நீங்கள் நீண்ட காலமாக துறவறத்தைப் பற்றி வாசித்து வருகிறீர்கள். பல உபந்யாசங்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அளவிற்கு நீங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்? உங்களையே நீங்கள் கேள்வி கேட்டுப் பாருங்கள். நீங்கள் ஒரு அடிக்கூட முன்னேறவில்லை; இருந்த இடத்திலேயே இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.
வேதாந்த நூல்களை வாசித்தும், ஜபம் மற்றும் தியானம் செய்தும், புனித நூல்களின் அறிவைப் பெற்றிருந்தும், உங்கள் நிலைமையில் மாற்றமில்லை. முன்னேற்றம் அடைவது எப்படி? நீங்கள் கற்ற அறிவை நடைமுறையில் செயல்படுத்தும் போதுதான் உயர்ந்த நிலைகளை அடைய முடியும்.
ஆனால் இன்றைய மாணவர்கள் நடைமுறையில் பூஜ்யமாகவும், புத்தக அறிவில் வீரர்களாகவும் உள்ளனர். நீங்கள் பல விஷயங்களை கேட்டு கற்றுக்கொள்ளலாம். ஆனால் உங்கள் நிலை மாறாமல் அதேபடி இருக்கும். நூறு விஷயங்களை கற்றுக்கொள்வதைவிட, குறைந்தபட்சம் ஒரு விஷயத்தையாவது நடைமுறைப்படுத்துவது மிக முக்கியம்.
ஆகையால், நீங்கள் பயிற்சியைத் தொடங்க வேண்டும். அனுபவம் என்பது நடைமுறையால் மட்டுமே கிடைக்கும். சுவையான உணவுப் பொருட்களின் பெயர்களைக் கேட்பதாலேயே பசி தீராது; அவற்றை உண்ண முயற்சி செய்ய வேண்டும். ஒரு பிச்சைக்காரன் பொருளாதாரத்தின் மகத்துவத்தைப் பற்றி கேட்பதாலேயே தனது நிலையை உயர்த்த முடியாது. ஒளியின் சக்தியைப் பற்றி கேட்பதாலேயே அடர்ந்த இருள் அகலாது.
அதேபோல், வேதாந்தத்தைப் பற்றி கற்றுக்கொள்வதாலேயே ஒருவர் வேதாந்தியாக மாற முடியாது.
No comments:
Post a Comment