உலகச் செய்திகள்

புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ; “இது மிகுந்த வலியுடையது” - மகன் ஹன்டர் பைடன் கவலை

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியன்மார்

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச வணிகப் சேவையை ஆரம்பித்தது

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் கோலாகலம்!  



புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ; “இது மிகுந்த வலியுடையது” - மகன் ஹன்டர் பைடன் கவலை 

10 Aug, 2026 | 04:26 PM

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிர நிலைமையில் இருப்பதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார். 

“இது மிகவும் வலி மிகுந்தது. இந்தப் புற்றுநோய் எனது தந்தையை முடக்கிவிட்டிருக்கிறது” என ஜோ பைடனின் மகன் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி வகித்தபோதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்  விதைப்பையில் பரவிய புற்றுநோய் காரணமாக அவர் அப்போதும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பதவிக்காலத்தில் ஜோ பைடனின் பெரும்பாலான பணிகளை அன்றைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற, தோல்வியை சந்தித்த ஜோ பைடன், அதன் பின்னர், தனக்கு புற்றுநோய் பாதிப்பு மிகத் தீவிரமான நிலையில் இருப்பதாக கடந்த மே மாதத்திலேயே, அவர் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி  





ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியன்மார் 

Published By: Digital Desk 3

11 Aug, 2026 | 11:55 AM

மியன்மார் இராணுவ அரசாங்கம் ஆங் சான் சூகியை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

ஆசியான் கூட்டமைப்பின் தற்போதைய தலைமை நாடான பிலிப்பைன்ஸ், ஆங் சான் சூகியை நிபந்தனையின்றி முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவரையோ அல்லது பிற அரசியல் கைதிகளையோ சந்திப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு பதிலளித்த மியன்மார் வெளிவிவகார அமைச்சு, "மனிதநேய அடிப்படையில் அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டிருந்தாலும், அவரை முழுமையாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்வது என்பது நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படும்" எனக் கூறி கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அத்துடன், மியன்மார் பிரச்சினையைச் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் சிறப்புத் தூதுவர் முறை இனி தங்களுக்குத் தேவையில்லை எனவும் இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

81 வயதான ஆங் சான் சூகி, 2021 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் அவரைச் சந்தித்துப் பேச அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 





ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு 

Published By: Digital Desk 3

12 Aug, 2026 | 12:07 PM

உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' மீது அமெரிக்கா “முழுமையான கட்டுப்பாட்டை” கொண்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள ஆண்ட்ரூஸ் கூட்டுப் படைத்தளத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

"நான் ஈரானை நம்பவில்லை. என்னை ஏமாற்றவே அவர்கள் முயன்றனர். தற்போது ஹோர்முஸ் நீரிணையின் மீது அமெரிக்காவிற்கே முழுமையான கட்டுப்பாடு உள்ளது. அவர்களிடம் (ஈரானிடம்) எந்தக் கட்டுப்பாடும் இல்லை, அது எங்களுடையது" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஏதேனும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்கள் முற்றிலும் அழித்தொழிக்கப்படுவார்கள் என மிகக் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளாக மேற்காசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நாடு (ஈரான்), இனி அத்தகைய ஆதிக்கத்தைச் செலுத்த முடியாது எனவும் அமெரிக்கா தற்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் கூற்றுகளுக்குப் பதிலளித்துள்ள ஈரானிய வெளிவிவகார  அமைச்சகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகே ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதே மசகு எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இப் பாதையில் நிலவும் இப்பதற்றமான சூழ்நிலையினால், தற்போது ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே கடல்சார் போக்குவரத்து தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.   நன்றி வீரகேசரி 





சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச வணிகப் சேவையை ஆரம்பித்தது 

14 Aug, 2026 | 02:25 PM

சீனாவினால் உள்நாட்டிலேயே தயாரித்து உருவாக்கப்பட்டுள்ள 'C919' பயணிகள் விமானம், தனது முதலாவது சர்வதேச வணிக ரீதியிலான வான்வழிச் சேவையை ஓகஸ்ட் 12 ஆம் திகதி தொடங்கவுள்ளதாக 'எயர் சைனா'  நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வான்வழிப் பாதை, சீனாவின் தலைநகரான பீஜிங்கை, மங்கோலியாவின் தலைநகரான உலன்பாதாருடன்  நேரடியாக இணைக்கவுள்ளது.

சீனாவின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான பயணிகள் ஜெட் விமானம் 25 நகரங்களை இணைக்கும் 57 வான்வழிப் பாதைகளில் வெற்றிகரமாகச் சேவையாற்றியுள்ளதுடன், 7.5 மில்லியனுக்கும் அதிகமான  பயணியர் பயணங்களைச் கையாண்டு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் கோலாகலம்!  

15 Aug, 2026 | 09:54 AM

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்குச் உரையாற்றினார்.

அணிவகுப்பு மரியாதை மற்றும் கொடியேற்றம் :

இன்று காலை செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமரை பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, முப்படையினர் மற்றும் டெல்லி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். 

பின்னர், மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்த அவர், நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி:

பிரதமர் தனது உரையில், "சுதந்திரத்துக்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து, நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும் இந்த நன்னாளில் நெஞ்சார நினைவுகூருகிறோம். அவர்களின் கனவுக்கேற்ப, ‘வளர்ச்சியடைந்த இந்தியா’வை உருவாக்குவதற்கு 140 கோடி இந்தியர்களின் கூட்டுச் சக்தி பெரும் பலமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப் பயணம் இனி வரும் காலங்களில் மேலும் வேகமெடுக்கும்" என்று வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.

உச்சக்கட்ட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம்:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், வாகன சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி 







No comments: