அத்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றது.
சுஜித்தா பாடசாலை தவிர்ந்த
நேரங்களில் அம்மாவிற்கு ஒத்தாசையாக வயல் வேலைகளில் இறங்கிவிடுவாள். பதினொரு வயதுகள்
நிரம்பிய அவளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்கவில்லை. அழகி என்றாலும் அணிந்துகொள்ள
எதுவும் இல்லாதவள். காதின் ஓட்டைகள் தூர்ந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. கழுத்தில்
ஒரு வெளிறிப்போன மாலை, கையில் ஒரு கோவில் திருவிழாவின் போது வாங்கிய ரப்பர் வளையல்கள்.
சில நாட்களாக சுருக்கங்கள்
விழுந்த அவள் முகம் பூப்போல விரிந்திருந்தது. நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக தேங்கிவிட்ட
சிறு புன்னகையும், மனம் முழுக்க - மழை பெய்து குளம் நிரம்பி வழிவது போல மகிழ்ச்சியும்
தழும்பிக் கிடந்தன.
ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீட்சையில்
அதிக புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலாவதாகத் தேறியிருந்ததுதான் அவள் மகிழ்ச்சிக்குக்
காரணம். அவளுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சி. அந்தப் பரீட்சைக்காக அவள் எந்தவித பிரத்தியேக
வகுப்புகளுக்கும் செல்லவில்லை. அந்தப் பரீட்சை குறித்து எதுவித அக்கறையும் அவளுக்கும்
தாயாருக்கும் இதுவரை இருந்ததில்லை. வறுமை கோரத்தாண்டவமாடும் வீட்டில், நித்தம் விளக்கு
எரிவதே அதிசயம் என்றானபோது அதுகுறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் இன்று… சுஜித்தாவின்
வெற்றி குறித்தான மகிழ்ச்சியைச் சொல்வதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.
ஆனாலும் இந்த மகிழ்வில் கலந்துகொண்டு
குதூகலிக்க அவள் அப்பா இன்று அவர்களுடன் இல்லை. இப்படித்தான் ஒருநாள் வயல் வேலை செய்து
கொண்டிருந்தபோது, சீருடை அணிந்த இராணுவத்தினரால் அவள் தந்தை பிடித்துச் செல்லப்பட்டார்.
இன்று எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன.
அப்பா ஒரு போர்வீரர் அல்ல.
எந்தவித இயக்கங்களிலும் இருந்தவரும் அல்ல. ஆனாலும் தொலைந்து போனார். போர் நடக்கும்
இடங்களில் தொலைந்து போவதற்கு காரணங்கள் ஏதும் தேவையில்லை. தொலைந்து போனவர்கள் உயிரோடு
இருப்பதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவு.
மாலை சரிந்து கொண்டிருந்தது.
தலைக்கு மேலால் பறவைகள் ஆர்ப்பரித்து, அவள் மகிழ்ச்சிக்கு ஈடாகப் பறந்து தமது இருப்பிடங்களுக்குத்
திரும்பிக் கொண்டிருக்கின்றன.
தூரத்தே குரல் எழுப்பியபடியே
மூச்சிரைக்க ஓடி வருகின்றான் கிச்சா. கிச்சா சுஜித்தாவைவிட இரண்டு வயதுகள் இளமையானவன்.
தன்னையொத்த வயதுடைய பையன்களுடன் எந்த நேரமும் சதா விளையாடியபடி இருப்பான் கிச்சா. அவனின்
பின்னால் காற்சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி வளையம் உருட்டிக் கொண்டுவந்த சிறுவர்கள்
இருவர், வளையம் வயலிற்குள் போகவே அதன் வழி போய் பொத்துப் பொத்தென வயலிற்குள் விழுந்தனர்.
“அம்மா…. ஸ்கூல் பிரின்சிபல் வீட்டை வந்து நிக்கின்றார். உங்களை ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்…”
“பிரின்சிபலா?” தெய்வானையால்
நம்ப முடியவில்லை. இதுவரை ஒரு காக்கா குருவி கூட அவளின் குடிசையை எட்டிப் பார்த்ததில்லை.
இன்று பாடசாலை அதிபர் எதற்காக வந்திருக்கக்கூடும்? சுஜித்தாவின் பரிசளிப்பு விழா நாளைக்குத்தானே!
அவளின் சிந்தனைகள் பலவாறு ஓடின.
“சரி கிச்சா… நீ போய் நான்
வந்துகொண்டிருக்கின்றேன் எண்டு பிரின்சிபலிட்டைச் சொல்லு.”
சுஜித்தாவும் தாயாரும் அவசர
அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு, வயலில் இருந்து குதித்து, எஜமானிடம் ஒரு சொல்லுச்
சொல்லிவிட்டு சலசலத்தோடும் வாய்க்கால் நீரில் கை கால்களை அலம்பிக் கொண்டார்கள். பிய்ந்து
போன செருப்புகள் தாளமிட, கிச்சாவின் பின்னால் அவர்கள் வீடு நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்கள்.
•
தெய்வானையின் குடிசையின்
முன்னே காத்துக்கொண்டு நின்ற அதிபர் புன்னகைக்கின்றார்.
வீட்டுக்குள்ளே வாருங்கள்
என, அதிபரை உள்ளே அழைத்துச் செல்ல தெய்வானைக்கு வெட்கம். குனிந்து உள்ளே குடிலிற்குள்
சென்றாலும், இருப்பதற்கு எதுவித தளபாடங்களோ குடிக்கக் குடுப்பதற்கு எதுவுமோ தெய்வானையிடம்
இல்லை.
“பரிசளிப்பு விழா நிகழ்ச்சி
நிரலிலை ஒரு சின்ன மாற்றம் நடந்திருக்கு. பரிசு குடுகிறதுக்காக முதலிலை மாநிலக்கல்வி
அதிகாரிதான் வருவதாக இருந்தது. இப்ப அவரோடை சேந்து சில ஆளுங்கட்சி அமைச்சர்களும் வர
இருக்கினம். அதாலை மாணவர்கள் எல்லாரும் கட்டாயம் வெள்ளை உடுப்போடைதான் வரவேணும்.”
அதிபரின் பேச்சு, பொங்கி
வரும் பாலில் தண்ணீர் தெளித்துவிட்டது மாதிரி இருந்தது சுஜித்தாவிற்கு. மகிழ்ச்சி குலைந்து
குழம்பிப் போனாள் அவள். இதுவரை காலமும் எந்த ஆடையுடனும் பரிசளிப்பு விழாவிற்கு வரலாம்
என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் பள்ளியில்கூட சீருடை என்று இருந்ததில்லை. இப்போது
வெள்ளை ஆடைக்கு அவள் எங்கே போவாள்?
சுஜித்தாவும் தெய்வானையும்
ஒருவரையொருவர் பார்த்தபடி மெளனமாக இருந்தார்கள்.
“கவலைப்படாதீர்கள்… எனக்கு
உங்கடை நிலைமை தெரியும். இன்னும் நேரம் இருக்கின்றதுதானே! நான் `அனஸ் ரெயிலறிங்’ ஓனருடன்
ரெலிபோனில் கதைத்துவிட்டுத்தான் வருகின்றேன். இரவு எட்டு மணிக்குத்தான் அவர்கள் கடையை
மூடுவார்கள். இப்பவே போய் அளவைக் குடுத்துவிட்டு வந்தால், நாளைக் காலையிலை சட்டையை
எடுத்துக் கொள்ளலாம். நான் சொன்னதா சொல்லுங்கோ… அவர் உங்களுக்கு எல்லா உதவியளும் செய்து
தருவார். சட்டைக்கான செலவுகளை நான் பாத்துக் கொள்ளுவன்.”
அதிபரின் வார்த்தை அவர்களுக்கு
தேவாமிர்தமாக இனித்தது.
அதிபர் சென்ற பின்னர், அவர்கள்
மூவரும் `அனஸ் ரெயிலறிங்’ நோக்கிச் சென்றார்கள்.
•
கடையிலிருந்து திரும்பும்போது
நன்றாக இருட்டிவிட்டது. அவர்களின் வீட்டிற்கு முன்னால் ஊரவர்கள் சிலர் தீப்பந்தங்களுடன்
திரண்டு நின்றார்கள். அவர்கள் சத்தமிட்டுக் கதைத்தபடி நிற்பதைக் கண்ட தெய்வானை, ஏதோ
பிரச்சினை உருவாகியிருப்பதை உணர்ந்து கொண்டாள்.
“எமது இனத்தை அழித்தவர்கள்
தரும் பரிசை எப்படி எமது பிள்ளைகள் ஏற்றுக் கொள்ளலாம்? அவர்களின் அழுக்கு நிறைந்த கைகளினால்
எப்படி நமது பிள்ளைகள் பரிசை வாங்கிக் கொள்வார்கள்?”
இதுவே புதிய பிரச்சினை. தெய்வானை
நினைத்துப் பார்த்திராத பூதமொன்று இப்பொழுது புதிதாகக் கிழம்பியிருந்தது.
“அப்படியென்றால் நாங்கள்
என்ன செய்வது?”
“பரிசளிப்புவிழாவை பகிஸ்கரித்துக்
கொள்ளுங்கள்.”
“அதுக்குப் பிறகு அவர்கள்
எங்களைச் சும்மா விட்டு வைப்பார்களா?”
“ஊரில் இருந்தால்தானே பரிசளிப்பு
விழாவுக்குப் போக வேணும். உன் அண்ணாவின் வீட்டிற்குப் போய் ஒளித்திருங்கள். இரண்டு
மூன்று நாட்கள் கழித்து ஊருக்குத் திரும்பி வாருங்கள்.”
“ஊரைவிட்டு ஓடிப்போறதுதான்
தீர்வு எண்டா அதாலை ஏற்படப்போகும் விளைவுகளையும் யோசிச்சுப் பாக்கவேணும். அதிகாரத்தில்
உள்ளவர்களைப் பகைத்துவிட்டு எப்படி இந்த உலகத்தில வாழமுடியும்? இப்பவே வருமானத்துக்கு
வழியில்லாமல் எல்லாம் சுருங்கிப் போய்க் கிடக்கு.” எதுவுமே சாத்தியமில்லை என்பதைப்
புரிந்துகொண்டாள் தெய்வானை. இந்தக் குழந்தையால் மீண்டுமொரு ரத்தக்களரி வீட்டில் நடந்துவிடக்கூடாது
என்பது அவளின் பிரார்த்தனையாக இருந்தது.
வந்தவர்களின் விளக்கங்களில்
தெய்வானைக்குத் திருப்தி ஏற்படவில்லை. படிப்பறிவற்ற அவள் வெள்ளந்தியாகத் தலையைத் தலையை
ஆட்டினாள். சுஜித்தாவிற்கு அவர்கள் கதைத்தது ஒன்றும் புரியவில்லை.
`பரிசளிப்புவிழாவை பகிஸ்கரித்துக்
கொள்ளுங்கள்.’ – வந்தவர்கள் முடிந்த முடிவாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்.
“அம்மா… ஏன் அம்மா இப்பிடி
திடீர் திடீரென்று எங்கடை வீட்டுக்கு புதுப்புது ஆக்கள் வருகினம்?” சுஜித்தாவிற்கு
பயம் கெளவிக் கொண்டது.
“எங்கட அப்பாவை திருப்பித்
தர முடியாதவை, எப்பிடியம்மா பரிசு தருவார்கள்… நான் பரிசு வாங்கப் போகவில்லை.”
“நீ இப்ப பரிசு வாங்கப் போகாட்டி
எங்களையும் பிடிச்சுக்கொண்டு போயிடுவாங்கள் பிள்ள… நீ போய் பரிசை வாங்கிக் கொண்டந்திட்டு,
பிறகு அதை என்னவாதல் செய்…” தெய்வானை சுஜித்தாவைச் சமாதானம் செய்தாள்.
இரவு அறையின் ஒரு ஓரத்தில்
சுஜித்தாவும், மறுபுறத்தில் அம்மாவும் கிச்சாவுமாக பாயை விரித்து உறங்கப் போனார்கள்.
சுஜித்தா அடுக்கடுக்காக அம்மாவிடம்
கேள்விகளைத் தொடுத்தபடியே இருந்தாள். அம்மாவின் மெளனத்தைப் புரிந்து கொண்டு, ஆசைகளை
ஒவ்வொன்றாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, விட்டத்தைப் பார்த்தபடி இருந்தாள். கிச்சாவைத்
தவிர அவர்கள் இருவருக்கும் உறக்கம் தொலைந்திருந்தது.
அப்பாவின் மறைவின் பின்னர்
பாடசாலைக்கு செல்வதைக் குறைத்துக்கொண்டு அம்மாவுக்கு உதவி செய்யும் போதெல்லாம், சுஜித்தாவை
ஊக்கப்படுத்தி பாடசாலைக்கு அனுப்பி வைத்தவள் தெய்வானை.
“கல்விதான் எம்மையெல்லாம்
உயர்த்தி வைக்கும் ஏணி.” என அடிக்கடி தன் இரண்டு பிள்ளைகளுக்கும் சொல்வாள் தெய்வானை.
அம்மாவின் கனவுகளைப் புரிந்துகொண்ட சுஜித்தாவும் நிறைய ஆசைகள் கனவுகளுடன் உற்சாகமாகப்
படித்துக்கொண்டே வந்தாள். என்றாவது ஒருநாள் அவள் நன்றாகப் படித்து பேர் சொல்லக்கூடிய
பிள்ளையாக வருவாள் என தெய்வானை கனவு கண்டு கொண்டிருந்தாள்.
அப்பாவை நினைத்தபோது, சுஜித்தாவுக்கு
அப்பாவுடன் இருந்த மகிழ்ச்சியான காலங்கள் சரசரவென நினைவுக்கு வந்தன. சிறு வயதில் ஒவ்வொருநாளும்
அதிகாலை வேளையில் ஒரு தேவதையாக அப்பாவின் முதுகினில் தொங்கிக் கொண்டு, அப்பாவுடன் சேர்ந்து
சுவாமிக்குப் பூக்கள் பறிப்பதும், மழலை மொழியில் தேவாரங்கள் பாடுவதயும் நினைக்க அவள்
கண்கள் பனித்தன. திருவிழாக் காலங்கள் வந்துவிட்டால், அப்பா அவளுக்கு அழகான ஆடைகள் அணிவித்து,
கை பிடித்துக் கூட்டிச் செல்வார். காப்பு, தோடு, விளையாட்டுப் பொருட்கள் என எல்லாமும்
வாங்கித் தருவார். எப்போவாவது ரவுணுக்குப் போய் சினிமா பார்த்து, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டும்
வருவார்கள். இன்று?
அப்பா இல்லாத உலகம் குழந்தைகளுக்கு
மட்டுமல்ல, அம்மாவுக்கும் வெறுமையானதுதான்.
“பிள்ளை… அதிபரின்ரை வீடு
எங்கை இருக்கெண்டு உனக்குத் தெரியுமா? அவரிட்டைப் போய் ஒருக்காக் கதைச்சுப் பாத்தாலென்ன
எண்டு எனக்குத் தோணுது.”
“அம்மா… அவர் சரியான தூரத்திலை
இருந்துதான் வாறவர் எண்டு சொல்லுறவை…”
“உனக்கு உடுப்புக்கூட இலவசமா
தைச்சுத் தர ஏற்பாடு செய்திருக்கிறார். அதிபரின்ரை நல்ல மனசுக்காவது நீ பரிசை வாங்கத்தான்
வேணும் பிள்ளை.”
“ஓம் அம்மா… நீங்கள் கவலைப்
படாதையுங்கோ. நான் வாங்கிறன்”
தெய்வானை எழுந்து வந்து அவளைக்
கட்டி அணைத்து உச்சந்தலையிலே பொழிச்சுப் பொழிச்சென முத்தமிட்டாள். மனதைக் கட்டுப்படுத்த
முடியாத சுஜித்தாவிற்கு அழுகை பெருகியது. அம்மா அவளுக்கொரு தெய்வம் மாதிரி. அவள் எது
சொன்னாலும் உடன்பட்டு விடுவாள். அவளின் அன்பு வலைக்குள் வீழ்ந்துகொண்டது அந்தப் பிஞ்சுமனம்.
அவளுக்கு அப்படியே திரும்பி அம்மாவைப் பார்த்துக்கொண்டு படுக்க வேண்டும் போல் இருந்தது.
அம்மா தன்னுள் அத்தனை கவலைகளையும்
புதைத்து வைத்துக்கொண்டு காலில் சக்கரம் பூட்டியவளாய் இன்று வலம் வருகின்றாள். போர்
தின்ற நிலத்தில் தன் இரு பிள்ளைகளையும் தக்க வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யமுடியுமோ
அத்தனையும் செய்கின்றாள் அவள். அப்பா பொத்தென விட்டுப் போன விவசாயம், அடுத்தவர் காணிகளிலெல்லாம்
களையெடுப்பு, அவர்கள் வீடுகளுக்கெல்லாம் ஒரு வேலைக்காரி.
அம்மாவைப் பார்க்க அவளுக்கு
அழுகை கனத்தது. மீண்டும் எதிர்ப்புறமாகத் திரும்பி சுவரைப் பார்த்தபடி படுத்தாள். நாளை
இரவுக்குள் என்னவெல்லாம் நடந்துவிடும்? சுஜித்தாவின் மனதுக்குள் ஏதோ உருளுகின்றது.
என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளின் கள்ளங்கபடமற்ற தேடல், ஆயிரம் கேள்விகளைத் தன்
மன ஊஞ்சலில் வைத்துத் தாலாட்டுகின்றது. நீண்ட தேடலின் பின்னர் அவளின் மனதிற்குள் புதிதாக
ஒரு தெரிவு மின்னல் போல வந்து நின்றது. மனம் அதைத் திரும்பத் திரும்ப ஒத்திகை பார்த்துவிட்டு,
பொத்தி வைத்துக் கொள்கின்றது.
அம்மாவிடம் அதைச் சொல்லக்கூடாது
என மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். அந்த நினைப்புடன் உறங்கிப் போனாள் சுஜித்தா.
•
விடிந்ததும், சுஜித்தாவும்
தெய்வானையும் `அனஸ் ரெயிலறிங்’ சென்று ஆடையைப் பெற்றுக் கொண்டார்கள். ஆடை சுஜித்தாவுக்கு
கச்சிதமாகப் பொருந்திக் கொண்டது. தனது வெள்ளை ஆடையைப் பல தடவைகள் போட்டுப் பார்த்துக்
கொண்டாள். மடிப்புக் குலையாத அதன் அழகும், புது ஆடையின் மணமும் அவளை என்னவோ செய்தது.
சிரிப்பு அவளுள் குமுழியிட்டது. பரவசமும் பக்தி நிலையுமாகத் திரிந்த அவள், காணும் நண்பர்களிடம்
எல்லாம் தனக்கு விருது கிடைக்கப் போவதாகச் சொல்லி மகிழ்ந்தாள். எல்லையற்ற வானமெங்கும்
பறந்து பறந்து திரிந்தாள்.
அன்று சுஜித்தாவுக்கு சாப்பாடு
தண்ணி எதுவும் இறங்கவில்லை. தெய்வானையும் அன்று அவளிடம் எந்தவிதமான வேலையும் வாங்கவில்லை.
தாயும் மகளும் ஒருவரையொருவர்
நேரில் பார்க்கும் தோறும், ஏதோவொரு சக்தியொன்று அவர்களிடையே மின்னலடித்தது.
சுஜித்தா படித்து பட்டங்களெல்லாம்
பெற்று உயர உயர ஏணிப்படிகளில் ஏறிச்செல்வது போல தெய்வானை கனவு கண்டாள். தெய்வானையின்
முகமெல்லாம் பூரித்து அவயவங்களில் மினுப்புக் கண்டது. சிலவேளைகளில் தனிமையிலும் அவள்
சிரித்துக் கொண்டாள்.
•
மாலையில் நகர மண்டபம் பல்வேறு
சோடனைகளால் பொலிவுற்று களை கட்டியிருந்தது. மனிதர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.
சிறுவர்கள் மலர்க்கொத்துக்களுடன்
அதிகாரிகளை வரவேற்பதற்காக வரிசையாக மண்டப வாசல்வரையும் காத்து நிற்கின்றார்கள். திடீரென்று
சலசலப்பு. அதிகாரிகள் வந்துவிட்டார்கள். பாண்ட் வாத்திய இசை முழங்குகின்றது.
அதிகாரிகளுக்கு மாலைகள் அணிவித்து
மேடையில் அமரச் செய்கின்றார்கள். மேடையின் முன்னே முதல் வரிசையில் சில அதிகாரிகளும்
பாடசாலை அதிபர்களும் கம்பீரமாக வீற்றிருக்கின்றார்கள். அதற்கடுத்த வரிசைகளில் ஆசிரியர்களும்
மாணவர்களும். அவர்களின் பின்னால் மக்கள் வெள்ளம். அவர்களுள் தெய்வானையும் கிச்சாவும்
முகம் தெரியாத மனிதர்களாக.
மேடையின் பின்புறம் பரிசு
பெறும் மாணவர்கள் ஒழுங்குமுறையாக வரிசையில் நிற்கின்றார்கள். அவர்களை இரண்டு ஆசிரியர்கள்
சரி பார்த்துக் கொண்டு சுறுசுறுப்பாக இருக்கின்றார்கள்.
இறை வணக்கத்துடன் விழா இனிதே
தொடங்குகின்றது. சம்பிரதாய உரைகள் முடிய பரிசளிப்பு தொடங்குகின்றது.
முதலில் வட்டார ரீதியில்
முதலிடம் பெற்றவர்கள் அழைக்கப்பட்டார்கள். பின்னர் மாநிலத்தில் முதன் மூன்று இடங்களைப்
பெற்றுக் கொண்டவர்கள் அழைக்கப்பட இருந்தார்கள்.
மூன்றாம் இடத்திலிருந்து
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, இதோ முதலாவது இடம் வந்துவிட்டது.
“சுஜித்தா – முதலாம் இடம்”
சுஜித்தாவிற்கு உடலெல்லாம்
பதறத் தொடங்கியது. ஏதோ ஒன்று உந்தித் தள்ள, அவள் மேடைக்கு விரைந்து செல்கின்றாள். மேடையில்
ஏறும்போது வானளாவிய கரகோஷம் எழுந்தது. அதிகாரி பரிசைத் தந்துவிட்டு, அவளைக் கட்டிப்
பிடித்து உச்சியிலே முத்தமிடுகின்றார். சுஜித்தா மெல்லத் தலை நிமிர்த்தி, அதிகாரியை
நிமிர்ந்து பார்க்கின்றாள். பார்த்ததும் உதடுகள் துடிக்க, நா தழுதழுக்கின்றது. அவளால்
எதையுமே பேச முடியவில்லை.
நொடிப் பொழுதுதான். சுஜித்தா
தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள், சுதாரித்துக் கொண்டாள்.
“என்னுடைய அப்பா எங்கே?”
உடல் நடுங்க, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த அதிகாரியைப் பார்த்துக் கேட்டாள்.
மனதிற்குள் பதுக்கி வைத்துக் கொண்ட அந்தக் கேள்வி விழித்துக் கொண்டுவிட்டது. அவளது
கேள்வி, அதிகாரியின் கையில் இருந்த ஒலிவாங்கியின் ஊடாக எங்கும் எதிரொலிக்கின்றது.
அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை.
அவருக்குப் பக்கத்தில் நின்றவரிடம், “குழந்தை என்ன சொல்கின்றாள்?” என்று கேட்டார்.
அருகில் நின்றவர், அதிகாரியின் காதிற்குள் ஏதோ சொல்லிப் புரிய வைத்தார்.
“வேர் இஸ் மை ஃபாதர்?” தமிழ்
தெரியாத அந்த அதிகாரிக்கு, தான் கேட்டது புரியவில்லையோ என நினைத்த சுஜித்தா தனக்குத்
தெரிந்த ஆங்கிலத்தில் திரும்பவும் கேட்டாள்.
அதிகாரி பதில் சொல்ல முடியாதவராகத்
திகைத்து நின்றார்.
கூட்டத்திலே சிறிது சலசலப்பு
ஏற்படுகின்றது.
சுஜித்தா கேட்டுக் கொண்டிருக்கும்போது,
அவளின் பின்னால் சூர்ப்பனகைக் கோலத்தில் வந்த ஆசிரியை ஒருவர் அவளைப் பலவந்தமாக மேடையில்
இருந்தும் இறக்கிக் கூட்டிச் சென்றார். சுஜித்தாவின் கேள்விக்கு பதில் கிடைக்காமலே
அவள் மேடையில் இருந்தும் பலவந்தமாக அகற்றப்பட்டாள்.
`அரசு அதிகாரியைப் பகைத்துக்கொண்ட
உன்னைக் கொண்றுவிடப் போகின்றார்கள்’ சுஜித்தாவின் மனதில் எழுந்த அசரீரியினால் அவள்
முகத்தில் கலவரம் முளைத்தது. பயம் ஒரு பாம்பைப் போல ஊர்ந்து வந்து அவளைக் கொத்துகின்றது.
மனம் பதைபதைக்க, உடலெல்லாம் வேர்த்து, அவளையும் அறியாமல் அவள் ஆடையெல்லாம் நனைந்துவிட்டது.
தானாகவே நிகழ்ந்துவிட்ட அந்தச் செயலுக்கு வெட்கப்பட்ட சுஜித்தா, தனக்குக் கிடைத்த பரிசுச்
சான்றிதழினால் ஆடையின் முன்புறத்தை மறைத்துக் கொண்டாள்.
எல்லாவற்றையும் முடித்துக்
கொண்ட அந்த உயர் அதிகாரி, மேடையைவிட்டுக் கீழ் இறங்கி சுஜித்தாவைத் தேடி வந்து கொண்டிருந்தார்.
நல்லதொரு தீர்வை அந்தச் சிறு பெண்ணிற்கு பெற்றுக் குடுத்துவிட வேண்டுமென்று அவர் மனம்
துடிக்கின்றது.
பரிசளிப்பு விழாவினைப் புறக்கணிக்கச்
சொல்லிவிட்டு, கூட்டத்திலே மறைவாக நின்று யார் யாரெல்லாம் பரிசளிப்பு விழாவிற்கு வந்திருக்கின்றார்கள்
என்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, சுஜித்தாவின் செய்கை வியப்பைக் கொடுத்தது.
சுஜித்தா தனக்குக் கிடைத்த அந்தச் சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சார்பாக
ஒரு எதிர்ப்புக்குரல் குடுக்கவே வந்தாள் என்பதை அவர்கள் உணர்ந்தபோது, சுஜித்தா அவர்கள்
மனதில் ஒரு சிகரமாகத் தென்பட்டாள்.
•

No comments:
Post a Comment