கந்தசஷ்டிச் சிந்தனைகள் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 .

   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
     மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
      மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா



சந்ததமும் செந்தமிழால் சிந்து கவிபாட
செந்திருவே கந்தவேளே என்றுந் துணைநீயே
வந்தவினை போயகல வைத்திடுவாய் வேலா
வருகின்ற வினைகளையும் அழித்திடுவாய் வேலா 

அசுரராய் பலபேரும் ஆகுகிறார் முருகா
அறமற்ற அத்தனையும் ஆற்றுகிறார் முருகா
தருமதை மனமேற்றா வாழுகிறார் முருகா
தவறிழைப்பார் திருந்திவிட வைத்திடுவாய் முருகா

கலியுகம் உய்யவே அவதாரம் எடுத்தாய்
கருணையின் உருவாகி இருக்கிறாய் கந்தா
அழுகையும் அவலமும் அவனியில் பெருகுது
அரனார் மைந்தா அனைத்தையும் அகிற்றிவிடு 

அன்போடி மறைகிறது அரவணைப்பும் குறைகிறது
நானென்னும் அகங்காரம் தலைவிரித்து நிற்கிறது
வேலோடு வந்தவனே வேரோடு வெட்டுவிடு
வேலவனே வேண்டுகிறோம் வெளிச்சத்தைக் காட்டிவிடு ! 
                           
கனலாகி வந்தாய்  மலர்தேடி அமர்ந்தாய்
கார்த்திகைப் பெண்கள் கரஞ்சேர இணைந்தாய்
சிவனாரின் மைந்தன் ஆகியே நின்றாய்
சிறப்பான அவதாரம் எடுத்துமே வந்தாய்

தேவரைக் காத்திட அவதாரம் எடுத்தாய்
தேசமே வணங்கிடும் தெய்வமும் ஆகினாய்
கலியுகம் முழுவதும் காத்திடும் கடவுளாய்
ஆகியே இருக்கிறார் அரனாரின் மைந்தனே

வரமுடை  சூரரின் அளவிலாக் கொடுமையால்
வாடிய தேவரைக் காத்திட வந்தனை
தேவரைக் காத்தாய் தெளிவினைக் கொடுத்தாய்
மாறாத சூரரை மாற்றியே விட்டாய் 

ஆணவம் போக்கினாய் அஞ்ஞானம் நீக்கினாய்
அருளிடும் பாங்கிலே அனைத்தையும் ஆற்றினாய்
அழித்திடும் வேலினை அற்புதம் ஆக்கினாய்
ஆதலால் வேலவன் ஆகியே நிற்கிறாய்  ! 

                                                            
       காவடி என்றதும் கந்தனே தெரிகிறாய் 
       சேவடி நாடியே யாவரும் வருகிறார்
       மாவடி போற்றிட வாழ்த்தியே பாடுறார்
       மாபெரும் ஜோதியாய் வந்தவன் நீயன்றோ 



       அப்பனாம் அரனுக்கு ஆசானாய் ஆகினாய்
       தப்பிதம் செய்திட்டால் தண்டனை வழங்குவாய்
       பிரம்மனின் செருக்கினை அடக்கிய வேலவா
       பிரணவப் பொருளை விளக்கியே நின்றனை

       வேடர் குலத்து வள்ளியை அணைத்தாய்
       தேவ குலத்து தெய்வயானையை அணைத்தாய்
       தாழ்வும் உயர்வும்  சரிசமம் என்றிடும்
       தத்துவம் உணர்த்திய தனிப்பெரும் கடவுள்நீ 

      எத்தனை மொழிகள் இருந்த போதிலும்
      இன்தமிழ் மொழியை ஏற்றுமே நின்றார்
      செந்தமிழ் கடவுளாய் கந்தா தெரிகிறாய்
      உந்தனைத் தமிழால் பாடியே உவக்கிறோம் !                         

  ஒளவைக்குத் தமிழை அள்ளியே கொடுத்தாய்
  அருணகிரி வாயாலே அமுதத்தமிழ் வாங்கினாய்
  பேசாத குமரகுருபரரைப் பாடவும் வைத்தாய்
  பெருமைமிகு கச்சியப்பரால் கந்தபுராணம் கொடுத்தாய் 

  உன்பெருமை பாடிட வாரியார் வந்தார்
  உலகமெலாம் திரிந்து உளமிருத்தச் சொன்னார்
  பாலதேவராயர் பாடினார் கந்தசஷ்டி கவசம்
  பாரெல்லாம் உந்தனையே பரவுகிறார் முருகையா 

  திருப்புகழைப் பாடினால் தெரிகிறாய் முருகா
  எத்தனை சந்தங்கள் எத்தனை தத்துவம் 
  அத்தனையும் அருணகிரி உனக்காகக் கொடுத்தார்
  அகநிறைய அகமகிழ பாடுகிறார் அடியார்

  கந்தசஷ்டி பிடித்தால் கஷ்டங்கள் அகலும்
  கந்தசஷ்டி பிடித்தால் கவலைகள் அகலும்
  கந்தசஷ்டி பிடித்தால் காலனும் அணுகான்
  நம்பியே பிடிக்கிறார் நாடெலாம் கந்தா 
                     
 மேதினி எங்கணும் விரக்தியே பெருகுது
  யாரிடம் போவோம் யார்க்கெடுத் துரைப்போம்
  கலங்கியே நிற்கிறார் கந்தக் கடவுளே
  கலக்கத்தைப் போக்கி காத்திட வேண்டும்

 கற்றவர் கலங்கிறார் கயவர்கள் எழுகிறார்
 சூதும் வாதுமே சூழ்ந்துமே நிற்குது
 அபயம் தேடி அனைவரும் அலைகிறார்
 அப்பனே முருகா அருந்துணை நீயே 

 நீதியும்  கூட  விற்பனை  ஆகுது
 வாதிடும் வக்கீல் வழுக்கியே விழுகிறார்
 யாரிடம் போவது யாரிடம் சொல்வது
 ஏங்கியே தவிக்கிறார் காத்திடு கந்தா 

 சூரரை அழித்திட வந்தவன் அல்லவா
 சூரராய் பலருமே எழுந்துமே வருகிறார்
 வேலினைக் கையினில் ஏந்திய வேலவா
 விடிவினைத் தந்திடு வேண்டுறோம் வேலவா 

 ஒருமுகமாய் வந்தவனே அறுமுகமாய் ஆனவனே
 இருகரங்கள் பன்னிரண்டாய் ஆக்கியே கொண்டவனே
 வேலென்னும் ஆயுதத்தைத் தாங்கியே நிற்பவனே
 வினையறுத்து வெற்றிதர வந்தவனே நீயன்றோ

 அழகான வாகனமாய் ஆக்கிவிட்டாய் மயிலதனை
 அதிலமர்ந்து அருளீய வருகின்றாய் அவனியெலாம்
 தனியாக மலைதேர்ந்து அமர்ந்தாயே தமிழ்க்குமரா
 தமிழாலே உனைப்பாடித் தலைவணங்கி நிற்கின்றோம்

 காக்கக் காக்க கனகவேல் காக்கும்
 கருத்தில் இருத்தியே பாடுறோம் முருகா
 கேட்ட உடனே வருவாய் என்று
 பாடிப் பாடி பரவுறோம் முருகா 

 எல்லா இடமும் இருக்கிறாய் கந்தா
 என்றும் எமக்குத் துணையே நீதான்
 எல்லாப் பிழையும் பொறுப்பாய் கந்தா
 இறைஞ்சிக் கேட்கிறோம் காத்திடு கந்தா 

 ஒவ்வொரு முகமும் உன்னதம் முருகா
 ஒவ்வொரு கரங்களும் உன்னதம் முருகா
 ஆறு முகமாய் வந்திநீ முருகா
 ஆறுதல் அளித்து அருள்புரி அப்பா  ! 

No comments: