.
அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசை
உலக யுத்தங்களில் பயன்படுத்தப்பட்ட அமோனியா, இன்று விவசாய நிலங்களின் உயிரைக்குடிக்கும் அவலம்!!
“ எங்கள் ஏரோட்டம் நின்றுபோனா… உங்க காரோட்டம் என்னவாகும்…?
“ இந்த பாடல் வரிகளை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அரைநூற்றாண்டுக்கு முன்னரே கவியரசு கண்ணதாசன் அனுபவி ராஜா அனுபவி என்ற கே. பாலச்சந்தரின் திரைப்படத்திற்காக எழுதியது.
1967 இல் இந்தப்படம் வெளியானது.
தெருவெங்கும் காரோட்டம் நிற்கவில்லை. தொடருகிறது. எரிபொருளை உறிஞ்சி கரியமிலவாயுவை உமிழ்ந்து, சூழலை மாசடையசெய்கிறது.
சமீபத்திய அவுஸ்திரேலியாவின் காட்டுத்தீயினால் எழுந்த புகைமண்டலம் அயல் நாடுகளை மட்டுமல்ல, முழுஉலகையுமே பெரிதும் பாதிக்கப்போகிறது என்ற செய்தியையும் படித்தோம்.
உழவின் திசை என்னும் நூலை எழுதியிருக்கும் எமது நண்பர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இந்த மண்ணுக்கு வருமுன்பு, சுமார் ஆறுவருடங்களின் முன்னர் அந்தப்பாடல் பிறந்துவிட்டது.
இந்தியக்கிராமங்கள் பலவற்றில் ஏரோட்டம் நின்றுவிட்ட இக்காலத்தில் முத்துக்கிருஷ்ணன், உழவின் திசை எதனை நோக்கிச்செல்கிறது என்பதை களத்தில் நின்று ஆய்வு பூர்வமாகவும், திடுக்கிடவைக்கும் புள்ளிவிபரங்களுடனும் செய்தி ஆதாரங்களுடனும் சமூக அக்கறையுடனும் இதழ்களில் பதிவுசெய்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் உழவின் திசை.












