இலங்கைச் செய்திகள்

புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ். அரசாங்க அதிபரை சந்தித்தார்

நாடு முழுவதும் 2,500 மில்லியன் ரூபா செலவில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள் ஆரம்பம்

மும்பையில் இருந்து 862 சுற்றுலாப் பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்த சொகுசு கப்பல்!

யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கின் பங்கை 10 சதவீதமாக உயர்த்த நிர்ணயித்துள்ளோம் - வடக்கு ஆளுநர்!

திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல்



புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ். அரசாங்க அதிபரை சந்தித்தார் 

14 Aug, 2026 | 06:28 PM

(எம்.நியூட்டன்)

புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சலியா டயஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வெள்ளிக்கிழமை (14) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி மற்றும் 52ஆவது படைப்பிரிவின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.   



















நன்றி வீரகேசரி 



நாடு முழுவதும் 2,500 மில்லியன் ரூபா செலவில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள் ஆரம்பம் 

Published By: Digital Desk 2

14 Aug, 2026 | 02:22 PM

(நமது நிருபர்)

நாடு முழுவதும் 2,500 மில்லியன் ரூபா செலவில் சுய வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் வளர்ச்சித் திட்டங்கள் இன்று (14) நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டின் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் செயல்திறன் அடிப்படையிலான மூலதன ஒதுக்கீட்டிற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வர்த்தக வளாகங்கள், சுகாதாரமான இறைச்சிக் கடைகள், கட்டடப் பொருட்கள், பரிசோதனைக்கூடங்கள், கொன்கிரீட் உற்பத்தி நிலையங்கள், குடிநீர் மற்றும் விவசாய வளர்ச்சித் திட்டங்கள், நெல் உலர்த்தும் மையங்கள், சுற்றுலா வசதிகள் மேம்பாடு, ஹோட்டல்கள், சூரிய சக்தி மின் தகடுகள், முன்பள்ளிகள், சிறுவர் பூங்காக்கள், கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மையங்கள், கோளரங்கங்கள், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் மற்றும் வாகன பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மேலும், இச்செயற்றிட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ருவன் செனரத், குறைந்த வருமானமுடைய உள்ளூராட்சி மன்றங்கள் சொந்தமாக வருமானத்தை ஈட்டிக்கொள்வதையே அரசாங்கம் முதன்மைத் திட்டமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். 

அத்துடன், கிராமப்புறப் பாலங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 1,050 மில்லியன் ரூபாய் நிதியில், 880 கிராமப் பாலங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் திட்டமிடப்பட்டு, அவற்றில் சுமார் 100 பாலங்களுக்கான கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாகச் நடைபெற்று வருகிறது என்றார்.   நன்றி வீரகேசரி 




மும்பையில் இருந்து 862 சுற்றுலாப் பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்த சொகுசு கப்பல்! 

14 Aug, 2026 | 10:34 AM

மும்பையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த சுற்றுலாக் கப்பலொன்று 862 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கப்பலில் வருகை தந்துள்ள 862 சுற்றுலாப் பயணிகளும் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சர்வதேச சுற்றுலாக் கப்பல்கள் வருகை தருவது, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை முன்னிட்டு துறைமுகப் பகுதியில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதன் மூலம், வடக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்று, சமய மற்றும் இயற்கை சுற்றுலாத் தலங்களுக்கு சர்வதேச அளவில் மேலும் கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 




யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

Published By: Digital Desk 2

15 Aug, 2026 | 03:19 PM

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்று காலை 9 மணியளவில் இந்திய தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார்.

அதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார்.

இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.   
















நன்றி வீரகேசரி 




மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கின் பங்கை 10 சதவீதமாக உயர்த்த நிர்ணயித்துள்ளோம் - வடக்கு ஆளுநர்!

15 Aug, 2026 | 07:06 PM

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5 சதவீதமாகக் காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பேராதரவும், விடாமுயற்சியும், புதியதைச் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் எமக்குத் தேவை. தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் எமக்குக் கிடைத்துள்ள சாதகமான நிலைப்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி இந்த இலக்கை எட்டுவோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு

தற்போது 4.5 சதவீதமாகக் காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பேராதரவும், விடாமுயற்சியும், புதியதைச் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் எமக்குத் தேவை. தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் எமக்குக் கிடைத்துள்ள சாதகமான நிலைப்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி இந்த இலக்கை எட்டுவோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இவ்வாறான புதிய முயற்சிகளே அவர்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


வடக்கு மாகாண உற்பத்திகளுக்கு உள்நாட்டு சந்தையைத் தாண்டி ஏற்றுமதி சந்தையிலும் சிறந்த வாய்ப்புகள் காணப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகள் வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களில் ஆர்வம் கொண்டிருப்பதால், அவர்களை ஒரு முக்கிய சந்தையாகக் கொண்டு ஏற்றுமதியை விரிவுபடுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கம் ஊடாகவும் உற்பத்தியாளர்கள் சர்வதேச சந்தைகளை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தித் திறன் அதிகமாகக்


காணப்படுவதுடன், இம்முறை சிறுபோகத்திலும் எதிர்பார்த்ததை விட அதிக விளைச்சல் கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட ஆளுநர், இருப்பினும் இவ்வாறான உற்பத்திகளில் பெரும் பகுதி பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களாக மாற்றப்படாமல் மூலப்பொருட்களாகவே வெளிமாவட்டங்களுக்கும் வெளிப்பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுவதாகக் கவலை வெளியிட்டார். இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அதிகபட்ச பொருளாதாரப் பயன் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மூலப்பொருட்களை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றுவதே வடக்கு மாகாணத்தின் தொழில் வளர்ச்சியின் அடுத்த முக்கிய கட்டமாக இருக்கவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், உற்பத்தி, பதனிடல், பொதியிடல், சந்தைப்படுத்தல்  மற்றும் ஏற்றுமதி என முழுமையான உற்பத்திச் சங்கிலியை உருவாக்குவதன் மூலம் தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தையும் போட்டித்திறனையும் உயர்த்த முமுடியும் என்றார்.

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தால் கடந்த காலங்களில் சிறிய அளவிலான பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மிகக் குறைந்த வட்டியுடனான கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.


அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படும் இவ்வாறான வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தமது தொழில் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துமாறு அவர் தொழில் முயற்சியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாணத்தில் தொழில் முயற்சிகள் விரிவடைவது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், உள்ளூர் மூலப்பொருட்களுக்கு பெறுமதி சேர்த்து அவற்றை உயர்ந்த பெறுமதியுடைய பொருட்களாக மாற்றுவதற்கும், மாகாணத்தின் பொருளாதாரப் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இவ்வர்த்தகச் சந்தையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உற்பத்திகள், பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள், ஆடை மற்றும் துணி உற்பத்திகள், மரவேலைப் பொருட்கள், மட்பாண்டப் பொருட்கள், பனை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கும் சந்தைப்படுத்தலுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்துகொள்ளாத நிலையில், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற இநத நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர்  தனுஜா முருகேசன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சு.முரளிதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன், தொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகத் துறையினர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

வடக்கு மாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2026 இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் நடைபெறவுள்ளதுடன், பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வர்த்தகச் சந்தையைப் பார்வையிட முடியும்.   நன்றி வீரகேசரி 




திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல்

Published By: Digital Desk 2

15 Aug, 2026 | 12:55 PM

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியில் வசித்து வரும் குறித்த நபருக்கு, வெள்ளிக்கிழமை (14) இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சையின் போது 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு


பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது அகற்றப்பட்டுள்ள சிறுநீரகக் கல்லின் எடை 3 கிலோ 100 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

























நன்றி வீரகேசரி 


No comments: