படவேண்டியிருந்தமையால், சந்திப்புகளுக்கான நாளை குறிப்பதில் கவனம் செலுத்தினேன்.
கனடாவுக்கு வந்திறங்கிய
மறுநாள் என்னைப்பார்க்க இலக்கிய ஆர்வலர் மைதிலி
தனது கணவர் தயாநிதியுடன் வந்துவிட்டார்.
அவரை அன்றுதான் முதல் முதலில்
நேருக்கு நேர் சந்திக்கின்றேன். இறுதியாக வெளியான
எனது கதைத் தொகுப்பின் கதை நூல் பற்றி ஒரு மெய்நிகர் கலந்துரையாடலில் மைதிலி
சிறந்த திறனாய்வைச் செய்திருப்பவர்.
எம்மை கனடாவுக்கு அழைத்த
நண்பர் முத்துலிங்கம் ஜூன் 08 ஆம் திகதி, ஷேக்ஸ்பியரின் நாடகத்திற்கு அழைத்துச்செல்லுவதற்கான
ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்திருந்தார்.
அந்த ஷேக்ஸ்பியர் நாடக
அரங்கம் ஸ்காபரோவிலிருந்து இரண்டு மணி நேரப்பயணத் தூரத்திலிருந்தது.
நயாகரா நீர்வீழ்ச்சியை
பார்க்கச் செல்வதற்காக எனது உடன்பிறவாத தங்கை செல்வநளினி ராஜன் நாள் குறித்திருந்தார்.
நண்பர் பதிவுகள் கிரிதரன்
தனது சில நண்பர்களுடன் ஒரு உணவு விடுதியில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அத்துடன் காலம் செல்வம், நாடகக் கலைஞர் ஜயகரன் ஆகியோருடன் இணைந்து தேடகம் சார்பாக தமிழ்நாட்டிலிருந்து
வருகை தந்திருந்த எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் சாம்ராஜுக்கும் எனக்குமான சந்திப்பு
கூட்டத்தையும் ஒழுங்குசெய்திருந்தார்.