சத்தியம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

சிவாஜியின் ஆரம்ப கால நண்பர்களில் ஒருவர் எஸ் .ஏ .கண்ணன். சிவாஜியின் இளமை காலம் தொட்டு அவருடன் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் சிவாஜி திரை நடிகரான பிறகு அவரின் பெரும்பாலன படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். ஆனாலும் நாடகங்களை எழுதி அவற்றை இயக்குவதில் தன் திறமையை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதி இயக்கிய விதி என்ற நாடகம் சத்தியம் என்ற பெயரில் படமானது. 


 யார் யாரையோ எல்லாம் டைரக்டராக்கி அழகு பார்த்த சிவாஜி மிக நீண்ட காலத்துக்கு பிறகு பழைய நண்பனை இப் படத்தின் மூலம் டைரக்டராக்கினார். படத்தையும் தனது சொந்த பட நிறுவனங்கள் ஒன்றின் மூலம் தயாரித்தார். 

 கிராமத்தின் தலைவரான தர்மலிங்கம், கொடுத்த வாக்கை காப்பாற்றுவதிலும் அமைதி காப்பதிலும் பெயர் பெற்றவர். அவரது மனைவி சிவகாமி, படித்த சகோதரன் குமரன் மற்றும் குமரனின் வருங்கால மனைவி வாணி ஆகியோர் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்கின்றனர். குமரனின் கல்லூரித் தோழியும், கிராமத்தின் பெரும் செல்வந்தப் பெண்ணுமான கௌரி, குமரனைக் காதலிக்கிறாள்.

சொக்கநாதன் கௌரியின் பாதுகாவலர் மற்றும் ஒரு வர்க்கப் பாகுபாடு கொண்டவர். ஏழைகள் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஏழைகளாகவே வைத்திருக்க விரும்புகிறார். அவரது சூழ்ச்சிகளால், ஏழை கிராம மக்களின் வீடுகள் தீக்கிரையாகின்றன. தர்மலிங்கத்தின் அவல நிலையையும் கண்ணீரையும் கண்டு, கௌரி அவர்களின் வீடுகளை மீண்டும் கட்டித் தருவதாகவும், தன்னிடம் உபரியாக உள்ள நிலங்களை அவர்களுக்குக் கொடுப்பதாகவும் உறுதியளிக்கிறாள். இது சொக்கநாதனுக்கு வருத்தத்தை அளிக்கிறது. தனது பதினெட்டாவது பிறந்தநாளில், அவள் சொக்கநாதனைத் தனது முகவர் பதவியிலிருந்து நீக்கி, அவனைத் திசையறியாமல் தவிக்க விடுகிறாள். 







அவளது நற்பண்பைக் கண்டு, தர்மலிங்கம் அவளுக்கு மரியாதை அளிக்கிறார். அவள் இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு குமரனை திருமணம் செய்து தரும்படி கேட்கிறாள். குமரன், வாணி இருவரும் இதனை எதிர்த்தும் ஊர் நன்மைக்காக அவர்களின் காதலை நிராகரிக்கிறார் . குமரன் தன் சகோதரனையும் கௌரியையும் தண்டிக்கும் நோக்கில், அழுத்தத்திற்குப் பணிந்து கௌரியைத் திருமணம் செய்துகொள்கிறான். ஆனால் அதன் பின் தன் சகோதரனைப் பார்க்கக்கூட மறுக்கிறான். இதற்கிடையில், வாணி குமாரனை தன் கணவனாக மானசீகமாக வரித்து துறவறம் மேற்கொண்டு கோவிலில் வாழத் தொடங்குகிறாள். 

 படத்தில் அண்ணனாக சிவாஜி நடித்தார். அவர் நடிப்பில் குறை சொல்ல என்ன இருக்கிறது. கமலிடம் கண்டிப்பு காட்டும் போதும் மஞ்சுளாவிடம் பணிவாக நடக்கும் போதும் ஜெயச்சித்ராவிடம் கூனி குறுகும் போதும் அவரின் நடிப்பு உயர்கிறது. கமல் அடக்கி வாசித்து விட்டு பின்னர் எகிறிப் பாய்கிறார். சிவாஜி இருந்தும் மஞ்சுளாவின் ஜோடி கமல்! 

 ஆனாலும் நடிப்பில் எல்லோருக்கும் சவால் விடுகிறார் ஜெயசித்திரா. சிவாஜியுடன் முரண்டு பிடிப்பதில் இருந்து , கமலை மானசீக கணவனாக வரித்துக் கொண்டு வாழும் காட்சிகளில் அவரின் நடிப்பு அருமை. 

 நம்பியார், வி கே ஆர் , நாகேஷ் காம்பினேஷசன் சக்ஸஸ் . தேவிகா நீண்ட காலத்துக்கு பிறகு சிவாஜிக்கு டூயட் படாத ஜோடி. இவர்களுடன் எஸ் வி சுப்பையா , ஆலம், நீலு, உசிலை மணி ஆகியோரும் நடித்திருந்தனர். 

 படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத , இசையமைத்தவர் கே வி மகாதேவன். கல்யாண கோவிலில் தெய்வீக கலசம் , அழகாம் கொடி சிறிது பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. 

 படத்தை கே எஸ் பிரசாத் ஒளிப்பதிவு செய்தார். வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய வசனங்கள் செறிவுடன் அமைந்தன. குறிப்பாக சிவாஜி, மஞ்சுளா, ஜெயசித்ரா சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவரின் வசனங்கள் சிறப்பு. 

 கமல் இளைஞனான பிறகு சிவாஜியுடன் இணைந்த முதல் படம் இதுவாகும். ஆனால் கமல் நடிப்பு டல்லாகவே அமைந்தது . மஞ்சுளாவுடனான அவரின் ஜோடிப் பொருத்தமும் எடுபடவில்லை. அதனால் சிவாஜியின் நடிப்பால் மட்டும் படத்தை தூக்கி நிறுத்த முடியவில்லை. 




 படத்தை இயக்கிய எஸ் .ஏ .!கண்ணன் சிவாஜியின் நெருங்கிய நண்பன். சிவாஜி மறைந்த பின் அவரைப் பற்றி ஒரு நூல் எழுதியிருந்தார். சிவாஜிக்கும், பின்னணிப் பாடகி ரத்னமாலாவுக்கும் இடையிலான உறவை பற்றி அதில் விரிவாக எழுதியிருந்தார். சிவாஜி குடும்பத்தினரின் வேண்டுகோளை முன்னிட்டு அவர் கமலாவை மணந்த பின் , ரத்னமாலா மானசீகமாக சிவாஜியுடன் வாழ்ந்ததாக சொல்லப் படுகிறது. (படத்தில் ஜெயசித்திராவின் பாத்திரம்) இந்த புத்தகம் வெளிவருவதை சிவாஜி குடும்பம் விரும்பவில்லை. தடுத்து விட்டது. காலப் போக்கில் கண்ணனையும் திரையுலகம் மறந்து விட்டது!






No comments: