இலங்கைச் செய்திகள்

 நாமல் ராஜபக்‌ஷவுக்கு செப்டம்பர் 18 வரை விளக்கமறியல்

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்" – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

பலாலியில் 12ஆவது வாரமாக தொடரும் போராட்டம்



நாமல் ராஜபக்‌ஷவுக்கு செப்டம்பர் 18 வரை விளக்கமறியல்

04 Sep, 2026 | 06:01 PM

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று வெள்ளிக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ்  ரக விமானங்களைக் கொள்வனவு செய்த பெரும் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கலின் போது, 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றையதினம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்‌ஷவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அச் சபையின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.   நன்றி வீரகேசரி 






நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்" – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

06 Sep, 2026 | 03:16 PM

நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாமல் ராஜபக்ஷ இந்த நாட்டின் ஒரு சாதாரண பிரஜையே தவிர, அவர் எந்தவிதத்திலும் விசேடமான நபர் அல்லர் என்று சுட்டிக்காட்டினார்.

 மேலும், முன்பிருந்த ஊழல் மற்றும் மோசடிகளுடன் அவருக்குத் தொடர்பு இருக்குமாயின், அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் இடம்பெறும் தருணத்தில் இக்கைது இடம்பெற்றதால், இது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பிரதி அமைச்சர் முற்றாக நிராகரித்தார். 

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுயாதீன நிறுவனங்கள் தமது விசாரணைகளின் முடிவுகளுக்கு அமைவாகவே நபர்களை அழைப்பதும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் வழக்கம் என்றும், இத்தகைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் குறித்த சட்டப்பூர்வ கைதுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் என்ற ரீதியில் சட்ட அமலாக்க நிறுவனங்களை பலப்படுத்துவதையே தாம் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், மக்கள் ஆணையுடன் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும், மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் மக்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 




பலாலியில் 12ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

Published By: Digital Desk 2

06 Sep, 2026 | 12:20 PM

( எம்.நியூட்டன்)

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) 12ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வலிகாமம் வடக்கு பலாலி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் நீண்டகாலமாக இராணுவப் பயன்பாட்டில் இருந்து வரும் தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காணி உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக “2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்து, எமது பூர்வீக நிலங்களை எம்மிடமே மீள ஒப்படைக்க வேண்டும். எமது சொந்த இடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

பல வருடங்களாக தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத


நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கும் மக்கள், அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்காக வாரந்தோறும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமது கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கி, காணிகளை விரைவாக விடுவித்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

“எங்கள் நிலம் எங்களுடையது; எமது பூர்வீக நிலங்களில் நாங்கள் மீண்டும் வாழ்வதற்கு அரசாங்கம் வழிவகுக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன், 12ஆவது வாரமாகவும் பலாலி காணி இழந்த மக்களின் போராட்டம் தொடர்ந்தனர்.

இதேவேளை, யாழில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், அமைச்சர்களான, பிமல் ரத்னாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை செப்டெம்பர் மாதமளவில் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 























No comments: