ஈரானின் சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் ; 90 இலக்குகள் குறிவைப்பு
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் தீவிரம்
சிரியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே குண்டுவெடிப்பு
ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம்: ஜேர்மனியில் மாத்திரம் ஜூன் மாதத்தில் 5,000 பேர் உயிரிழப்பு!
ஈரானின் சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் ; 90 இலக்குகள் குறிவைப்பு
Published By: Digital Desk 3
09 Jul, 2026 | 01:48 PM
ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த தென்கிழக்கு துறைமுக நகரமான சபஹார் மீது அமெரிக்கா இன்று சரமாரியான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவான United States Central Command, இந்த நடவடிக்கையின் போது ஈரானின் சுமார் 90 இலக்குகள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் ஈரானின் கடல்சார் கட்டமைப்புகள் மற்றும் இராணுவ வசதிகளே தாக்குதலின் பிரதான இலக்குகளாக இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, உடன்பாட்டை மீறி ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. இதனையடுத்து, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையக்கூடும் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், சபஹார் நகரின் பல பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், சில பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு அவசர உதவி குழுக்கள் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக போர்நிறுத்தத்துக்குப் பின்னர், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சபஹார் துறைமுகம் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும் என கூறப்படுகிறது.
ஓமன் வளைகுடாவில் ஹோர்முஸ் நீரிணையின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள ஈரானின் முக்கிய துறைமுகங்களில் சபஹார் துறைமுகம் ஒன்றாகும்.
ஈரானின் சபஹார் துறைமுகமானது பந்தர் அபாஸ் துறைமுகத்திற்கு அடுத்தபடியாக, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தளமாக இது கருதப்படுகிறது.
அமெரிக்க இராணுவ தகவல்களின்படி, சபஹார் பகுதியில் உள்ள கப்பல் நிறுத்துமிடங்கள், கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு கோபுரங்கள் மற்றும் அருகிலுள்ள இராணுவ சொத்துகள் தாக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பயன்படுத்தும் துறைமுக பகுதிகள் மற்றும் முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் தாக்குதலில் இருந்து தவிர்க்கப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மூன்று சரக்கு கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், குவைத் மற்றும் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், அமெரிக்கா – ஈரான் இடையிலான சமாதான முயற்சிகள் பாதிக்கப்பட்டு, மீண்டும் இராணுவ மோதல் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஈரான் தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும், அந்த நாட்டின் இலக்கு பட்டியலில் தனது பெயர் முக்கியமாக உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நடைபெறும் நேட்டோ மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டிரம்ப், “இதுவரை நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கலாம். ஆனால் அது எப்போதும் தொடராது” என அச்சம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றன. நன்றி வீரகேசரி
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் தீவிரம்
Published By: Digital Desk 3
09 Jul, 2026 | 09:58 AM
ஈரானுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, ஈரான் மீது புதிய இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் “முடிந்துவிட்டது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், அமெரிக்க இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மூன்று சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் விலை சுமார் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஈரான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கா பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க மத்திய கட்டளைப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் திறனை குறைக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளைப் படைகள் ஈரானுக்கு எதிராக கூடுதல் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதி பயணிக்கும் முக்கிய கடல் பாதையாக ஹோர்முஸ் நீரிணை காணப்படுகிறது. இதன் மீதான கட்டுப்பாடு ஈரானுக்கு சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் முக்கிய செல்வாக்கை வழங்குகிறது.
இந்நிலையில், சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் நேரடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும், அமெரிக்காவுடனான நீண்டகால அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் தனது செல்வாக்கை வெளிப்படுத்தும் முயற்சியாக இவ்வாறான நடவடிக்கைகள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய மோதல், ஏற்கனவே பலவீனமான நிலையில் இருந்த போர்நிறுத்த முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுடன் ஆரம்பமான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளும் தற்போது சவால்களை எதிர்கொண்டுள்ளன.
இதற்கிடையில், நேட்டோ மாநாட்டில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுடனான எதிர்கால ஒப்பந்தம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
“நாம் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டால், அது நீடிக்குமா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. அவர்கள் மிகவும் கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர்,” என ட்ரம்ப் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், முழுமையான போர் மீண்டும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கவில்லை எனவும், நிரந்தர அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடருமா என்பது தற்போது தெளிவாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம், சர்வதேச எரிசக்தி சந்தை மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய பாதுகாப்பில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
சிரியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே குண்டுவெடிப்பு
Published By: Digital Desk 3
07 Jul, 2026 | 02:15 PM
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சிரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்துக் கொண்டிருந்த வேளையில், தலைநகர் டமஸ்கஸில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாராவைச் சந்திப்பதற்காக அங்குள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் நுழைந்த சில நிமிடங்களிலேயே, நகரின் மையப்பகுதியில் இந்த வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
டமஸ்கஸின் மையப்பகுதியில் அமைந்துள்ள 'போர் சீசன்ஸ்' ஹோட்டலுக்கு அருகிலேயே இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்துள்ளதாகச் சிரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரியாவுக்கு சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இந்த
ஹோட்டலிலேயே தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து பெருமளவில் புகை மூட்டம் எழும்புவதைக் காணக்கூடியதாக இருந்ததுடன், வாகனம் ஒன்று தீப்பற்றி எரிவதும், வீதிகளில் இரத்தக் கறைகள் படிந்திருப்பது போன்ற காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. எனினும், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதுடன், சிரிய அதிகாரிகளும் இது குறித்து உடனடியாக எவ்வித உத்தியோகபூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இந்தத் திடீர் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், அவர் முற்றிலும் காயமடைவதிலிருந்து தப்பியுள்ளதாகவும் பாரிஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், திட்டமிட்டபடி பிரான்ஸ் ஜனாதிபதியின் சிரியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத் திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனவும் பிரான்ஸ் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம்: ஜேர்மனியில் மாத்திரம் ஜூன் மாதத்தில் 5,000 பேர் உயிரிழப்பு!
Published By: Digital Desk 3
09 Jul, 2026 | 04:22 PM
ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடும் வெப்ப அலை காரணமாக மதிப்பிடப்பட்ட 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் புகழ்பெற்ற ரொபர்ட் கோக் பொதுச் சுகாதார நிறுவனம் இன்று (09) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதில் பெரும்பாலான மரணங்கள் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில், வாராந்த சராசரி வெப்பநிலை வழமைக்கு மாறாக 20 டிகிரி செல்சியஸைக் (20°C) கடந்த போதே நிகழ்ந்துள்ளன.
உயிரிழந்தவர்களில் சுமார் 4,270 பேர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்கள் என ரொபர்ட் கோக் நிறுவனம் தனது வாராந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும். ஜேர்மனியின் மிக வயதான மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பதே இதற்குக் பிரதான காரணமாகும்.
ஜேர்மனியின் இந்தத் தரவுகள் ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியமும் எதிர்கொண்டுள்ள மிக மோசமான தட்பவெப்ப நிலையைப் பிரதிபலிக்கின்றன.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் தங்களது வரலாற்றிலேயே மிக வெப்பமான ஜூன் மாதத்தை இந்த ஆண்டு எதிர்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் 'கொப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை' இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அங்கு ஜூன் மாதத்தின் சராசரி வெப்பநிலை 20.74 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
ஏனைய நாடுகளிலும் மரணங்கள்: ஜூன் 20 முதல் 28 ஆம் திகதி வரையிலான குறுகிய காலப்பகுதியில் நிலவிய கடுமையான வெப்ப அலையினால் பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் 4,700 க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தந்த நாட்டு தேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய காலநிலை மாற்றத்தின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடைகாலத்தில் கடுமையான வெப்ப சவால்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி

No comments:
Post a Comment