எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் 1972 ஜூலை மாதம் முதல் வாரத்தில் மல்லிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து இரண்டாவது கதையாக நான் எழுதியது அந்தப்பிறவிகள்.
இச்சிறுகதையும் நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர் சமூகத்தின் பேச்சுவழக்கிலேயே அமைந்திருந்தது. இதனை பூரணி காலாண்டிதழுக்கு அனுப்பியிருந்தேன்.
அதனை மூலப்பிரதியிலேயே படித்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழின் ஆசிரிய பீடத்திலிருந்த நண்பர் மு. கனகராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மற்றும் ஒரு சிறுகதையை எழுதி அவரிடம் கொடுத்தேன். அதன்பெயர் தரையும் தாரகையும். இச்சிறுகதையும் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியானது.
பூரணி காலாண்டிதழ். ஆகையால் அதற்கு அனுப்பியிருந்த அந்தப்பிறவிகள் சிறுகதை, அதன் இரண்டாவது இதழிலேயே வெளியானது. அம்மாதம் ( 1972 ) ஒக்டோபர் என நினைக்கின்றேன்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அமைந்திருந்த ராஜேஸ்வரி பவானுக்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். அங்கேதான் ஈழத்து இலக்கிய இதழ்களையும் தமிழக நூல்களையும் வாங்குவேன். அதனால் அதன் உரிமையாளரின் புதல்வனும் எனக்கு நன்கு அறிமுகமானவர்.
அவர் 1977 ஆம் ஆண்டில் நடந்த இனக்கலவரத்தின்போது வெள்ளவத்தையில் கொல்லப்பட்டார். அவரை 1972 முதல் நன்கு அறிவேன்.
பூரணி இதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கும் தகவலையும் அவர்தான் எனக்குச்சொன்னார். அந்த சைவ உணவகத்தில் காசாளர் மேசைக்கு முன்பாக பரப்பி வைத்திருந்த இலக்கிய இதழ்களுக்கு மத்தியில் பூரணி இரண்டாவது இதழையும் கண்டு வாங்கினேன். அதன் முகப்பு அட்டையில் பெனடிக்ற் பாலன், சட்டநாதன், கிருஷன் சந்தர் ஆகியோருட்பட நன்கு அறியப்பட்ட மேலும் சில எழுத்தாளர்களின் பெயர்களுடன் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டேன்.
















