வல்லவன் ஒருவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

1962ம் வருடம் ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் புது விதமான ரசனைக்கு உள்ளானார்கள். அந்த வருடம் தான் முதலாவது ஜேம்ஸ் பாண்ட் படமான Dr No திரைக்கு வந்து ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வசூலையும் அள்ளியது. இப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் 007 ரகசிய உளவாளியாக நடித்த சீன் கனரி அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து மேலும் சில ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தொடர்ந்து நடித்தார். இத்தகைய படங்களின் தாக்கம் இந்திய திரையுலகிலும் , குறிப்பாக தமிழ் சினிமாவிலும் பரவத் தொடங்கியது. அதன் வெளிப்பாடாக 1966ல் வெளிவந்த படம் தான் வல்லவன் ஒருவன். 


 
நான்காண்டுகள் கழித்தே ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இத்தகைய

படம் ஒன்று உருவானது. காரணம் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் தமிழில் நடிப்பதற்கு தோதான நடிகர் ஒருவர் அதுவரை கிடைக்காததே ஆகும். ஜெய்சங்கர் நடிக்கத் தொடங்கி , இரு வல்லவர்கள் படத்தில் நடித்த பின்னரே அவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாக மாற்றும் எண்ணம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் ராமசுந்தரத்துக்கு உருவானது. 26 வயது இளைஞனான , அழகனாக, துடிப்புடன் காணப்பட்ட ஜெய்சங்கரை முதன்மைப் படுத்தி வல்லவன் ஒருவன் திரைக்கு வந்தது. 

 ஆங்கிலப் படங்களில் ஜேம்ஸ் பாண்டுக்கு எவரையும் சுட, எவளுடனும் சரசமாட, எந்த நாட்டுக்கும் போக, எந்த வாகனத்தையும் செலுத்த நிரந்தர அனுமதி உண்டு. ஆனால் தமிழில் இந்த சுதந்திரம் சற்று மட்டுப்படுத்தப் பட்டது. குறிப்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க அழகிகளை வலையில் வீழ்த்துவது, அல்லது அவர்களின் வலையில் வீழ்ந்தது போல் நடிப்பது என்பன ஓர் எல்லைக்கு உட்பட்டே காண்பிக்கப்பட்டன. பாடல் காட்சிகள் மூலம் அவை ரசிகர்கள் மத்தியில் கடத்தப் பட்டன. 


நாட்டில் தீவிரவாத கும்பல் ஒன்று பேரழிவு ஒன்றுக்கு திட்டமிட்டு செயற்படுவதை துப்பறிய சென்ற சி ஐ டி துரைராஜ் அந்த கும்பலினால் சுட்டுக் கொல்ல படுகிறார். அதனைத் தொடர்ந்து ஆயுத கும்பலை கண்டு பிடித்து அழித்தொழிக்க பம்பாயில் இருந்து சி ஐ டி சங்கர் சென்னைக்கு வருகிறார். ஆந்தை மார்க் தீப்பெட்டி தொழிற்சாலை மீது அவரின் சந்தேகம் விழுகிறது. அதே சமயம் மனோதத்துவ டாக்டரான சற்குணம் மீதும் அவரின் சந்தேகம் வலுக்கிறது. இதனிடையே டாக்டரின் தங்கை தாரா சங்கரின் மனதில் இடம் பெறுகிறாள். சற்குணத்தின் காதலி சுசிலா , மற்றொரு அழகியான ரஜனி இருவரும் மேனன் என்ற இரகசிய துப்பறியும் நிபுணரிடம் பணி புரிகிறார்கள். அவர்கள் இருவர் மீதும் சங்கரின் சந்தேகக் கண் நீள்கிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் சங்கரின் முயற்சிக்கு சதாவும், அவனின் காதலி அம்முக்குட்டியும் உதவுகிறார்கள். சங்கர் இம் முயற்சியில் எவ்வாறு வெற்றி பெற்று வல்லவன் ஒருவன் ஆகிறான் என்பதே படத்தின் விறுவிறுப்பு. 


ஜாடிக்கேற்ற மூடி போல் பாத்திரத்துடன் பொருந்துகிறார் ஜெய்சங்கர்.

படம் முழுவதும் கலங்காமல், அதிர்ச்சி அடையாமல் சர்வ சாதாரணமாக சவால்களை எதிர் கொள்கிறார். எதிரிகளை பந்தாடுகிறார். ஜூடோ, கராத்தே என்று பாயும் புலியாகவும், காதல் காட்சிகளில் இதமாகவும் நடித்து ரசிகர்களை தன் பக்கம் வசீகரித்து விடுகிறார் . இவரின் ஜோடி எல் . விஜயலஷ்மி. கொடி இடையுடன் இளமை ததும்ப வந்து ஆடிப் பாடி ரசிகர்களின் கவர்கிறார். புது நடிகையான விஜயலலிதா இப் படத்தில் தான் வில்லியாக நடிக்கத் தொடங்கினார். மற்றொரு நடிகையான ஷீலா காதலுக்காக தீயவர்களுக்கு துணை போகிறார். 

 
ஏற்கனவே ஒரு விரல் படத்தில் நடித்த தேங்காய் சீனிவாசன் இப்

படத்தின் மூலம் தன்னை திரையில் தக்க வைத்துக் கொண்டார். அவர் பேசும் மெட்றாஸ் பாஷை, அம்முக்குட்டி புஷ்பமாலா பேசும் மலையாளம் இரண்டும் சேர்ந்து சிரிப்பை தாராளமாக வரவழைக்கிறது. அம்முக்குட்டியின் ஹோட்டலில் உப்புமாவில் காணப்படும் கரப்பான் பூச்சியை தேங்காய் விழுங்குவது நல்ல தமாஷ். 

 படத்தில் டாக்டர் சற்குணமாக வரும் ஆர் .எஸ் . மனோகர் பாத்திரத்துக்கு பொருந்துகிறார். அலட்டல் இல்லாமல் நடிக்கிறார். அதே போல் ஸ்ரீராம் நடிப்பும் டீசண்ட். மலைக்கள்ளன் காலத்தில் இருந்து நடித்த அவருக்கு இதுவே கடைசிப் படமானது. இவர்களுடன் கே .கே .சௌந்தர், பக்கிரிசாமி, ஆகியோரும் நடித்தனர். 

 படத்தில் ஐந்து பாடல்கள். மெட்டுக்கு போடப்பட்ட பாடல்கள். ஆனாலும் கண்ணதாசனின் கவி வரிகள் சோடை போகவில்லை. இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது, தொட்டு தொட்டு பாடவா, பளிங்கினால் ஒரு மாளிகை, முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா, அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு பாடல்கள் வேதாவின் இசையில் , கவிஞரின் வரிகளில் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது என்பது போல் அறுபத்தாண்டை கடந்தும் இனிக்கின்றன . பாடலில் மட்டுமன்றி பின்னணி இசையிலும் பின்னியிருந்தார் வேதா. 


படத்துக்கான கதை வசனத்தை ஏ . எல். நாராயணன் எழுதினார்.

வசனங்கள் ரசிக்கும் படி இருந்தன. நீண்ட காலம் படத்துறையில் வசனகர்த்தாவாக விளங்கிய நாராயணன் இடையில் சில காலம் காணாமல் போய் இந்தப் படத்துக்கு எழுதியதன் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். படத்தின் நடனக் காட்சிகளை பி. ஜெயராமன் அமைத்திருந்தார். இந்தப் படத்தில் ஜூடோ சண்டைக் காட்சியை அமைத்ததன் மூலம் ரத்தினம் ஜூடோ ரத்தினம் ஆனார். இதிலிருந்து பிரபலமும் ஆனார். 



ஆங்கிலப் படமான Dr No , பிரெஞ்சு படமான Panic in Bangkok ஆகிய படங்களை தழுவி உருவான வல்லவன் ஒருவன் இளைஞர்களை வசீகரிக்கும் நோக்கத்தில் தயாரிக்கப் பட்டது. படத்தில் ஏராளமான ஆக்சன் காட்சிகள் இருந்தும் அவற்றை சி ஏ எஸ் மணி நுட்பமாக ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆனாலும் எனோ அவர் பிரபலமாகாமல் போய் விட்டார். எல் . பாலு படத்தை வேகம் குறையாமல் எடிட் செய்திருந்தார். படத்தை ஆர். சுந்தரம் விறுவிறுப்பாக இயக்கி இருந்தார். 

 1966ல் வெளிவந்த இந்தப் படம் பின்னர் இலங்கைக்கு பாடமானது. படத்தில் காட்டப்பட்டது போல் பின்னர் இலங்கையில் ஜே வி பி தீவிரவாத இயக்கமும், தொடர்ந்து ஈழப் போராளிகளின் இயக்கமும் உருவாகி வல்லவன் ஒருவன் பட காட்சிகளை நடைமுறை படுத்தி விட்டன!




No comments: