இலங்கைச் செய்திகள்

 தமிழினப் படுகொலையை எடுத்துக்காட்டும் “நினைவாயுதம்” கண்காட்சி யாழ். பல்கலையில் இன்று ஆரம்பம்

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு!

குமுதினி படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

குமுழமுனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரல்

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு


தமிழினப் படுகொலையை எடுத்துக்காட்டும் “நினைவாயுதம்” கண்காட்சி யாழ். பல்கலையில் இன்று ஆரம்பம்

Published By: Digital Desk 2

16 May, 2026 | 10:50 AM

யாழ். பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "நினைவாயுதம்"  ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி இன்று (16) ஆரம்பமாகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இது தொடர்பாக  கூறுகையில்,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறோம். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் ஜந்து மாவட்டங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் மே 16ஆம் திகதி முதல் மே 18ஆம் திகதி வரை “நினைவாயுதம்“  ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி நடைபெறுகிறது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே "கந்தகபூமி உயிர் வலியின் மொழி" கவிதைப் போட்டியை நடத்தினோம்.

முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பான ஆதாரபூர்வமான தரவுகள், ஒளிப்படங்கள் மற்றும் ஆவணங்களை இளையோர் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு வரலாற்றுப் பதிவாக நாங்கள் கண்காட்சியை நடத்தவுள்ளோம் என்றனர்.   நன்றி வீரகேசரி 





ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு!

16 May, 2026 | 11:08 AM

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாகவே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு வெள்ளிக்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   நன்றி வீரகேசரி 






குமுதினி படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

 Published By: Vishnu

15 May, 2026 | 09:42 PM

குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் காலை 09 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

முதன்மை நினைவுச் சுடரினை 06 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து, தானும் படுகாயம் அடைந்து இன்றும் படுகொலையின் சாட்சியாக இருக்கும் விசுவலிங்கம் அன்னலட்சுமி ஏற்றி வைத்தார் 

தொடர்ந்து நினைவுச்சுடர்களை நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர்


வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை பி.கமல்ராஜ் அடிகளார்,  இந்தமத குரு கா.புவனேந்திரசர்மா மற்றும் உறவுகளை பறிகொடுத்த உறவுகள்,  உணர்வாளர்கள் என பலர் நினைவுச் சுடர்களை ஏற்றிவைத்தனர்.

நினைவுத் தூபிக்கான மலர் மாலையினை  நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றம் நெடுந்தீவு பங்குத்தந்தை பி.கமல்ராஜ் அடிகளார் ஆகியோரும், குமுதினி நினைவேந்தல் குழு தலைவர் வி.ருத்திரன் மற்றும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன் ஆகியோரும் இணைந்து அணிவித்ததைத் தொடர்ந்து  நிகழ்வில் கலந்துகொண்டோர் நினைவுத் தூபிக்கான மலர் அஞ்சலி செலுத்தி அஞ்சலித்தனர்.

அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் அவலங்கள் நினைவாக தீவக நினைவேந்தல் குழுவினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.


இதேவேளை படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் காலை 8.15 மணிக்கு  மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம் என்பவற்றில் சம நேரத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.   






























நன்றி வீரகேசரி 



குமுழமுனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரல்

Published By: Digital Desk 2

15 May, 2026 | 06:48 PM

முல்லைத்தீவு - குமுழமுனையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூலக்கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (15) நடைபெற்றது.

அந்த வகையில் குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்லையா சிறீஸ்கந்தராசா தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. 

இதன்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா


ரவிகரன், குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். 








நன்றி வீரகேசரி 





மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

Published By: Digital Desk 2

16 May, 2026 | 03:19 PM

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (16) நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், இறுதி யுத்தத்தின்போது வன்னியில் ஏற்பட்ட பாதிப்புக்களை உணர்ந்து அனுபவித்த மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கிவைத்தனர்.

அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மே 18ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













நன்றி வீரகேசரி 





No comments: