உலகச் செய்திகள்

அமெரிக்கா - சீனா இடையே புதிய சகாப்தம்: மோதலல்ல, ஒத்துழைப்பே உலகிற்கு அவசியம் - சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது - புட்டின் அறிவிப்பு

இஸ்ரேலில் அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்


அமெரிக்கா - சீனா இடையே புதிய சகாப்தம்: மோதலல்ல, ஒத்துழைப்பே உலகிற்கு அவசியம் - சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

Published By: Digital Desk 3

15 May, 2026 | 09:10 AM

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி  ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான தீர்க்கமான பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் உள்ள 'மக்களின் மகா மண்டபத்தில்' வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது, புதிய சகாப்தத்தில் இரு வல்லரசு நாடுகளும் சுமுகமாக முன்னோக்கிச் செல்வதற்கான சரியான வழியைக் கண்டறிய வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்பில் ஷி ஜின்பிங், 

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகளை விட பொதுவான நலன்களே அதிகம் காணப்படுகின்றன. ஒரு நாட்டின் வெற்றி மற்றொன்றுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பாகும்.

 "ஒத்துழைப்பதன் மூலம் இரு நாடுகளும் நன்மையடையும், மோதிக்கொள்வதன் மூலம் இருவருமே நஷ்டமடைவர். நாம் எதிரிகளாக அல்லாமல், ஒருவருக்கொருவர் உதவும் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும்."

உலகளாவிய சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதன் மூலம் உலகிற்கு அதிக ஸ்திரத்தன்மையை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூற்றாண்டில் காணாத மாற்றங்களை உலகம் தற்போது சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட ஷி ஜின்பிங், "துசிடிடிஸ் பொறியை" (Thucydides Trap - வளர்ந்து வரும் ஒரு சக்தி ஏற்கனவே உள்ள சக்தியுடன் மோதும் சூழல்) கடந்து, இரு நாடுகளும் ஒரு புதிய முன்மாதிரியான உறவை உருவாக்க முடியுமா? என்பதே இன்றைய தலைவர்கள் முன் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த வருகையினைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டானது சீனா - அமெரிக்க உறவுகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மைல்கல்லாக அமையும் எனத் தாம் நம்புவதாகவும் ஷி ஜின்பிங் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 




உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது - புட்டின் அறிவிப்பு

Published By: Digital Desk 2

10 May, 2026 | 01:09 PM

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மொஸ்கோவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பிற்குப் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்,  உக்ரைனுடனான மோதல் முடிவுக்கு வருவதாக தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

உக்ரைனில் நடைபெற்று வரும் "சிறப்பு இராணுவ நடவடிக்கை" இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக புlட்டின் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள்  தொடர்சியாக வழங்கி வரும் ஆதரவுதக்குறித்து  இந்நிகழ்வில் கடுமையாக விமர்சித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த கடைசி நேர போர்நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, மொஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பின் போது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் இல்லாமல் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி இந்நிகழ்வு நிறைவுற்றுள்ளதாக புட்டின்  தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஆற்றிய உரையில், ரஷ்யா ஒரு "நீதியான" போரை நடத்துவதாகக் கூறிய புட்டின், உக்ரைனை ஒரு "ஆக்கிரமிப்பு சக்தி" என்றும், அதற்கு நேட்டோ நாடுகள் ஆயுத உதவிகளை வழங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

"மேற்கத்திய நாடுகள் முதலில் உதவி செய்வதாகக் கூறிவிட்டு, பின்னர் ரஷ்யாவுடனான மோதலைத் தூண்டிவிட்டன. இது இன்றுவரை தொடர்கிறது. இப்போது இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வருகிறது, ஆனால் இது மிகவும் தீவிரமான விஷயம்," என புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் வினவப்பட்டபோது, நீண்ட கால வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரே அத்தகைய சந்திப்பு நடக்கும் என புடின் உறுதியாகத் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், இச்சந்திப்பு  "மற்றொறு  நாடொன்றில்  நடக்கலாம், ஆனால் அது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒரு கடைசி கட்ட நடவடிக்கையாக மட்டுமே இருக்கம்" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் ஐரோப்பாவிற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாகவும், அதற்கு ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி கெர்ஹார்ட் ஷ்ரோடரை தனது விருப்பத்திற்குரிய பேச்சுவார்த்தை கூட்டாளியாகப் புட்டின் அடையாளப்படுத்தியுள்ளார்.

வார இறுதியில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் தலா 1,000 கைதிகளைப் பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டன. இருப்பினும், இது தொடர்பாக உக்ரைனிடமிருந்து இன்னும் உரிய பதில் வரவில்லை என புடின் சனிக்கிழமை சுட்டிகாட்டியுள்ளார் . 

கடந்த இரு தசாப்தங்களில் இல்லாதவாறு, இம்முறை அணிவகுப்பில் ஏவுகணைகள் போன்ற இராணுவத் தளவாடங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. மேலும், சர்வதேச ஊடகவியலாளர்கள் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மிகக் குறைந்த அளவிலான செய்தியாளர்களே இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 





இஸ்ரேலில் அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்

Published By: Digital Desk 3

10 May, 2026 | 12:19 PM

லெபனான் மீதான தொடர் தாக்குதல்கள் மற்றும் ஈரானுடனான போர்ச் சூழலுக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி டெல் அவிவ் நகரில் நேற்றிரவு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஈரான் மற்றும் லெபனான் மீதான போர் நடவடிக்கைகளுக்கு ஒருபுறம் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மறுபுறம் இஸ்ரேலிய இராணுவத்தில் இணைய மறுக்கும் அதி-தீவிர பழமைவாத சமூகத்தினரால் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பதற்றமும் இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டத்தில் கலந்துகொண்ட 83 வயது ஓய்வூதியதாரரான டேவிட் அல்கன்,

"இந்த அரசாங்கம் ஒரு பேரழிவு. இது தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் பொய்களையும் போலிச் செய்திகளையும் பரப்பி வருகின்றனர். ஈரானை விடவும் ஆபத்தான எதிரி நமக்குள்ளேயே (உள்நாட்டில்) இருக்கிறான். இராணுவத்தில் சேர மறுத்து, உழைக்காமல், வரி கட்டாமல் எங்களது வரிப்பணத்தில் வாழும் ஒட்டுண்ணிகளே அந்த ஆபத்தான எதிரிகள்," என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் இஸ்ரேலிய அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, "இனப்படுகொலையை நிறுத்து", "அக்டோபர் ஏழை மறந்துவிடு" போன்ற வாசகங்களுடன், பிரதமர் நெதன்யாகுவை முன்னாள் கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாருடன் ஒப்பிட்டு "பிபி எஸ்கோபார்" எனச் சாடி போராட்டக்காரர்கள் முழக்கமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலில் நிலவும் இந்தப் போர்க்கால நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் நெதன்யாகுவுக்கு எதிராகத் திரண்டுள்ள மக்கள் அலை, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.   நன்றி வீரகேசரி 







No comments: