நேபாள வெள்ளம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,377 ஆக அதிகரிப்பு ; 4,996 பேரைக் காணவில்லை
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு சென்றார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கியை தாக்கிக் கைப்பற்றியது ஈரான்
2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின் கவனத்தை ஈர்த்த தனுசியா செட்டி
இடைத்தேர்தல் வெற்றி வாக்குறுதி : அமெரிக்கர்களுக்கு தலா 5,000 டொலர் வழங்கப்படும்! – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
நேபாள வெள்ளம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,377 ஆக அதிகரிப்பு ; 4,996 பேரைக் காணவில்லை
Published By: P. Saranya
11 Sep, 2026 | 05:04 PM
நேபாள - திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆ்ம திகதி பனிப்பாறை உடைந்து போட்டேகேஷி நதியில் ஏற்பட்ட பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும் 4,996 பேரைக் காணவில்லை என அந்நாட்டு தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ நிலையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 08 மாவட்டங்களில் இருந்து மீட்புக் குழுவினர் இதுவரை 1,355 சடலங்களை கண்டெடுத்துள்ளனர். சித்வான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 363 பேரும், கிழக்கு நவல்வராசியில் 222 பேரும், மேற்கு நவல்வராசியில் 221 பேரும் உயிரிழந்துள்ளனர்.
காணாமல்போன 4,996 பேரில், நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த 2,340 பேரும், ரசுவா மாவட்டத்தைச் சேர்ந்த 1,967 பேரும் அடங்குவர். இதில் 589 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 100 பாதுகாப்புப் படை அதிகாரிகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 13,396 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேபாள இராணுவத்தின் 9,287 வீரர்கள், பொலிஸாரின் 7,912 பேர் மற்றும் ஆயுதப் பொலிஸ் படையின் 4,203 பேர் உட்பட 21,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் மலைப் பகுதிகளில் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காத்மாண்டுவிலிருந்து இயங்கும் இராணுவ மற்றும் தனியார் ஹெலிகொப்டர்கள் மூலம் இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளும் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
வெள்ளத்தினால் சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட ஆரம்பக்கட்ட இழப்பு ரூ. 387.5 பில்லியன் (2.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு அவசர நிதியாக ரூ. 160 மில்லியனை நேபாள அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. 3,500 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் 39 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ரசுவா பகுதியில் 78%, நுவாகோட்டில் 96 சதவீத மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்புக் கோபுரங்களின் 98 சதவீத சேவைகள் மீளமைக்கப்பட்டுள்ளன.
எனினும், இமயமலை மலைப்பாதைகளில் ஏற்பட்ட பலத்த நிலச்சரிவுகள் மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளமை நிவாரணப் பொருட்களைக் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதில் பெரும் சவாலாக உள்ளது என மனிதநேய அமைப்புகள் தெரிவித்துள்ளன. நன்றி வீரகேசரி
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு சென்றார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்
Published By: P. Saranya
11 Sep, 2026 | 12:20 PM
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (11) காலை டெல்லியை சென்றடைந்துள்ளார். புட்டினுடன் உயர்மட்டக் குழுவினர் சென்றுள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் புட்டின் மற்றும் உயர்மட்டக் குழுவினரை இந்திய வெளிவிவகார இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியை வரவேற்ற வெளிவிவகார ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவும் ரஷ்யாவும் சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த மூலோபாயக் கூட்டாண்மையின் அடிப்படையில் பல பரிமாண மற்றும் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே 'சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த உத்திசார் கூட்டாண்மை'யின் அடிப்படையில் பல பரிமாணங்களைக் கொண்ட நீண்டகால உறவுகள் நிலவுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் வெள்ளிக்கிழமை பிற்பகல் விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரேன் போர் ஆரம்பித்த பின்னர், ரஷ்யாவுக்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் புட்டின் நேரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் சனிக்கிழமை (12) ஆரம்பிக்கும் இரண்டு நாள் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டிற்கு 04 ஆவது முறையாக இந்தியா தலைமை வகிக்கிறது. நன்றி வீரகேசரி
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கியை தாக்கிக் கைப்பற்றியது ஈரான்
09 Sep, 2026 | 11:16 AM
அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கியை ஹோர்முஸ் நீரிணையின் நுழைவுப் பகுதியில் வைத்துத் தங்கள் புரட்சிகரக் காவல் படை (IRGC) கைப்பற்றியதாக ஈரான் செவ்வாய்க்கிழமை (8) அறிவித்துள்ளது.
இந்த ட்ரோன் பிராந்திய கடற்பகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு நாளுக்கும் மேலாக இயங்காமல் கோளாறடைந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கி, கலிபோர்னியாவின் 'அண்டுரில்' (Anduril) என்ற பாதுகாப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Dive-LD என்ற பெரிய ரகத் தன்னாட்சி நீர்மூழ்கியாகும். (Autonomous Underwater Vehicle).
19 அடி (5.8 மீட்டர்) நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கியால் தொடர்ந்து 10 நாட்கள் வரை இயங்க முடியும்.
கடலடி கண்ணிவெடிகளைக் கண்டறிதல், கடற்பரப்பை வரைபடமாக்குதல், உளவுத் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் / குழாய்களைப் பரிசோதித்தல் போன்ற பணிகளை இது மேற்கொள்ளும்.
இராணுவ நடவடிக்கைகளின்போது நீருக்கடியிலான ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் விதத்தை இதனூடாக கண்டறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின் கவனத்தை ஈர்த்த தனுசியா செட்டி
07 Sep, 2026 | 08:55 PM
வியாட்நாம் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியான 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகு ராணி பட்டத்தை டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா வென்றிருந்தாலும், தனுசியா செட்டி என்ற பெயர் தமிழர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.
உலக அழகு ராணி போட்டியில் 3ஆம் இடத்துக்கு தெரிவான அவர், மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி பெண் என்பது உலகத் தமிழ் சமூகத்துக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகின் 100 ற்கும் மேற்பட்ட நாடுகளின் போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், தனது அறிவாற்றல், தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான தோற்றத்தின் மூலம் தனுசியா உலக மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
தனுசியா ஆசிரியராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வரும் நிலையில் இளைஞர்களின் கல்வி, தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ வளர்ச்சி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும், பல்வேறு நிகழ்ச்சிகளில் வலியுறுத்தி வருகிறார்.
சமூக அக்கறை மற்றும் தெளிவான கருத்துக்களே அவரை ஒரு சாதாரண அழகிப்போட்டி போட்டியாளரிலிருந்து தனித்துவமான ஆளுமையாக மாற்றியுள்ளது என கூறினால் அது மிகையாகாது.
சர்வதேச அழகு ராணி போட்டியின் போது ஆங்கிலம், மலாய், மாண்டரின் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசியது அவரது தனித்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
“மாற்றம் என்பது நமக்குள் இருந்தே தொடங்க வேண்டும்” என்ற கருத்தை நான்கு மொழிகளிலும் பகிர்ந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிற நிலையில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு, சர்வதேச மேடையில் தமிழ் மொழி ஒலித்த தருணத்தினை எண்ணி பெருமிதம் கொள்கின்றனர்.
உலக அரங்கில் தமிழ் மொழியைப் பெருமையுடன் பேசியதோடு, தன்னம்பிக்கையையும் கலாசார அடையாளத்தையும் இணைத்து வெளிப்படுத்திய விதம் பல இளம் பெண்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. நன்றி வீரகேசரி
இடைத்தேர்தல் வெற்றி வாக்குறுதி : அமெரிக்கர்களுக்கு தலா 5,000 டொலர் வழங்கப்படும்! – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
10 Sep, 2026 | 11:15 AM
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி காங்கிரஸ் அவையின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 அமெரிக்க டொலர் (சுமார் $1.35 டிரில்லியன் செலவில்) "ட்ரம்ப் டிவிடெண்ட்" (Trump dividend) என்று பெயரிடப்பட்டுள்ள நிதி உதவி வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை (9) டெக்சாஸில் உள்ள டாலஸ் நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் முதலாவது இடைத்தேர்தல் மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், வாக்காளர்களைக் கவர இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
"நான் தேர்தலில் போட்டியிடுவதாக நினைத்துக் கொண்டு வாக்களியுங்கள்" என்றும் அவர் ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
“குடியரசுக் கட்சியினருக்கு வாக்களியுங்கள்; வரும் தலைமுறைகளுக்கு இந்த உலகையே நாம் நமக்குப் பின்னால் விட்டுச் செல்வோம்” என்றும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிதி உதவித் திட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படும் அல்லது இதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பது குறித்து தெளிவான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சுமார் 27 கோடி (270 million) அமெரிக்கர்களுக்கு இந்தத் தொகையை வழங்குவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் ஈரான் போர் குறித்த மக்களின் அதிருப்திக்கு மத்தியில், ட்ரம்பின் இந்த உரை வாக்காளர்களை எந்தளவுக்குக் கவரும் என்பதும் அமெரிக்காவில் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment