இலங்கைச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை

ஒரு நாடு தனது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் பிணைப்பு இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது - ஜனாதிபதி தெரிவிப்பு

வட பகுதி மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம் - அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதி!

நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான பணமோசடி வழக்கு ; மேலதிக விசாரணை நடத்த சட்டமா அதிபர் ஆலோசனை

மஹர சிறைச்சாலையில் மோதல் கட்டுப்பாட்டுக்குள்: பாதுகாப்பு பலப்படுத்தல் – ஊரடங்கு தொடர்கிறது



ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை

Published By: Vishnu

31 Jul, 2026 | 07:41 PM

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைத்தும் அதை தடுக்க தவறியமை மேலும் தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 
 



ஒரு நாடு தனது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் பிணைப்பு இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது - ஜனாதிபதி தெரிவிப்பு

Published By: Digital Desk 3

31 Jul, 2026 | 11:38 AM

ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்றும், அந்த அபிவிருத்தியானது நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இயல்பாகப் பிணைந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

நாட்டின் கலாசாரம் மற்றும் பெறுமதிகளுடன் ஆழமான தொடர்பில்லாமல் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, உலகின் பெரும்பாலான நாடுகள் தமது கலாசார அடித்தளத்தின் மீதே வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன், இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் விடயத்தில் இந்த கலாசார அடித்தளம், மிக முக்கியமானது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படும் புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் பிரிவு, கலாசார அலுவல்கள் பிரிவு மற்றும் தேசிய மரபுரிமைகள் பிரிவு ஆகிய பிரதான 03 பிரிவுகளுக்காக 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட  9,535.45 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகள் மற்றும்  5,401.40 மில்லியன் ரூபா மூலதனச் செலவுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் இது வரைகால முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்,  2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்  குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

கிராமப்புற வழிபாட்டுத் தலங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் கீழ் விகாரைகளில் தானசாலைகளை நிர்மாணித்தல், நீர் வசதிகளை மேம்படுத்துதல், அத்துடன் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களின் அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்துதல் மற்றும் அனர்த்தங்களால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களை மீளக் கட்டமைத்தல் என்பவற்றுக்காக 601 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்திய நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு சூரியசக்தி மின் வசதிகளை வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்துவதில் எழுந்துள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இத்திட்டத்தைச் செயற்படுத்துவதில் எழுந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் ஆராய்ந்து, அவற்றுக்குத் தீர்வுகளை வழங்கி இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

கலாசாரப் பிரிவின் கீழ் 521 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் கலாசார நிலையங்கள் ஊடாக செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது ஆராயப்பட்டதுடன், அமரதேவ நினைவிடத்தின் நிர்மாணப் பணிகள், தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பிரதான கட்டிடத்தில் நடமாடும் அடுக்குகள் தொகுப்பு ஒன்றை நிறுவுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

நமது பாரம்பரியங்களையும் வரலாற்றையும் தற்கால சந்ததியினருக்கு நெருக்கமாக்குவதற்காக தேசிய அருங்காட்சியகம் மற்றும் சுவடிகள் காப்பக திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களை துரிதப்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெறும் கட்டிடத்திற்குள் மாத்திரம் சுருங்கிவிடாது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரலாற்றை நேரடியாக அனுபவிக்கும் வகையில் அருங்காட்சியகங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

2018-2019 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த அரசாங்கங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் கைவிடப்பட்டிருந்த தேசிய கலாபவனத்தை நவீனமயமாக்கல், ஜோன் டி சில்வா ஞாபகார்த்த நாடக அரங்கம் மற்றும் அமரதேவ நினைவிடம் போன்ற திட்டங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவற்றை உடனடியாக நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி இதன்போது தெரிவித்தார்.

குறிப்பாக, தேசிய கலாபவனத்தின் நிர்மாணப் பணிகளில் காணப்பட்ட தரம் குறைந்த தன்மைகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக ஏற்பட்ட தாமதங்களைத் தடுத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் பணிகளை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

தேசிய நூலகக் கட்டிடத்தின் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் கலை மன்றம் மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கீழ் செயற்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு உரிய சொத்துகளை நிர்வகிப்பதில் கடந்த காலத்தில் நிலவிய பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்தியதோடு, மக்கள் சொத்துகள் ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக தொடர்புடைய சட்டங்களைத் திருத்துவதற்கும், நட்டமடையும் அல்லது பயனற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் குறித்து முறையான மீளாய்வு செய்து புதிய சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

மேலும், தற்போது புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஒரே பணியைச் செய்யும் நிறுவனங்கள் இருப்பதால், அத்தகைய நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்தார்.

2027 சமகாலக் கலை மற்றும் கலைஞர்களுக்காக முறையான ஒரு பொறிமுறையைக் கொண்ட புதிய நிதியம் ஒன்றை நிறுவுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், விஞ்ஞான அடிப்படையின் கீழ் கலைத் துறையையும் கலைஞர்களையும் ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு அப்பணிகளைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.  நன்றி வீரகேசரி 







நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான பணமோசடி வழக்கு ; மேலதிக விசாரணை நடத்த சட்டமா அதிபர் ஆலோசனை

Published By: Digital Desk 3

31 Jul, 2026 | 09:45 AM

(எம்.எப்.எம்.பஸீர்)

பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷஷ உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தின் போது செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று (30) வியாழக்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இவ்வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் அஸங்க எஸ்.போதரமை முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளிக்கையில்,

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அது தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கடந்த வருடம்  அக்டோபர் 14ஆம் திகதி சட்டமா அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இது தொடர்பில் பான் ஏசியா  மற்றும் நேஷன்ஸ் டிரஸ்ட்  ஆகிய வங்கிகளிடமிருந்து கணக்கு அறிக்கைகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தினர்.

இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இது சுமார் 11 ஆண்டுகள் பழமையான விசாரணை என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த வங்கி அறிக்கைகளைப் பெறுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என தலைமை நீதிவான், விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த விசாரணை அதிகாரி, குறித்த வங்கி அறிக்கைகளை விரைவாகப் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கினை அக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்த  நீதிவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட காலத்தில் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 15 மில்லியன் ரூபா பணத்தை என்.ஆர். கன்சல்டன்சி எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம், பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக குற்றம்சாட்டி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்க காலத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, நித்யா சமரநாயக்க, சுஜானி போகொல்லாகம மற்றும் சுதர்ஷன பண்டார ஆகிய நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.  நன்றி வீரகேசரி 





மஹர சிறைச்சாலையில் மோதல் கட்டுப்பாட்டுக்குள்: பாதுகாப்பு பலப்படுத்தல் – ஊரடங்கு தொடர்கிறது

02 Aug, 2026 | 09:49 AM

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் நேற்று இரவு ஏற்பட்ட மோதல் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் நோக்கில் மஹர சிறைச்சாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அவசியமற்ற வகையில் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்கூட்டியே அறிவித்து தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   நன்றி வீரகேசரி 



No comments: