நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; சிறைச்சாலை வளாகம் குற்ற பிரதேசமாக அறிவிப்பு
டெங்கு அபாயம்: அதிக ஆபத்துள்ள வலய பாடசாலை, பல்கலைகழகங்களை இரு வாரங்களுக்கு மூடுமாறு கோரிக்கை - வைத்தியர் சமல் சஞ்சீவ
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு
பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின் மூன்று பிரதான விமான நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; சிறைச்சாலை வளாகம் குற்ற பிரதேசமாக அறிவிப்பு
Published By: Vishnu
10 Jul, 2026 | 04:51 AM
(செ.சுபதர்ஷனி)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்ன சிறைச்சாலை வளாகம் கைதிகளை தடுத்து வைப்பதுக்கு ஏற்ற இடமில்லை எனவும், குறித்த சிறைச்சாலை குற்றப் பிரதேசமாக அடையளப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமற்றும் தேசிய ஒருமைபாடுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 5, 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக் கருதியும், அங்குள்ள ஏனைய கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையளரும் ஊடகப் பேச்சாளருமான எ.சி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது 73 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடைய ஏற்பட் மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகள் உட்பட 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பல காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிரலையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்த மோதலின் போது கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை காவலாலர் மத்தக கமகே உபாலி (வயது 42) புதன்கிழமை (8) பிற்பகல் உயிரிழந்தார். இதன்மூலம் பலியான அதிகாரிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. கடற்படையில் 12 ஆண்டுகள் பணியாற்றி, 5 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைச்சேவையில் இணைந்து தனது பணியை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் குறித்த அதிகாரியின் பூதவுடல் வியாழக்கிழமை (9) கம்புருபிட்டியவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேவேளை, உயிரிழந்த மற்றுமொரு அதிகாரியான எஸ்.டி.எஸ். அபேவர்தனவின் வித்துடலுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார நேற்றைய தினம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்த சிரை அதிகாரி எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச உள்ளிட்ட சில அதிகாரிகளின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை (9) பிற்பகல் இடம்பெற்றன.
மோதலில் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் அது தற்போது ஒரு "குற்றப் பிரதேசம்" என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்கவும், கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையை மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அங்கிருந்த சுமார் 1,200 கைதிகள் வரியப்பொல, போகம்பரை உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். புதன்கிழமை (8) அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண் கைதிகள் அனைவரும் வரியப்பொல மற்றும் போகம்பரை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த பதற்ற நிலையைத் தொடர்ந்து பெண் கைதிகள் முன்னெடுத்த போராட்டம், சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்கவின் தலையீட்டுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆண் கைதிகளை இடமாற்றும் பணிகள் தற்போதும் தொடர்வதுடன், இன்னும் 1,000 வரையான கைதிகள் அங்கு எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சிறைகளின் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் விசேட அறிவித்தலின்படி, மஹமோதர மற்றும் பழைய போகம்பர வளாகங்கள் தற்காலிக சிறைச்சாலைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு கைதிகள் அங்கு தற்காலிகமாக தடுத்து வைக்கப்படவுள்ளனர்.
இந்திய பிரஜை மரணம்
இம்மோதலில் எச். உன்னிகிருஷ்ணன் (வயது 73) என்ற இந்திய பிரஜையும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இம் மரணம் குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதையும் வெளியிடாத போதிலும், இது தொடர்பான உத்தியோகபூர்வ 'வாய்மொழி குறிப்பு' ஒன்றை வெளிவிவகார அமைச்சுக்கு இந்திய தூதரகம் அனுப்பியுள்ளது. எவ்வாறெனினும், உயிரிழந்த மற்றும் அங்குள்ள ஏனைய இந்திய கைதிகள் பற்றிய மேலதிக விபரங்களை இலங்கை சிறைச்சாலை திணைக்களமும் இந்திய தூதரகமும் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் அங்குனுகொலபெலஸ்ஸ, பூஸா மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளில் மூன்று கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து அண்மையில் அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் பூஸா சிறைகளுக்கு மாற்றப்பட்ட இரு கைதிகள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த மூன்று மரணங்கள் குறித்தும் பொலிஸாரால் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
டெங்கு அபாயம்: அதிக ஆபத்துள்ள வலய பாடசாலை, பல்கலைகழகங்களை இரு வாரங்களுக்கு மூடுமாறு கோரிக்கை - வைத்தியர் சமல் சஞ்சீவ
10 Jul, 2026 | 03:17 PM
(செ.கவிஷனா)
நாட்டில் தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு நோய் நிலைமையைக் கருத்திற்கொண்டு மேல் மாகாணம் உட்பட அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் உயர் ஆபத்துள்ள வலயங்களில் உள்ள அனைத்து அரச, அரச மற்றும் தனியார், தனியார் பாடசாலைகள் பல்கலைகழங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை குறைந்தது இரண்டு வார காலத்துக்காவது தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இக்காலப்பகுதியில் குறித்த கல்வி நிறுவனங்களின் வளாகங்களை முழுமையாக சுத்தம் செய்வது தொடர்பாக கல்வி உயர் கல்வி மற்றும் சுகாதார அமைச்சு என்பன உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
மேல் மாகாணம் உள்ளிட்ட தற்போது வரை சுமார் 70,000 பேர் உத்தியோகப்பூர்வமாக டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்ய்பட்டுள்ளது. உண்மை நிலவரங்களின்படி இந்த எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருக்கக்கூடும்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பாரியளவில் அதிகரித்து வருவதன் காரணமாகப் பல வைத்தியசாலைகள் தங்களது கொள்ளளவை மீறிச் செயற்படுகினறன. இதனால் சுகாதார ஊழியர்கள் கடுமையான பணிச்சுமைக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் நோயாளர்களுக்கு போதிய தங்குமிட வசதிகள் இன்மையால் பல நோயாளர்கள் வைத்தியசாலைகளில் கட்டில்களுக்கு கீழேயும் தாழ்வாரங்களிலும் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலை நோயாளர்களின் உயிருக்கு மேலும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
நோய் நிலைமை விபரீதமாகி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் பாடசாலைகளையோ அல்லது பல்கலைகழங்களையோ மூடுவதில் எவ்வித பயனும் இல்லை. எனவே கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து உடனடியாக இந்த நிறுவனங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார். நன்றி வீரகேசரி
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு
10 Jul, 2026 | 02:22 PM
(செ.சுபதர்ஷனி)
நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 34,828 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் தொடர்ந்து நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் மீள அதிகரிப்பைக் காண முடிகிறது. நோயாளர்களின் அதிகரிப்போடு வைத்தியசாலைகளின் வார்டுகளிலும் பாரியதொரு நெருக்கடி உருவாகியுள்ளது.
சிறுவர் வைத்தியசாலை முதல் தேசிய வைத்தியசாலை வரை, நோயாளர்களுக்கு வைத்திய ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் சிகிச்சை சேவைகளை வழங்கி வருகின்றனர்.
நாடு தழுவிய ரீதியில் இதுவரை 66,064 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக ஜீன் மாதம் மாத்திரம் 21,538 நோயாளர்கள் கண்டறியப்பட்டதோடு, இம் மாத்தழல் கடந்த 9 நாட்களில் 10,685 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 34,828 (52.72 சதவீதம்) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென் மாகாணத்தில் 10,372 (15.70 சதவீதம்) நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கண்டி, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.
டெங்கு பரவலின் அதிகரிப்பைத் தொடர்ந்து 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 46 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் சுகாதார சவாலாக உருவெடுத்துள்ள டெங்கு பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய தருணம் இது.
ஆகையால் தமது வீடு, தொழில்புரியும் நிறுவனம், பாடசாலை, மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சுற்றுப்புறச் சூழலில் நுளம்புகள் பரவுவதற்கு இடமளிக்காது, கழிவுகளை முறையாக அகற்றித் தூய்மையாக வைத்திருப்பது அனைவரது கடமை என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின் மூன்று பிரதான விமான நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்
10 Jul, 2026 | 01:11 PM
(செ.கவிஷனா)
இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரித்து, தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்கில் கட்டுநாயக்க, யாழ்ப்பாணம் மற்றும் மத்தள ஆகிய மூன்று பிரதான சர்வதேச விமான நிலையங்களையும் ஒரே நேரத்தில் நவீனமயமாக்குவதற்கான துரித உத்திகளைப் புதிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் வெள்ளிக்கிழமை (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் விமான போக்குவரத்துத் துறையை சர்வதேச தரத்துக்கு உயர்த்தி நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் நோக்கில் கட்டுநாயக்க, யாழ்ப்பாணம் மற்றும் மத்தள ஆகிய மூன்று பிரதான சர்வதேச விமான நிலையங்களையும் ஒரே நேரத்தில் நவீனமயமாக்குவதற்கான துரித திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆண்டுக்கு 11.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளின் எண்ணிக்கை 2032 ஆம் ஆண்டளவில் 16.5 மில்லியனாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், அதன் உட்கட்டமைப்பை விரிவாக்குவது அவசியமாகியுள்ளது.
இதற்கமைய, பல வருடங்களாக முடங்கிக்கிடந்த ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பின் நிதி உதவியுடனான இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகள், புதிய அரசாங்கத்தின் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை அடுத்து வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த புதிய முனையம் மூலம் 96 புதிய செக்-இன் கவுண்டர்கள், 16 போர்டிங் கேட்டுகள் மற்றும் 26 குடிவரவு கவுண்டர்கள் போன்ற பல நவீன வசதிகள் சேர்க்கப்படவுள்ளதுடன், பயணிகள் தங்களது பொதிகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க புதிய ஸ்கேனர் மற்றும் கன்வெயர் பெல்ட் முறைமைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான பிராந்திய விமான சேவைகளை வழங்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு முனையங்கள் மற்றும் பயணிகள் தங்கும் கூடங்களை விரிவுப்படுத்தி நவீனமயமாக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான இடவசதிகளும் இதன் மூலம் விரிவாக்கப்படவுள்ளன. மறுபுறம், ஆரம்பம் முதலே கடுமையான நட்டத்தில் இயங்கி வரும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை அரசு-தனியார் பங்களிப்புடன் இலாபகரமானதாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக கோரப்பட்ட முதலீட்டு ஆலோசனைகளுக்கு இணங்க, சுமார் 45 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது விருப்பக் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதிலிருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து, விமானப் போக்குவரத்து மட்டுமன்றி, விமானப் சரக்குக் கையாளுதல், தளபாட வசதிகள், விமானப் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் விமானங்கள் பராமரிப்பு போன்ற பன்முகப்படுத்தப்பட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்த்து, மத்தள விமான நிலையத்தை ஒரு வர்த்தக மையமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒட்டுமொத்த மறுசீரமைப்புத் திட்டங்களும் நிறைவடையும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அது பாரியதொரு பங்களிப்பை வழங்கும் என்றார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment