உலகச் செய்திகள்

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280 ஆக அதிகரிப்பு ; 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு : முதல்வர் விஜய் பங்கேற்பு

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

அமெரிக்கா - ஈரான் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள்: எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தகர்ப்பு!



நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280 ஆக அதிகரிப்பு ; 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்!

Published By: Digital Desk 3

04 Sep, 2026 | 11:50 AM

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவு மற்றும் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,280 ஆக அதிகரித்துள்ளதுடன், 5,620க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளனர்.

இரண்டாவது வாரமாகப் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்காததால், உறவினர்கள் நம்பிக்கையிழந்து அடையாளப் பூதவுடல்களை உருவாக்கி இறுதிச் சடங்குகளைச் செய்து வருகின்றனர்.

நேபாள தேசிய அனர்த்த குறைப்பு மற்றும் முகாமைத்துவ அதிகாரசபையின் தகவலின்படி,

நேபாளத்தில் மட்டும் 1,259 பேர் உயிரிழந்துள்ளதுடன், 583 வெளிநாட்டவர்கள் உட்பட 5,083 பேர் காணாமல் போயுள்ளனர்.

மிகவும் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில், காணாமல் போன உறவினர்களின் உடல்கள் கிடைக்காததால், 'காஸ்-குஷ்' எனப்படும் புனிதப் புற்களால் மனித உருவ பொம்மைகளைச் செய்து, அவற்றைக் காத்மாண்டுவின் பசுபதி ஆரியகாட் தகன மைதானத்தில் தகனம் செய்து இறுதிச் சடங்குகளை உறவினர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

சடலங்களை சேமித்து வைப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சித்வான் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சடலங்களின் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரித்த பின்னர் பொலிஸார் அடக்கம் செய்து வருகின்றனர்.

சீனாவின் தென்மேற்கு சிசாங் (திபெத்) தன்னாட்சிப் பகுதியில் உள்ள 'கியிரோங்' எல்லைக் கடவைப் பகுதி வெள்ளத்தில் மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 261 வெளிநாட்டவர்கள் உட்பட 541 பேர் காணாமல் போயுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம்  26 ஆம் திகதி நேபாளத்தின் 'லாங்டாங் லிரங்' மலையில் சுமார் 5,200 மீற்றர் உயரத்தில் அமைந்திருந்த பனிப்பாறை பிளவுபட்டு விழுந்ததால் ஏற்பட்ட பனி-பாறை சரிவே இந்தப் பிரம்மாண்ட வெள்ளப் பெருக்குக்குக் காரணமாகும்.

தற்போது 21,400 க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும், வீதிகள் மற்றும் தொலைத்தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. தொற்நோய்கள் பரவாமல் தடுக்கவும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 




காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு : முதல்வர் விஜய் பங்கேற்பு

Published By: Digital Desk 2

01 Sep, 2026 | 02:46 PM

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து   நீரை தமிழக முதல்வர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை (01) திறந்து வைத்தார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த ஆண்டு போதிய வரத்து இன்மை காரணமாக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் அணையில் இருந்து விவசாயத்திற்கான நீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் விஜய் பங்கு பற்றி திறந்து வைத்தார்.

இதற்காக சென்னையிலிருந்து தனி விமான மூலம் சேலம் விமான


நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை தந்தார். பிறகு அங்கிருந்து மேட்டூர் அணைக்கு சாலை மார்க்கமாக பயணித்தார். இதன் போது சாலையின் இரு புறங்களிலும் மக்களும் , தொண்டர்களும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் மேச்சேரி மற்றும் மேட்டூர் ஆகிய பகுதிகளில் தனது வாகனத்தில் நின்றபடி விஜய் நகர் வலம் வந்தார்.

மேட்டூர் அணை நீர் திறப்பு நிகழ்விற்கு வருகை தந்த முதல்வர் விஜய்க்கு காவல்துறையினர் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை வழங்கினர். அதனை ஏற்றுக்கொண்ட விஜய்,  பின்னர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார். முதல்வர் விஜய் மதகுகளில் இருந்து வரும் தண்ணீரில் பூக்களை தூவி வரவேற்றார்.

இந்த விழாவில் தமிழக முதல்வருடன் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் மற்றும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கு பற்றினர்.










நன்றி வீரகேசரி 




EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

05 Sep, 2026 | 02:18 PM

இந்திய  பாதுகாப்பு, இயற்கை பேரிடர் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறியும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' புவி வட்டப்பாதையில் மிகவும் சக்தி வாய்ந்த EOS-05 (GISAT-1A)-ஐ என்ற செயற்கைக்கோளை முதல்முறையாக, GSLV-F17  ரொக்கெட் வாயிலாக, நேற்று வெள்ளிக்கிழமை (4)  அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில்  செலுத்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

GSLV-F17 ரொக்கெட் வாயிலாக, EOS-05 என்ற நிகழ்நேர படமெடுக்கும் செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டு, 18 நிமிடங்கள், 34 வினாடிகள் பயணித்து, புவியின் ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து, 36000 கிலோமீற்றர்  உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான  EOS-05 செயற்கைக்கோள், நிகழ்நேரத்தில் மிகத்துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும் வகையில், புவியின் வேகத்திலேயே தொடர்ந்து, இந்தியாவை சுற்றி வரும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன் பணிக்காலம் ஏழு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஆண்டுகள் வரை பணியாற்றும் வகையில், மிகவும் சக்தி வாய்ந்த 2,280 வாட்ஸ் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில், 'Hyperspectral Imaging - HSI' எனும் அதிநவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

தற்போது, புவியின் துணை வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் செயற்கைக்கோள், அடுத்த 5 - 6 நாட்களில், துல்லியமான இறுதிச் சுற்றுப்பாதைக்கு,  செலுத்தப்படும் என்றும் அதன் பிறகு  அதற்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளை தொடங்கும் என தெரிவித்துள்ளது.    நன்றி வீரகேசரி 





அமெரிக்கா - ஈரான் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள்: எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தகர்ப்பு!

Published By: Digital Desk 3

06 Sep, 2026 | 09:44 AM

அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதலில், சனிக்கிழமையன்று இரு நாடுகளும் பரஸ்பரம் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி,

ஈரானின் 'கார்க் தீவு' அருகே ஒன்று, ஜாஸ்க் பகுதிக்கு அருகே ஒன்று மற்றும் ஓமன் வளைகுடாவில் ஒன்று என ஈரானுடன் தொடர்புடைய 03 மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக அமெரிக்கப் படைகளின் போர் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஏவுகணை அழிப்புக் கப்பலைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 ஈரானின் தாக்குதலில் அமெரிக்கப் படைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.  அழிக்கப்பட்ட கப்பல்கள் ஈரானிய புரட்சிகர காவல் படையின் நிதியுதவிக்காகப் பயன்படுத்தப்படும் நிழல் அமைப்பைச் சேர்ந்தவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.  

ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்ஐபி மற்றும் ஐஆர்ஜிசி வெளியிட்ட தகவலின்படி,

அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஓமர்ன் வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணைப்  பகுதிகளில் அமெரிக்க தொடர்புடைய 3 கப்பல்கள் மற்றும் "அனுமதிக்கப்படாத பாதையில்" பயணித்த 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

கார்க் தீவு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 





No comments: