மரங்களின் இலைகள் மஞ்சலும், சிவப்புமாக நிறம் மாறி இலையுதிரத் தயாராகின்றன. சிவப்பிலைகள் செங்கம்பள விரிப்பைப் போல நடைபாதையை மூடி இரவு பெய்த மழைத்துளிகளின் பாரத்தில் அவை நிலத்தோடு கிடக்கின்றன இலைகள் மதிய வெய்யிலில் காய்ந்துவிட காற்று இலைகளை அலைக்கழித்து அள்ளிக் கொண்டு புற் தரையில் கொட்டுகிறது..
நானோ வீட்டின்
முன்னாள் நிற்கும் மூன்று அரசாங்கம் நட்டு வைத்த மரங்கள் முற்றாக இலைகள் கொட்டித் தீர்க்கும்
வரை காத்திருக்கிறேன். அவற்றை அள்ளி முடிப்பது அரை நாள் வேலை. ஆனால் இன்னொரு நல்ல விஷயம்
புல்லு வெட்டத் தேவைவையில்லை என்பதுதான். குளிர் புற்களை வளரவிடாது தனது கட்டுப்பாட்டுக்குள்
வைத்துக் கொள்ளும்.
இனி வரும் நாலைந்து மாதங்களுக்காக மரங்கள் தம்மை
தயார்படுத்தி குளிர் காலத்தை வரவேற்பது போல மனிதரும் தம்மைத் தயார் படுத்துகின்றனர்.
வின்டர் வரும்
வரை உள்ளே அலுமாரிக்குள் பதுங்கிக் கிடந்த குளிர் உடுப்புகள் வெளியே உடுப்புக் கொளுவும்
ஹாங்கரில் எடுத்துக் போட்டுவிட்டோம். இரவும் காலையும் சூடேற்றிகளை இயக்கத் தொடங்கி
விட்டோம்.
குளிர்காலத்துக்கென்று
பிரத்தியேகமான ஃப்ளூ ஊசி போட ஒழுங்கு செய்தாயிற்று.
வின்டர் வந்தால்
இலங்கை இந்தியா என்று குளிரிலிருந்து தப்பிச் செல்லும் சிலர் பயணங்களுக்கு ஆயத்தமாகி
விட்டனர்.
காலையில் வெயில்
பளிச்சென்று வந்து விடுகிறது. குளிர் காலநிலையிலும் பெரும்பாலும் வெயில் எறிக்கத் தவறுவதில்லை.
மற்றைய நாடுகளின் வின்டர் காலத்துடன் ஒப்பிடும்போது கன்பராவுக்கு வெய்யில் ஒரு வரப்பிரசாதம்.
உடுப்புகளை வெய்யிலிலேயே காய வைத்து விட முடிகிறது.
இன்னொன்றை கவனித்தேன்.
தூரத்தில் நிற்கும் மலைகளில் மரங்கள் என்றும் பச்சையாகவே நிற்கின்றன. அங்கெல்லாம் பெரும்பாலும்
யூகலிப்டஸ் மரங்களும், பைன் மரங்களும் மட்டுமே நிற்கின்றன. வின்டரில் இலையுதிராத மரங்கள்
அவை.
இந்த மலைகள்
எத்தனை தலைமுறைகளைக் கண்டிருக்கும்!. எத்தனை காலநிலை மாற்றங்களிகளினூடாக கடந்து வந்திருக்கின்றன.
காட்டுத்தீ உட்பட.
ஆனாலும் அவை
மாற்றமின்றி நிற்கின்றன.


No comments:
Post a Comment