கிருஷ்ணர் காட்டிய வெற்றியின் வழி

 இறைவன் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்ற உணர்வுடன் தொடர்ந்து சாதனை செய்து வந்தால், வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதை கிருஷ்ணர் தமது வாழ்க்கையின் மூலம் எடுத்துக்காட்டினார்.

கிருஷ்ணரை உங்கள் தேரோட்டியாக ஏற்றுக்கொள்ளுங்கள்; எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் வந்தாலும், அவர் உங்களை வெற்றியின் பாதையில் வழிநடத்துவார்.

இறைவனுக்கு விருப்பமானவர்களோ, விரோதமானவர்களோ என்று எவரும் இல்லை. நெருப்பைப் போல, தம்மை அணுகி இருப்பவர்கள் அனைவருக்கும் அவர் வெப்பத்தை அளிக்கிறார். அந்த வெப்பத்தை நீங்கள் உணரவில்லை என்றால், இறைவனைக் குறை கூறாதீர்கள்; அவரிடமிருந்து நீங்கள் விலகி இருப்பதையே காரணமாக எண்ணுங்கள்.

பீஷ்மரைப் பாருங்கள்! தம்மைக் கொல்வதாக உறுதி எடுத்திருந்த கிருஷ்ணரையே அவர் பிரார்த்தித்தார். கிருஷ்ணரின் தெய்வீக மகிமையைத் தரிசிக்கும் பேற்றை அருளுமாறு வேண்டினார். இதுவே உண்மையான பக்தியும், உண்மையான ஞானமும் ஆகும். பீஷ்மரிடம் அசைக்க முடியாத நம்பிக்கையும் தெய்வீகத் தரிசனமும் இருந்தன; கிருஷ்ணரும் அவரை ஆசீர்வதித்தார்.

இரண்யகசிபு “அவன் எங்கும் இல்லை” என்று கூறினான்; ஆகவே, அவனுக்கு இறைவன் எங்கும் இல்லாதவராகவே இருந்தார். ஆனால் பிரகலாதன், “அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்” என்று உறுதியாகக் கூறினான். அவனது கூற்று உண்மை என்பதை நிரூபிப்பதற்காக, இறைவன் தூணிலிருந்து வெளிப்பட்டார்.

உண்மையில், தந்தையின் சவாலுக்குப் பதிலளிப்பதற்காக இறைவன் தூணுக்குள் ஓடிச்சென்று மறைந்திருந்து, பின்னர் அதிலிருந்து வெளிவர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர் ஏற்கனவே அங்கேயே இருந்தார் — மற்ற அனைத்துப் பொருட்களிலும் இருப்பதைப் போலவே. அவர் செய்ய வேண்டியது ஒன்றே; தம்மை வெளிப்படுத்திக் காட்டுவது மட்டுமே.

“நானும் அவ்வாறே இருக்கிறேன்.” நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டு, “ஆம்” என்று கூறினால், நானும் பதிலளித்து, “ஆம், ஆம், ஆம்!” என்று கூறுகிறேன். நீங்கள் என்னை மறுத்து, “இல்லை” என்று கூறினால், நானும் அதையே எதிரொலித்து, “இல்லை” என்று கூறுகிறேன்.

எனவே, வாருங்கள்; ஆராயுங்கள், அனுபவியுங்கள், நம்பிக்கையுடன் இருங்கள். இதுவே என்னை உண்மையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வழியாகும்.

No comments: