மூன்று முடிச்சு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தை அறிமுகப் படுத்தி ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்த கே . பாலசந்தர் தனது அடுத்த படத்தில் அவரை கதாநாயகனாக்கி ப்ரோமோஷன் கொடுத்தார். அதே போல் அபூர்வ ராகங்களில் கமல்ஹாசனை ஹீரோவாக்கியவர் இந்தப் படத்தில் அவரை சில காட்சிகளில் மட்டும் நடிக்க வைதித்திருந்தார். இப்படி இவர்களுக்கு நடிக்க சான்ஸ் கிடைத்தப் படம்தான் மூன்று முடிச்சு. 


 ரஜினிக்கு முதல் தடவையாக ஹீரோவாக நடிக்க கிடைத்த வாய்ப்பென்ற போதும் Anti Hero வாகத் தான் இதில் அவர் நடித்திருந்தார் . ஆனாலும் கிடைத்த வாய்ப்பை அவர் தவற விடவில்லை . 

 பிரசாத், பாலாஜி இருவரும் ஒரே அறையில் தங்கி ஒரே தட்டில்

உண்ணும் நெருங்கிய நண்பர்கள். இருவர் வாழ்விலும் செல்வி குறுக்கிடுகிறாள். இருவரும் செல்வியை காதலிக்க அவளின் காதல் பாலாஜி மீது போகிறது. பொறாமைத் தீயில் வேகும் பிரசாத் பாலாஜிக்குத் தெரியாமல் செல்வியை எரிச்சல் பட வைக்கிறான். அவனின் கீழ்த்தரமான எண்ணங்கள் , செயல்களை பற்றி செல்வி சொல்லும் எதையும் பாலாஜி காதில் வாங்கி கொள்வதாக இல்லை. நண்பனை நூற்றுக்கு நூறு நம்புகிறான். ஒரு நாள் மூவரும் படகு சவாரி செல்லும் போது பாலாஜி கடலில் விழுந்து விடுகிறான். செல்வி எவ்வளவோ கதறியும் நீச்சல் தெரிந்த பிரசாத் நண்பனை காப்பாற்ற மறுக்கிறான் . பாலாஜி இறக்கிறான். இனி செல்வி தனக்குத் தான் என்று எண்ணும் பிரசாத் செல்விக்கு மூன்று முடிச்சு போட்டானா அடைந்தானா என்பதே படத்தின் முடிச்சு! 

 படத்தில் நல்லவனாக , அப்பாவியாக வரும் கமல் அளந்து நடிக்கிறார் , அளவான காட்சிகளில் வந்து விட்டு போகிறார். படம் முழுதும் வருபவர் கவருபவர் ரஜினிதான். வரும் காட்சிகளில் எல்லாம் சிகரட்டை வாயில் தூக்கி தூக்கி போடுகிறார். வாயில் சிகரெட் இல்லாத போது வசனம் பேசுகிறார். ஆனாலும் முகபாவம் , உடல் மொழி மூலம் தன் வில்லத்தனத்தை பதிவு செய்து விடுகிறார். 

 ஸ்ரீதேவி மென்மையான நடிப்பை தருகிறார். தீயவனை அழிப்பதை

விட நாசுக்காக பழி வாங்கும் காட்சிகளில் சோபிக்கிறார். அவரின் வெகுளித்தனமான முகமும் உதவுகிறது. துணை நடிகையாக வரும் வை . விஜயா கவனம் பெறுகிறார். பாலசந்தரின் இந்தப் படத்திலும் எங்கே பூர்ணம் விசுவநாதன் இருப்பாரோ என்று எண்ணும் போது அவருக்கு பதில் கல்கத்தா விசுவநாதன் நடித்து ரசிக்கும் படி செய்து விடுகிறார் . கே . நடராஜ் , ரஜினியின் மனசாட்சியாக வந்து கவருகிறார். இவர்களுடன் சிவச்சந்திரன், ஒருவிரல் கிருஷ்ணராவ் , பேபி ராணி ஆகியோரும் நடித்தனர். 

 இப் படத்தின் சில காட்சிகள் கமலின் எல்டாம்ஸ் வீதி இல்லத்தில் படமாக்கப்பட்டது. படத்தில் நடிக்க ரஜினிக்கு இரண்டாயிரம் ரூபாயும், கமலுக்கு முப்பதினாயிரம் ரூபாயும், ஸ்ரீதேவிக்கு ஐந்தாயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டது. ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த முதல் படமும் இதுதான். 

 படத்தின் பாடல்கள் கண்ணதாசன். வசந்த கால நதிகளிலே , ஆடி

வெள்ளி தேடி உன்னை பாடல்கள் பிரபலமாகின, நான் ஒரு கதாநாயகி பாடல் கருத்துடன் , காட்சியுடன் கவர்ந்தது . எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். பி எஸ் லோகநாதன் ஒளிப்பதிவு செய்ய , பாலசந்தரின் ஆஸ்தான எடிட்டர் என் . ஆர் .கிட்டு படத் தொகுப்பை கையாண்டார். 

 படத்தை தன்னுடைய பாணியில் இயக்கியிருந்தார் பாலசந்தர் . அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் இரண்டிலும் இருந்தளவு பாலசந்தர் டச் இதில் இல்லை. ஆனாலும் படம் ஒன்றும் மோசமில்லை.

 ஓ சீதா கதா என்று தெலுங்கில் வெளி வந்த படக் கதையை தழுவி பாலசந்தர் இப் படத்தை உருவாக்கினார். ஆனால் இப்படி ஒரு கதைக்கு அவர் தெலுங்குக்கு போக வேண்டிய தேவையே இல்லை. இருபது வருடங்களுக்கு முன் நட்சத்திர நடிகர்களாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் எம் ஜி ஆர் , சிவாஜி இருவரும் இணைந்து கூண்டுக் கிளி படம் நடித்தனர். நண்பன் மனைவியை பெண்டாள நிலனைக்கும் சண்டாளனாக சிவாஜி நடித்தார். நண்பனாக எம் ஜி ஆர் நடித்தார். அன்றைய கால கட்டத்தில் இத்தகைய கதையை ரசிகர்கள் ஒதுக்கி தள்ளினார்கள். படம் தோல்வி கண்டு அதன் பின் சேர்ந்து நடிப்பதில்லை என்று இருவரும் முடிவெடுத்தார்கள். 

 இருபதாண்டுகள் கழித்து இதே போன்ற கதையை பாலசந்தர்

படமாக்கினார். ரசிகர்களின் ரசனையில் ஏற்பட்ட மாற்றம் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. 

 உச்ச நடிகர்களாக உருவாகிக் கொண்டிருந்த எம் ஜி ஆர் சிவாஜி இருவரும் இணைந்து நடித்த படக் கதையை பின் நாட்களில் உச்ச நடிகர்களாக உருவான கமல் ரஜினி இருவர் நடிப்பிலும் படமாக்கி ரசிகர்களை ஏற்றுக் கொள்ளும் படி செய்திருந்தார் பாலசந்தர்.

No comments: