இலங்கைச் செய்திகள்

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு சுதந்திரத்துக்கான விருது

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் : எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே முக்கிய கலந்துரையாடல்!

ஒக்டோபரில் கனமழை, அதைத்தொடர்ந்து கடும் வறட்சி: எல் நினோ குழு எச்சரிக்கை

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா: இலக்கிய விமர்சனப் போட்டியில் யாழ். வேம்படி மாணவி அபிநயா தேசிய ரீதியில் முதலிடம்!



கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு சுதந்திரத்துக்கான விருது

11 Sep, 2026 | 05:33 PM

(நா.தனுஜா)

இலங்கை மக்களின் சுதந்திரம் மற்றும் சமூக வாழ்வுக்கான இடைவெளியை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவின் அயராத முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 'அட்வகாட்டா' அமைப்பு அவருக்கு சுதந்திரத்துக்கான விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் இருந்து ஆரம்பமான பாக்கியசோதி சரவணமுத்துவின் பயணம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பல்லின ஜனநாயகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்குப் பெரிதும் பங்களிப்பு செய்திருப்பதாக அட்வகாட்டா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அற்கமைய அட்வகாட்டா அமைப்பின் ஏற்பாட்டில் முதன்முறையாக வியாழக்கிழமை (10) கொழும்பில் நடைபெற்ற 'ஏசியா லிபர்ட்டி ஃபோரம்' நிகழ்வில் அட்வகாட்டா அமைப்பின் கல்விக்குழுத் தலைவர் கலாநிதி சரத் ராஜபத்திரனவால் பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு சுதந்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது.

1990களில் ஏற்பட்ட தேசிய அரசியல் நெருக்கடியை அடுத்து லண்டனில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய பாக்கியசோதி சரவணமுத்து, புதிதாக நிறுவப்பட்ட மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தை தனது தலைமைத்துவத்தின்கீழ் வழிநடத்தினார். இதனூடாக சிவில் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தல், சுயாதீன தேர்தல்களை உறுதிப்படுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவரல் என்பவற்றை முன்னிறுத்தி கொள்கை ரீதியில் போராடினார்.

ஆசிய பிராந்தியம் முழுவதிலும் இருந்து புத்திஜீவிகள், கொள்கை வகுப்பாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த 'ஏசியா லிபர்ட்டி ஃபோரம்' நிகழ்வு, மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த பாக்கியசோதி சரவணமுத்துவின் பங்களிப்புக்கான அங்கீகாரமாக அமைந்தது.    நன்றி வீரகேசரி 



 



22ஆவது அரசியலமைப்பு திருத்தம் : எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே முக்கிய கலந்துரையாடல்!

11 Sep, 2026 | 07:45 PM

(நமது நிருபர்)

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று (11) நடைபெற்றுள்ளது.

சுதந்திர செயற்பாட்டு மையம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழுவினரிடையே, ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பாராளுமன்றத்தில் 22ஆவது திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏனைய அரசியல் பிரிவுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 

மேலும், இது தொடர்பாக அடுத்த வாரம் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டுச் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை இணைந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் இதன்போது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, டொக்டர் கவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஜெ.சி. அலவத்துவல, சுஜித் சஞ்ஜய பெரேரா மற்றும் சட்டத்தரணி சீரல் லக்திலக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுதந்திர செயற்பாட்டு மையத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமநாத் தொலவத்த, சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட பல பிரதிநிதிகள் பங்கேற்றனர்.   நன்றி வீரகேசரி 





ஒக்டோபரில் கனமழை, அதைத்தொடர்ந்து கடும் வறட்சி: எல் நினோ குழு எச்சரிக்கை

11 Sep, 2026 | 02:34 PM

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு பதிவாகக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்றும் எல் நினோ தொடர்பான அமைச்சரவைக் குழுவின் பிரதிநிதி விஜேமன்ன எச்சரித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பசுபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைமைகள் கடந்த மாதத்தில் மேலும் வலுவடைந்துள்ளன. முக்கிய கண்காணிப்புப் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலை நிலவுவதை உலகளாவிய சமீபத்திய கணிப்புகள் காட்டுகின்றன.

செப்டம்பர் மாதத்தின் எஞ்சிய இரண்டு வாரங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த மழையே பதிவாகும் என்ற போதிலும், இம்மாத இறுதியிலிருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும்.

எல் நினோ என்பது இலங்கைக்கு வெறும் வறட்சியை மட்டும் குறிக்காது. நாட்டின் பருவமழைக் சுழற்சிக்கு ஏற்ப இதன் தாக்கம் மாறுபடும். அதன்படி, ஒக்டோபர் - நவம்பர் மாதங்களில் நிலவும் இரண்டாம் இடைப் பருவமழை காலத்தில் நாடு முழுவதும் பரவலாக, வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு மழைப்பொழிவு கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தை விட வறட்சியான சூழல் நிலவக்கூடும். இது கடுமையான நீர் பற்றாக்குறை ஆபத்தை உருவாக்கக்கூடும். அத்துடன், இக்காலகட்டத்தில் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலையும் ஒப்பீட்டளவில் உயர்வடைந்தே காணப்படும்.

எனவே, வரவிருக்கும் அதிக மழைப்பொழிவைச் சரியாகப் பயன்படுத்தி நீர் நிலைகளை நிரப்பிக் கொள்வதுடன், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வரவிருக்கும் வறட்சி நிலையை எதிர்கொள்ள முறையான நீர் முகாமைத்துவ திட்டங்களை அதிகாரிகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

நிலைமையை மதிப்பிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழு தொடர்ந்து கூடி ஆலோசித்து வருகிறது. என்றார்.   நன்றி வீரகேசரி 





அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா: இலக்கிய விமர்சனப் போட்டியில் யாழ். வேம்படி மாணவி அபிநயா தேசிய ரீதியில் முதலிடம்!

13 Sep, 2026 | 03:57 PM

கொழும்பு கல்வி அமைச்சில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித்தின விழாப் போட்டிகளில், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் சிரேஸ்ட மாணவத் தலைவி செல்வி அபிநயா றஜீபன் தேசிய ரீதியில்முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இலக்கிய விமர்சனம் (பிரிவு 4) போட்டியில் திறமையை வெளிப்படுத்தி இவர் இந்த முதலிடத்தைச் சுவீகரித்துள்ளார்.

இதன்மூலம் நடனம், இலக்கியம், பேச்சு ஆகிய பல்வேறு கலை மற்றும் இலக்கியத்துறைகளில் இவர் பெற்றுக்கொண்ட 10வது தேசிய விருது இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மாணவியின் இச்சாதனையை பாடசாலைச் சமூகமும் பிரதேச மக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 








No comments: