உலகச் செய்திகள்

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7 பேர் பலி - ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: 4 ஆண்டுகால போர்நிறுத்தம் முறிந்தது!    



 இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

17 Jul, 2026 | 02:32 PM

இஸ்ரேலில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (17) அந்நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இஸ்ரேல் பாராளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடர் நடைபெற்றது. 

இந்த கூட்டத் தொடரில் ஏராளமான சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிப்பு விடுக்கப்பட்டது. 

இஸ்ரேல் பாராளுமன்றத்தின் 4 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேலில் தற்போது கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு, நப்தலி பென்னெட் முதலானோர் போட்டியிடவுள்ளனர். 

ஒக்டோபர் 27ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு, தேர்தலில் 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய அரசு தோற்றம் பெற்ற பின்னர், அப்புதிய அரசின் தலைமையில் புதிய பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 




ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7 பேர் பலி - ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை   

17 Jul, 2026 | 12:19 PM

ஈரான் மீது அமெரிக்கா நேற்று வியாழக்கிழமை (16) இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஈரானின் ஹர்முஸ்கன் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதல்களில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் மூன்று பாலங்கள், ஒரு ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் கூறுகிறது.

இரான்ஷஹ்ரில் உள்ள விமான நிலையம் தாக்கப்பட்டதில், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து மின் தடை ஏற்பட்டுள்ளது. கிஷ் தீவிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அங்கும் சில பகுதிகளில் தற்காலிக மின் தடை ஏற்பட்டுள்ளது. .

"போர் விமானங்கள், வான்வழி ட்ரோன்கள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட அமெரிக்கப் படைகள், ஈரானின் கடலோரக் கண்காணிப்பு மற்றும் வான் பாதுகாப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்பு மற்றும் கடல்சார் திறன்கள் போன்ற பல ஈரானிய இராணுவ இலக்குகளைத் துல்லியமான ஆயுதங்கள் மூலம் தாக்கிவிட்டன" என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் (சென்ட்கொம் - CENTCOM) தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை தொடர்ந்து ஈரான் - அமெரிக்க போர் மேலும் தீவிரமாகியிருக்கிறது. இந்நிலையில், "மத்திய கிழக்கு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட அமெரிக்க சேவை உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் விழிப்புடனும் பலத்துடனும், தயாராகவும் உள்ளனர்" என்று சென்ட்கொம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன் அமெரிக்கப் பொதுமக்களிடம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய முதன்மை நேரடி உரையில் போரில் தங்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் ஈரானில் பெரியளவில் வெற்றி பெற்று வருகிறோம், அந்த உழைப்பின் பலனை நீங்கள் மிக மிக விரைவில் காண்பீர்கள்" என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு    

13 Jul, 2026 | 11:56 AM

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகள் மீதான தனது தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியதையடுத்து, இன்று திங்கட்கிழமை (13) மசகு எண்ணெய் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக உலக சந்தை நிலைவரம் தெரிவிக்கிறது. 

இந்த விலை அதிகரிப்பானது ஹோர்முஸ் நீரிணை வழியிலான எரிசக்தி போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 2.34 அமெரிக்க டொலராக (அல்லது 3.08%) உயர்ந்து, ஒரு பீப்பாய் எண்ணெய் 78.35 அமெரிக்க டொலராகியுள்ளது. 

அதேவேளை அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் 2.21 அமெரிக்க டொலராக (அல்லது 3.09%) உயர்ந்து, ஒரு பீப்பாய் WTI எண்ணெய்  73.62 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

வார இறுதியில், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீதான தனது தாக்குதல்களைத் தெஹ்ரான் விரிவுபடுத்திய அதேவேளை, அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. 

ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து தொடர்பாக அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடந்துவரும் தாக்குதல்களின் சமீபத்திய வடிவமாக இது பார்க்கப்படுகிறது.

அனுமதிக்கப்படாத பாதையில் பயணித்த கப்பல் ஒன்று தாக்கப்பட்டதையடுத்து, தாம் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக ஈரான் முன்னதாக அறிவித்திருந்தது. இருப்பினும், நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையானது வணிகப் போக்குவரத்துக்காகத் திறந்துதான் உள்ளது என்று கூறினார்.

ஆனாலும், நேற்று வெறும் 6 கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணையைக் கடந்து சென்றுள்ளன என்று 'கெப்லர்' (Kpler) நிறுவனத்தின் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

தீவிரமடைந்து வரும் இந்தத் தாக்குதல்கள், கடந்த மாதம் கையெழுத்தான அமெரிக்க- - ஈரான் இடைக்கால ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த ஒப்பந்தமானது, நீரிணையை மீண்டும் திறப்பதையும், அடுத்த 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஒரு நாளைக்கு 4.1 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்தது. இருப்பினும், இது போர் தொடங்குவதற்கு முந்தைய அளவை விட ஒரு நாளைக்கு 9.4 மில்லியன் பீப்பாய்கள் குறைவாகவே உள்ளது என்று சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வெள்ளிக்கிழமை (10) வெளியிட்ட தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ANZ ஆய்வாளர்கள் வெளியிட்ட குறிப்பில், "வார இறுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்தச் சமீபத்திய மோதல்களுக்கு மிக விரைவாகத் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தற்போது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஐஜி (IG) சந்தை ஆய்வாளர் டோனி சிகாக்காமோர் கூறுகையில், எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மிதமான உயர்வு, தற்போதைய பதற்றத்தை ஒரு பலவீனமான போர்நிறுத்தத்துக்குள் ஏற்பட்ட தற்காலிக மோதலாகவே சந்தை பார்க்கிறது என்பதைக் காட்டுகிறது. இது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான முறிவைக் குறிக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், "இந்தக் கணிப்பு எவ்வளவு தூரம் துல்லியமானது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றும் அவர் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 






சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: 4 ஆண்டுகால போர்நிறுத்தம் முறிந்தது!    

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 12:58 PM

தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விமான நிலையம் மீது சவூதி அரேபியா குண்டுவீசியதாகக் குற்றம் சாட்டி, யேமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன் மூலம், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே நிலவி வந்த 4 ஆண்டுகால போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பாங்கான அப்ஹா சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுத்தி இராணுவ ஊடகப் பேச்சாளர் யஹ்யா சாரி தெரிவித்துள்ளார்.

"பயங்கரவாத ஹவுத்தி போராளிகளால் தெற்கு பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட" ஏவுகணைகளைத் தாங்கள் நடுவானில் மறித்து அழித்துள்ளதாக சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரு தரப்பிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு, சவூதி அரேபியா மீது ஹவுத்திகள் நடத்தியுள்ள முதல் தாக்குதல் இதுவாகும். சவூதியின் இந்தத் தாக்குதலை "நேரடி ஆக்கிரமிப்பு" எனக் குறிப்பிட்டுள்ள ஹூதிகள், இதன் மூலம் அமைதிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, யேமனின் வடக்குப்பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி அமைப்பு, சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி அரேபியா வான்வழித் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியது.

எனினும், இந்தத் தாக்குதலை சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற, யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கமே நடத்தியதாக உரிமை கோரியுள்ளது. யேமனின் இறையாண்மையை மீறி ஈரான் நாட்டு விமானம் ஒன்று சனாவில் தரையிறங்குவதைத் தடுப்பதற்காகவே அதன் ஓடுதளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக யேமன் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கியுள்ளது.

சவூதி வான்பரப்பைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பிற சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ஹவுத்திகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சவூதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியை செங்கடல் வழியேயான குழாய்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது. ஹவுத்திகளுடனான இந்த நேரடிப் போர் மீண்டும் தீவிரமடைந்தால், செங்கடல் வழியேயான சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகம் பெரும் சவாலுக்குள்ளாகும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், சனா விமான நிலையத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றை ஹவுத்திகள் தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், தங்களது பணியாளர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நீடித்து வரும் யேமனின் இந்த உள்நாட்டுப் போர், உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 




No comments: