தெய்வமும் மெய்வருத்தமும்: -சங்கர சுப்பிரமணியன்.

 

ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தின் கீழ் ஒன்பதாவது குறளாக,

 

"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்

மெய் வருத்தக் கூலி தரும்"

 

என்ற குறளை வழங்கியிருக்கிறார் திருவள்ளுவப் பெருமகனார். இப்போது இக்குறள் பற்றி சற்று விரிவாகக் காண்போம். முதலில் இக் குறளில் சொல்லப் பட்டிருக்கும் தெய்வம் என்ற சொல் பற்றி ஆய்வோம். நமக்கும் மேலாக எல்லவற்றையும் இயக்கும் ஒரு ஆற்றல் இருப்பதை எவராலும் மறுக்க இயலாது. இப்போது அந்த ஆற்றல் என்ன என்பதுதான் கேள்வி. அந்ந ஆற்றலால் தான் பிறப்பும் இறப்பும் இரவும் பகலும் பயிர் வளர்வதும் பருவங்கள் மாறுவதும் என இப்படி எல்லாம் நிகழ்கிறது


இந்த ஆற்றல் வேறு எதுவுமல்ல. அதுவே இயற்கை என்னும் மாபெரும் ஆற்றலாகும். இந்த ஆற்றலானது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. தெய்வம் என்ற சொல்லைப் பாருங்கள். இச்சொல் ஆண் பால் சொல்லாகவோ பெண் பால் சொல்லாகவோ இல்லாமல் தெய்வம் என்ற பொதுவின் பால் சொல்லாக இருந்து உண்மையை உணர்த்துகிறது அல்லவா? அதேபோல் தான் கடவுள் என்ற சொல்லும் பொதுவின் பாலாக நிற்பதை யாராலும் இல்லை என்று சொல்லி மறுக்க இயலாது.

 

இப்போது உங்களுக்கு நிச்சயமாக ஒரு சந்தேகம் வரக்கூடும். அப்படி என்றால் இறைவன், இறைவி என்றெல்லாம் சொல்கிறோமே அது என்ன தவறா? என்பதே அச்சந்தேகம். நீங்கள் நினைப்பது முற்றிலும் சரியே. இந்த இறைவன் இறைவி என்பதெல்லாம் மனிதன் கண்டுபிடிப்பு . எப்படி தெய்வம், கடவுள் என்று சொல்கிறோமோ அதேபோல் இதையும் இறை என்றே சொல்ல வேண்டும்


சற்று யோசித்துப் பாருங்கள் நான் சொல்வது சரி என்று உணர்வீர்கள். கடவுளன், கடவுளி(னி) என்றோ தெய்வன் தெய்வி என்றோ சொல்கின்றோமா? இல்லையே. அப்படியிருக்க இறை என்பதை மட்டும் இறைவன் இறைவி என்று நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டு இயற்கை என்னும் மாபெரும் ஆற்றலை ஆணாகவும் பெண்ணாகவும் சொல்வது எப்படி என்று சற்றே யோசியுங்கள். இப்போது தெய்வம் என்று குறளில் சொல்லப் பட்டிருப்பது இயற்கையே என்பது நன்கு புலப்படும்.

 

இனி நாம் சற்று குறளுக்குள் செல்வோம். இங்கு தெய்வத்தான் ஆகாது எனினும் என்றால் இயற்கையால் முடியாது என்றாலும் என்பதே பொருள். என்னதான் இயற்கையால் எல்லாமே நடக்கிறது என்றாலும் இயற்கையினால் முடியாதவைகளும் இருக்கத்தான் செய்கிறது.  அதனால் எல்லாம் அதன் செயல் என்று விட்டு விடாமல் நாமும் முயற்சி செய்ய வேண்டும்


அந்த முயற்சியும் சாதாரணமாக இருந்தால் பலன் கிடைக்காது. ஆதலால் உடல் வருந்துமளவுக்கு முயற்சி செய்யும்போது அதற்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும் என்று வள்ளுவர் சொல்கிறார். அது என்ன உடல் வருந்துமளவுக்கு என்கிறீர்களா?

பசி தூக்கம் மறந்து கருமமே கண்ணாயினார் என்பார்களே அந்த அளவுக்கு உடலுக்கு ஏற்படும் துன்பத்தையும் பாராமல் முயற்சி செய்வதுதான் அது.

 

அடுத்ததாக அந்த முயற்சியைப் பற்றி சற்று பார்ப்போம். சில நாடுகளில் கடுமையான  முயற்சியின் பலனாக கப்பலில் வளமிக்க மண்ணைக் கொட்டி விவசாயம் செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இன்னும் சில கடலோர நாடுகளின் நிலப்பரப்பு அவர்களின் தேவைக்குப் பற்றாமல் மிகவும் குறைவாகவே இருக்கிறது


அதற்காக அவர்கள் தலைமேல் கையை வைத்து முடங்கிப் போய் விடவில்லை. கடுமையான முயற்சி செய்து அதில் வெற்றி கண்டார்கள். எப்படி என்கிறீர்களா? கடலுக்குள் மண்ணைக் கொட்டி கடலை வெளியே தள்ளி நிலப்பரப்பை அதிகரித்துள்ளார்கள். இதைத்தான் திருவள்ளுவர் மெய் வருத்தக் கூலி தரும் என்கிறார்.

 

முழுக் குறளுக்கும்  விளக்கத்தைப் பார்ப்போம். இயற்கையினால் கூட சிலவற்றைச் செய்ய முடியாமல் போய் விடும். அப்படி ஒரு நிலை ஏற்படும்போது இயற்கையாலேயே முடியாததை நம்மால் எப்படிச் செய்ய முடியும் என்று ஓய்ந்து விடாமல் மெய் வருந்துமளவுக்கு கடுமையாகவும் முழுமனதுடனும் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் அதற்குண்டான பலனை நிச்சயம் கொடுக்கும் என்பதே திருவள்ளுவ பெருமகனார் நமக்கு கூறும் கருத்தாகும்.

 

-சங்கர சுப்பிரமணியன்


No comments: