துணிவே துணை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பிரபல எழுத்தாளர், நாவலாசிரியர் தமிழ்வாணன் அவர்களின்


நூற்றாண்டு இந்த ஆண்டு . ( 1926-1977) தான் ஆசிரியராக இருந்த கல்கண்டு வார இதழில் அவர் எழுதிய நாவல்கள், கேள்வி பதில் , சுய முன்னேற்ற கட்டுரைகள் ஆயிரக் கணக்கான இளைஞர்களை வசீகரித்தன . ஒரு நட்சத்திர எழுத்தாளராக அவர் திகழ்ந்தார். அவருடைய தாரக மந்திரமாக திகழ்ந்தது துணிவே துணை என்ற பதத்தை பெயராக கொண்டு 1976ல் ஒரு படம் வெளி வந்தது. 


 குறுகிய காலத்துக்குள் நூறு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து விட்ட ஜெய்சங்கர் நடித்த கலர் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி அவர் கலரில் நடித்து வெற்றி கண்ட படம்தான் இந்த துணிவே துணை.

 இராமநாதபுரம் பக்கத்தில் பொன்வயல் என்ற கிராமம் . அங்குள்ளவர்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆதலால் அங்கே ஒரு போலீஸ் ஸ்டேஷனே இல்லை. ஆனால் புதியவர்கள் எவரும் அக் கிராமத்துக்குள் வரவேற்கப் படுவதில்லை. உள்ளே வந்தவர்கள் உயிரோடு திரும்புவதும் இல்லை. இதனைத் துப்பறிய செல்லும் சி ஐ டி அதிகாரி விஜயகுமார் இரத்தம் கக்கி இறக்கிறார். அதனைத் தொடர்ந்து சி ஐ டியான அவரின் தம்பி ஆனந்த் பொன்வயலுக்கு செல்கிறார் . அங்கு அவருக்கு பல விபரீத அனுப்பவங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் இருந்து எவ்வாறு மீண்டு உண்மைகளை கண்டு பிடித்தார் என்பதே துணிவே துணை! 

 படத்தின் ஹீரோ ஜெய்சங்கர். இரண்டு கெட்டப்புகளில் வருகிறார்.

முரடன் தயாள் வேடம் கவருகிறது. வித்தியாச மான குரலில் பேசி அசத்துகிறார். சண்டைக் காட்சிகளிலும் தூள் கிளப்புகிறார். இவரை தீர்த்துக் கட்ட அசோகன், செந்தாமரை, கே. கண்ணன், கள்ளபார்ட் நடராஜன், எஸ் வி ராமதாஸ், கே ஆர் ராம்சிங் என்று ஒரு கோஷ்டியே மோதுகிறது. போதாக் குறைக்கு ராஜசுலோசனா வேறு இவர்களின் தலைவியாக வந்து சவால் விடுகிறார். இவர்களுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளிராஜன், பகோடா காதர் வகையறாக்களும் சேர்ந்து கொள்கிறார்கள். அனேகமாக இப் படத்தின் எல்லா பிரதான பாத்திரங்களும் கொடியவர்களாகவே வருகிறார்கள். ஜெயப்ரபா கதாநாயகியாக வந்தாலும் கவரவில்லை. ஆகாயத்தில் தொட்டில் கட்டி பாடலும் அபர்ணாவின் தோற்றமும் மிரட்டுகின்றன. 

 இதயக்கனி படத்தில் வில்லியாக நடித்த ராஜசுலோசனா இதிலும்

அதே ஸ்டைலில் வில்லியாக வந்து ஒரு கூட்டத்தையே ஆட்டிப் படைக்கிறார் . நீண்ட நாட்களுக்கு பிறகு வண்டியோட்டியாக வரும் மகாதேவி பட புகழ் ராம்சிங்கின் நடிப்பும் கவர்கிறது . 

 படத்துக்கு இசை எம் எஸ் விசுவநாதன். பாடல்களை விட பின்னணி இசையில் பின்னி இருந்தார். கண்ணதாசன் பாடல்களை எழுதினார். சண்டைக் காட்சிகளை மாதவன் விறுவிறுப்பாக அமைத்திருந்தார். படத்தில் ஜெய்சங்கருடன் ஸ்டண்ட் மாஸ்டர் மாதவன் கத்திச் சண்டை போடுகிறார், கராத்தே வீரர் அழகு கராத்தே சண்டை போடுகிறார், ஸ்டண்ட் நடிகர் ராமகிருஷ்ணன் ஓடும் ரயிலில் மோதுகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்பாகவே இருந்தன. 

 படத்தின் கதை வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். இவர்

சம்பந்தப்பட்ட படங்களுக்கு எம் .எஸ் .விசுவநாதன் இசையமைப்பது மிகக் குறைவு. ஆனாலும் இப் படத்தில் அது நடந்தது. படத்தை பி .வி .தொளசிராமன் என்ற புது தயாரிப்பாளர் தயாரித்தார். புது ப்ரொடியுசர் என்ற போதும் தாராளமாகவே செலவு செய்திருந்தார். ஜெய்சங்கரின் தனிப்பட்ட முயற்சியால் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு இடம் பெற்றது. 

 படத்தை டைரக்ட் செய்தவர் எஸ் .பி .முத்துராமன். அவருக்கு இது புது முயற்சி . அது வரை காலமும் சமூகப் படங்களை இயக்கி வந்தவருக்கு முதல் முறையாக ஆக்சன் படம் ஒன்றை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தன் திறமையை காட்டியிருந்தார் அவர். என்றாலும் கேமராமேன் பாபுவின் ஒளிப்பதிவு திறனும் பாராட்டுக்குரியது . குறிப்பாக இறுதி கிளைமாக்ஸ் காட்சியில் ஹெலிகொப்டரில் ஜெய் வில்லன்களை விரட்டும் காட்சி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது. ஆர். விட்டலின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்துக்கு துணை நின்றது. 

 துணிவே துணை ஜெய்சங்கரின் மார்க்கெட்டை அன்றைய கால

கட்டத்தில் தக்க வைத்துக் கொள்ள வழி வகுத்தது . அது மட்டுமன்றி பிற் காலத்தில் முத்துராமன் முரட்டுக் காளை, சகலகலா வல்லவன், போன்ற ஆக்‌ஷன் படங்களை இயக்கி வெற்றி பெற இப் படம் அவருக்கு துணிவே துணை ஆனது!



No comments: