இலங்கைச் செய்திகள்

“சிலோன் டீ வில்லேஜ்” தேசிய வேலைத்திட்டம் இன்று நுவரெலியாவில் ஆரம்பம்

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல் நீட்டிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் குறித்து விசாரணை செய்ய இரு பொலிஸ் குழுக்கள் நியமனம்!

இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத் தடுக்க அறிவியல் ரீதியான பாலியல் கல்வி அவசியம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான பண மோசடி வழக்கு : ஆகஸ்ட் 31இல் முழுமையான நீதிமன்ற விசாரணை!    



“சிலோன் டீ வில்லேஜ்” தேசிய வேலைத்திட்டம் இன்று நுவரெலியாவில் ஆரம்பம் 

16 Jul, 2026 | 11:59 AM

இலங்கையில் 2030ஆம் ஆண்டுக்குள் தயாரான தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராம் அளவிற்கும், தேயிலை ஏற்றுமதி வருவாயை அமெரிக்க டொலர் 2.5 பில்லியன் அளவிற்கும் உயர்த்தும் தேசிய இலக்கை அடைவதற்காக, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் “Ceylon Tea Village” (சிலோன் டீ வில்லேஜ்) எனப்படும் 500 தேயிலை கிராமங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று (15) நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்டது. 

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹல்கொல்ல கிராமத்தில், ஹப்புகஸ்தலாவ நீர்த்தேக்கத்துக்கு முன்பாக அமைச்சர் சமந்த வித்யரத்ன தலைமையில் தேசிய ரீதியில் இத்திட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டம் இலங்கையின் சிறு தேயிலை


தோட்டத்துறையை நவீனமயப்படுத்துதல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் தேயிலைத் தொழில்துறையின் நிலைத்தன்மையான வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் செயற்படுத்தப்படுகிறது.

இதன்படி, இன்றைய தினம் (16) இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 144 தேயிலை ஆராய்ச்சி நிலையங்களை உள்ளடக்கும் வகையில் 144 தேயிலை கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுல சுரவீர ஆராச்சி, கிருஷ்ணன் கலைச்செல்வி, அனுஷா திலகரத்ன உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

மேலும், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் நிமல் உடுகம்பொல, இலங்கை தேயிலை சபைத் தலைவர் ராஜ்பால் ஒபேசேகர, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் கோஸ்டா, அரச தோட்டக் கழகத் தலைவர் சிசிர ரணதுங்க, தென்னை வளர்ச்சி சபைத் தலைவர் டாக்டர் சுனிமல், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைத் தலைவர் அங்கி உள்ளிட்டோர் மற்றும் அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.   நன்றி வீரகேசரி 




ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல் நீட்டிப்பு  

17 Jul, 2026 | 02:13 PM

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் ரகித ராஜபக்‌ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித் அபேசிங்க மற்றும் முன்னாள் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருண ஆகியோரின் விளக்கமறியலை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

அதன்படி, இந்த மூவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும்


விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஹரக் கட்டாவின் மனைவியிடம் முற்பணமாக 1200 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.   நன்றி வீரகேசரி 





முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் குறித்து விசாரணை செய்ய இரு பொலிஸ் குழுக்கள் நியமனம்!  

17 Jul, 2026 | 11:24 AM

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (17)  வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலபே, தலகேன பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு உயிரை மாய்துக்கொண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து அவர் உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர், இது தொடர்பான மரண பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் இந்த மரணம் குறித்த பின்னணி மற்றும் சூழ்நிலைகள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 





இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத் தடுக்க அறிவியல் ரீதியான பாலியல் கல்வி அவசியம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  

Published By: Vishnu

17 Jul, 2026 | 05:00 AM

 (செ.சுபதர்ஷனி)

கடந்த 2025  ஆம் ஆண்டு மாத்திரம் நாட்டில் 8,700 இளம்வயதுக் கர்ப்பங்களும், 874 எச்ஐவி தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதுடன்,  அவ்வாறு எச்ஐவி தொற்றுக்கு அளான  107 பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாவர் ஆகையால் எதிர்காலச் சந்ததியினரைப் பாதுகாப்பதற்காக வயதுக்கேற்ற அறிவியல் ரீதியான பாலியல் கல்வியை வழங்குவது அவசியம் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (15)  தேசிய பாலியல் கல்வி வழிகாட்டல்கள் வெளியீட்டு  நிகழ்வு  சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ , மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன  மற்றும் அமைச்சின் செயலளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

 இதன்போது அமைச்சர் உரையற்றுகையில்,

அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள மூன்று வழிகாட்டிப் பிரசுரங்களும் வெறும் ஆவணங்கள் அல்ல; அவை பிள்ளைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும். ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகள் பல தசாப்தங்களுக்கு முன்னரே இத்தகைய அறிவியல் அணுகுமுறைகளை ஆரம்பித்துவிட்டன. எமது நாட்டில் இந்த நடவடிக்கைகள் தாமதமடைந்தாலும், தற்போது காத்திரமான கட்டத்தை எட்டியுள்ளோம்.

கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாட்டில்  8,700 இளம்வயதுக் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. அத்தோடு  874 எச்ஐவி தொற்றாளர்களும்  நாட்டில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்களுள் 107 பேர்  15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதற்கும் மேலதிகமாக பொலிஸ் நிலையங்களில்  10,455 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் இவ்வாறு முறைபாடளிக்கப்படாமல் எத்தனையோ பாலியல் துஷ்பிரியயோகங்கள்  சமூகத்தில் இடம்பெற்றுள்ளமையும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாக உள்ளது.

பிள்ளைகளின் உடலில் ஏற்படும்  ஓர்மோன் மாற்றங்களால் ஏற்படும் சமூகத் தொடர்புகளைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, அவர்களுக்குச் சரியான விழிப்புணர்வை வழங்க வேண்டும். இந்த புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் ஒரு வாழ்க்கையும் எதிர்காலமும் ஒளிந்துள்ளது. இதற்குச் சமூகம் என்ற ரீதியில் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, போதிய விழிப்புணர்வு இல்லாததே சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

உலகெங்கிலும் இதற்குப் பல்வேறு தடைகள் காணப்பட்டாலும், அவற்றுக்கு அறிவியல் ரீதியான பதில்கள் உள்ளன. எனவே, வயதுக்கேற்ற பாலியல் கல்வியை நாம் உறுதியுடன் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு  தடையை ஏற்படுத்த முன்னிற்பவர்கள்  எச்.ஐ.வி பரவல் மற்றும் இளம்வயதுக் கர்ப்பங்களின் சமூகப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இதுவொரு ஊடகக் காட்சியோ அல்லது அரசியல் திட்டமோ அல்ல காலங்கடந்தேனும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேசியப் பொறுப்பாகும் என்றார்.  நன்றி வீரகேசரி 






யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான பண மோசடி வழக்கு : ஆகஸ்ட் 31இல் முழுமையான நீதிமன்ற விசாரணை!    

16 Jul, 2026 | 01:31 PM

பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ மற்றும் அவரது பாட்டி டெய்ஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முழுமையான விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி இடம்பெறும் என  கொழும்பு மேல்நீதிமன்றம்  இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.   நன்றி வீரகேசரி 





No comments: