நம்மைக் கவர்ந்த நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி

.
                                                                                    மதுரா மகாதேவ்

தாயகத்தில் இருந்து சிட்னி முருகனின் திருவிழாவை சிறப்பிக்க வந்திருந்த தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி சிட்னி முருகன் ஆலயத்தின் கலை கலாச்சார மண்டபத்தில் 04.04.2010 அன்று நடை பெற்றது. நுழைவுச் சீட்டுகள் பத்து வெள்ளிகள் என விற்கப்பட்டன. நிகழ்ச்சி சரியாக ஐந்து மணிக்கு மண்டபம் நிறைந்த கூட்டத்துடன் ஆரம்பமானது. . முதலில் கீர்த்தனைகளை வாசித்தார்கள். நாதஸ்வரத்தின் இனிமைக்கு ஏற்றாற்போல் தவில் வித்வான்களாகிய சுதாகரும் நர்மதனும் மிகவும் திறம்பட தாளத்திற்கேற்ப  வாசித்தார்கள்.




நாதஸ்வர வித்வான்களான நாகேந்திரமும் பாலமுருகனும் மிகவும் இனிமையாக பல தமிழ்த் திரை இசை பாடல்களை இடைவேளையின் பின்பு வாசித்தார்கள். 1940 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வெளியான பட பாடல்களை வாசித்தது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக இருந்தது. புதிய பாடல்களில் குத்து பாடல்களையும் அவர்களின் நாதஸ்வரம் விட்டுவைக்கவில்லை. அவற்றில் ஒன்று வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம். இதைவிட வில்லு படத்திலிருந்து டாடி மம்மி வீட்டிலில்லை தடை போட யாருமில்லை, வாடா மாப்பிள்ளே வாழைப்பழ தோப்பிலே என்னும் இளையவர்களை மட்டுமல்லாமல் வயதுவந்தவர்களையும் கவரந்த பாடல்களாகும்.
படிக்காத மேதை திரைப் படத்திலிருந்து பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை, அபூர்வ ராகங்களில்ருந்து அதிசய ராகம் ஆனந்த ராகம், சிவாஜியிலிருந்து ரா ரா, என்னும் பாடல்களை மிகவும் இனிமையாக வாசித்தார்கள். பொம்பே திரை படத்திலிருந்து உயிரே என்னும் பாடலை பாலமுருகன் வாசித்தது அனைவரையும் கொள்ளை கொண்டுவிட்டது. இவர் ஒரு இளம் தலை முறையை சேர்ந்த கலைஞர் இவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று நம்பலாம்.



இந்த நிகழ்ச்சியின் மூலம் சேர்ந்த பணத்தை வழமைபோல் சைவமன்றத்தினர் அவர்களுக்கே கொடுத்து கௌரவித்தார்கள். இசை நிகழ்ச்சி இரவு ஒன்பது நாற்பந்தைந்திற்கு நிறைவு பெற்றது. எமது தாய் நாட்டிலிருந்தும் கனடாவில் இருந்தும் வருகை தந்து எங்களை நாதஸ்வர தவில் இசையில் நனைய செய்த இந்த நால்வரும் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல சிட்னி முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும். ஒரு சிறந்த நிகழ்சியை சிறந்த முறையில் நடாத்தி முடித்த சைவமன்றத்தினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

துர்க்கா தேவி தேவஸ்தான சமய அறிவுப்போட்டி 2010



துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2010

இப் போட்டிகள் ஏப்ரல் மாதம் 18ம் திகதி சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.

வர்ணம் தீட்டுதல் (பாலர் பிரிவுக்கு மட்டும்), சமய அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (பேச்சுப் போட்டிக்கான பேச்சுக்களும் வழங்கப்படும்)

அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் இசை வேள்வி 2010

.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்  இவ்வருடச் செயற்பாடுகளில் ஒன்றாக, ஏப்பிரல் மாதம் 18ம் நாள், உலகப்புகழ் வீணையிசை வித்தகர் இராஜேஷ் வைத்தியாவினுடைய இன்னிசை நிகழ்வு ஒன்றை இசை வேள்வி 2010 என்ற பெயரில் மிக சிறப்பாய் சிட்னியில் அரங்கேற்றவிருக்கின்றது. பல இசைக் கலைஞர்களால் போற்றப்படுபவரும் சிறந்த வீணையிசை இறுவட்டுக்களை இசையமைத்து வெளியிட்டு வருபவருமான பிரபல இசையமைப்பாளர் திரு. இராஜேஷ் வைத்தியா அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கின்றார். ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மாலை 5 மணிக்கு Sydney Baha’i Centre 107 Derby St Silverwater என்ற இடத்தில் இடம்பெறுகின்றது. முத்தமிழும் காட்டும் கம்ப காவியம், மற்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் மீது கொண்ட காதலினால், அவன் பெயராலே ஒரு கழகம் அமைத்து தமிழை புலம்பெயர்ந்த நாடான ஒஸ்ரேலியாவில் மெருகூட்டிவருகின்றார்கள் இந்த அமைப்பினர்,



எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை

.



                                   - -நடராஜா முரளிதரன் -






எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை

அந்த அவாவினை

என் நினைவின் இடுக்கிலிருந்து

பிடுங்கியெறிவதையே

என் எதிரிகளும்

என்னவர்களும்

இடைவிடாது புரியும்

தொழிலாகக் கொண்டுள்ளார்கள்

எனது கனவுகளின் போதே

சாத்தியமாகியுள்ள

அந்த நினைவுப்படலத்தை

எனது அன்புக்குரியவளே

நீயும் சிதைத்து விடாதே

மூடுண்ட பனியில்

அமிழ்ந்து போய்

சுவாசம் இழந்துபோய்

நான் தவிப்பதுவாய்

நேற்றும் ஓர் கனாக் கண்டேன்
கோடை தெறித்த வெய்யிலில்

கருகும் உயிரினத்துக்கான

உஷ்ணவெளியில்

பிறந்த நான்

கனவுகளில்

உயிர் பிழைப்பதாய்

நீ நம்புவாய்

ஆனால்
எனது மண்ணிலிருந்து

நான் இடம்பெயர்க்கப்பட்டபோது

எனது மண்ணின் சில துணிக்கைகளும்

என்னோடு ஒட்டிக்கொண்டு

விலக மறுத்து

சகவாசம் புரிவதை

யாருக்கு நான் உணர்த்துவேன்





##### பெண் ####

.
             
                                xxxxxx சௌந்தரி xxxxxx




பெண் என்பது அவளது பெயர்

அவள் ஒரு இனம்

அவளுக்கு பலகோடி முகம்

அவளது உடலும் உள்ளமும் தனித்தனியாக

தவணைமுறையில் தாக்கப்படும்

பிறக்கமுதல் சிசுக்கொலை

பிறர் இறக்கும்போது உடன்கட்டை

இடையில் கற்பழிப்புஇ வன்முறை

உள்ளச்சுமைகளின் ஓயாதவலி

இவை பட்டியலிட்டு மாளாது

மெல்ல மெல்ல தடைகள் தாண்டி

முட்டிமோதி ஓட்டை உடைத்து

வெளியேவந்து தடம் பதித்தால்

எழுதப்பட்ட சட்டங்கள் பாதுகாக்காது

எழுதப்படாத விதிகளால் ஆளப்பட்டாள்

தனிமைச் சிறைக்குள் அவஸ்தைப்பட்டாள்

ஆண்டாண்டு காலமாய்

தொடர்கின்ற பெண்ணின்கதையிது



ஊடகங்களின் குறியீடு பெண்

சாமி தொடங்கி சாமானியன் வரை

தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் பெண்

கல்லோ புல்லோ கட்டிக்கொண்டு

அழுகின்ற பேதை பெண்

ஆணும் பெண்ணும் வேறுபட்ட இனம்

இரு வேறுபாடு கொண்ட மனம்

பெண்மை என்பது வெறும் நளினமல்ல

அவளிடம் கம்பீரம் உண்டு

நேர்மையுண்டு வீரமுண்டு

ஆண்மை என்பது வெறும் ஆதிக்கமல்ல

அவனிடம் கோழையுண்டு

மூடருண்டு முரடனுண்டு

பெண்ணியம் என்பது வீறாப்பல்ல விவேகம்

பெண்களின் மொழி

உரிமைக்கான ஓர் குரல்

பெண்களின் கருத்து

கைதட்டலுக்கு மட்டுமல்ல

கண்களைத் திறப்பதற்கே!

விபத்துக்குள்ளாகும் வாகனங்களை மீள் பதிவு செய்தல் ஒளிக்கப்படும்

.




நியூ சவுத்வேல்சில் விபத்துக்கள்ளாகும் வாகனங்களை காப்புறுதி ஸ்தாபனங்கள் பாவனைக்கு உகந்தவையல்ல என்று பதிவளிக்கப்பட்ட வாகனங்களை குறைந்த விலையில் வாங்கி மீழவும் பதிவு செய்யும் முறையை இனிமேல் இல்லாது ஒழிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பதிவளிக்கப்பட்ட வானங்கள் பழுது பார்க்கப்பட்டு மீழவும் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டு தோறும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 36 ஆறாயிரம் வாகனங்கள் பதிவளிக்கப்படுகின்றன எனவும் அவற்றில் சராசரி 14 ஆயிரம் வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டு மீழவும் பதிவு செய்யப்பட்டு வீதிக்கு வருகின்றது எனத் தரவுகள் காட்டுகின்றன. போக்குவரத்து அமைச்சர் David Campbell இம் முறை ஒழிக்கப்படுவது பழுது பார்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களைப் பெற வாகனங்கள் கழவாடப்படுவதைக் குறைப்பதுடன் பாதுகாப்பற்ற வாகனங்கள் ஓட்டப்படுவதையும் அதனால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கவும் வகை செய்யும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று தமிழர்களுக்கு விடுதலை

.


விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்களை அவுஸ்திரேலிய நீதிமன்றம் மார்ச் மாதம் 31ம் திகதி விடுவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பணம் சேகரித்த குற்றத்திற்காக 2007ம் ஆண்டு இந்த மூவரும் கைது செய்யப்பட்டார்கள்.

இவர்கள் பயங்கரவாதக் குழுவிற்கு பணம் அனுப்பியதற்கான குறைந்த குற்றத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து 31ம் திகதி மார்ச் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கின் முடிவைப் பார்ப்பதற்காக வந்திருந்த பல ஆதரவாளர்கள் 1000 டொலர்கள் நன்னடத்தைப் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முடிவைக் கேட்டதும் அவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

சிட்னியில் வசித்து வருபவரான ஆறுமுகம் ராஜீவன், 44, மெல்மேனில் வசித்து வருபவர்களான ஆருரன் விநாயகமூர்த்தி 35, மற்றும் சிவாயன் யாதவன் 39 ஆகியோர் ஈழப் புலிகளுக்கு பணம் அனுப்பிய ஒரே குற்றத்திற்காக ஒப்புக்கொண்டார்கள்

இந்த மூவரும் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களிடம் பணம் சேகரித்து இலங்கையில் தனிநாடு கேட்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பியிருந்தார்கள் என நீதவான் Paul Coghlan  கூறினார். இந்த மூவரும் நல்ல நோக்கத்திற்காக தமிழர்களுக்கு உதவி புரிந்து இருந்தாலும் இவர்களின் பொறுப்பற்ற செயலால் இந்த நிதி துர்ப்பிரயோசனம் செய்யப்பட்டிருக்கலாம் என அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்த மூவரும் தமிழ்ப் புலிகள் பயங்கரவாதக் குழு என சில நாடுகளால் தீர்மானிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டதைத் தெரிந்தவர்கள் எனவும் அவுஸ்திரேலியாவிலும் இப்படி தடை செய்யப்படுவதற்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுத்தவர்கள் எனவும் நீதவான் Paul Coghlan கூறினார்.

Paul Coghlan  விநாயமூர்த்தியின் இரண்டாவது குற்றமாகிய $97,000 பெறுமதியான மின்சார உபகரணங்களை தமிழ்ப் புலிகளுக்கு அனுப்பியது தனக்கு வேதனையை தந்தது எனவும் கூறினார்.

நீதவான் Paul Coghlan  விநாயமூர்த்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து நாலுவருட நன்னடத்தை பிணையில் விடுவித்தார். அவர் யாதவனுக்கும் ராஜிவனுக்கும் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து மூன்று வருட நன்னடத்தை பிணையில் விடுவித்தார்.
'சிறிலங்காவில் வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு உதவவேண்டும் என்ற பேரவாவினால் நீங்கள் ஒவ்வொருவரும் உந்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்' என அவர் தொடர்ந்தார்.
'உங்களது இலக்கு மனிதாபிமான அடிப்படையில் மாத்திரமே அமைந்ததென நான் கூறுவதற்கு இன்னமும் நான் விரும்பவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவவேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் செயற்பாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.'

சிறிலங்காவில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியிலேயே இவர்கள் இந்தக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது எனச் சுட்டிக்காட்டிய நீதியரசர் ஹோல்சன் இந்தக் காலப்பகுதியில் நாட்டினது வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடைமுறை நிழல் அரசொன்றை நிருவகித்து வந்தார்கள் எனக் குறிப்பிட்டார்.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிக்கென அனுப்பப்பட்ட நிதி தவறாக பயன் படுத்தப்பட்டதாக எந்தத் தகவலுமில்லை என்பதை அவர் அவதானத்துடன் குறிப்பிட்டார்.

நீதியரசர் ஹோல்சன் ஒரு மணி நேரமாக இந்த வழக்கின் தீர்ப்பினை வாசித்தார்.

விடுதலைப் புலிகள் தொடர்பான சர்தேக கருத்து இவர்களுக்குத் தெரிந்திருக்காமல் இருந்திருக்காது என முடிவெடுத்த நீதியரசர் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்ற விருப்பத்தினால் இவர்கள் தூண்டப்பட்டதாகத் தெரியவில்லை எனக் கடைசியில் கூறினார்.

காத்திருப்போம்

                                                                                     செ.பாஸ்கரன்




முற்றத்து மணற்பரப்பில் விரித்தபாயும்

வேப்பமர நிழலில் கயிற்றுக் கட்டிலுமாய்

வீற்றிருந்த என் வீடும் வளவும்

தூசி படிந்து தூர்ந்து கிடக்கிறது

வளையோசையும் வாய்ப்பாட்டு ராகமுமாய்

வலம் வந்த என் அம்மை

கழுவித்துடைத்து அழகுக்கோலமிட்ட அரண்மனை

தூண்களும் கல்லுமாய் அடையாளம் தருகிறது

பிரசவத்துக்காய் காத்துக் கிடந்த

முப்பது வருடங்களின் முற்றுப்பெறாத கருக்கலைப்பு

மக்கள் மௌனித்திருந்த நகரத் தெருக்களும்;

மரணித்திருந்த மானிட நேயமும்

ஊட்டச்சத்தின்றி உலாவிவரும் பிள்ளைபோல்

எழுந்து நிற்க எத்தணிப்புச் செய்கிறது

சாவிலிருந்து தப்பியவர்களில் சவாரிவிட காத்திருக்கிறது

சாதிப்பேயும் பிரதேச வேறுபாடும்

காதல் வரி பாடி கழித்திருந்த காலம்

மீண்டும் துளிர்விட்டு பசுமைதருமென்று

காத்திருக்கும் பெரிசுகளும்

அம்மன் கோயில் தேராக அசைந்துவரும் காதலியின்

விழிபார்த்து காத்திருக்கும் இளசுகளும்

கேலிச் சிரிப்பும் கெக்களமும் கொட்டி

சேர்ந்து மகிழ்திருக்க

நாம் நடந்த நகரம் மீண்டும்

திரும்பும் என காத்திருப்போம்

சிட்னியில் இதமான ராகங்கள் 18.10.2010

.



பறக்கும் கார் 2011 இல் பறக்கும்.



வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.

தமிழ்க் கங்கை செவாலியர் அமரர் புலவர் அமுது நினைவஞ்சலி

.

தமிழ்க் கங்கை செவாலியர் அமரர் புலவர் அமுது நினைவஞ்சலி


தொண்நூற்றிரண்டு வயதிலும் இளமைத் துடிப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிய இளவாலை அமுது என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அவர்கள் அண்மையில் இலண்டனில் அமரத்துவம் எய்தியமை எல்லோருக்கும் தெரிந்ததே, புலவர்மணி இளமுருகனார். பண்டிதமணி கணபதிப்பிள்ளை. வித்துவான் வேந்தனார். பேராசிரியர் செல்வநாயகம் போன்றோரிடம் தமிழை ஐயந்திரிபறக் கற்றவர் புலவர் அமுது, "கவிதைச் சிலைக்கு மரபுக் கவிதைகளால் ஆடையணியவேண்டும், மானுடத்தின் மனச்சாட்சியைக்கொண்டு அதன் கண்களைத் திறக்கவேண்டும்" என்ற அவரின் கனவை நனவாக்கி இறையடி சேர்ந்த அன்னாருக்கு ஓர் கவிதை அஞ்சலி -






காமருநல் வடிவம்நீத்துக் கர்த்தரின் சேவடியிற்
கலந்தவுனைக் கரங்குவித்து வணங்கு வோமே,

தேமதுரஞ் சொட்டச்சொட்டக் கவிதை யாலே
செல்வா! எனை வாழ்த்திநின்றாய்! செந்தமிழ்ப் பூந்
தாமரைகள் பூத்திடவே தடாகம் அமைத்துத்
தனித்தமிழை வளர்த்துநின்றாய்! தகைமை பெற்றாய்!
நாமகிழ்ந்து தினம்போற்றச் "செவாலியர்" விருதை
நற்குணத்தோய் பெற்றனையே! பற்ற றுத்துக்
காமருநல் வடிவம்நீத்துக் கர்த்தரின் சேவடியிற்
கலந்தவுனைக் கரங்குவித்து வணங்கு வோமே!

சீலம்மிகு பெருவாழ்விற் றிழைத்துப் பெற்ற
செல்வங்கள் ஐயிரண்டுஞ் சிறக்கச் செய்தாய்!
காலத்தாற் பட்டழியும் தமிழ் மலரக்
கடமையென மரபுதனை ஓம்பிக் காத்தாய்!
கோலச்செங் கதிரோன்போற் கவிக் கிரணம்
குவலயத்திற் பாய்ச்சித்"தமிழ்க் கங்கை" யானாய்!
பாலனவன் இராச்சியத்திற் பணி இயற்றப்
பக்குவம்பெற் றேகினையோட? சாந்தி! சாந்தி!!

நடைக்கெனவே உனக்கென்றோர் பாணி தேர்ந்து
நறுந்தேனும் சர்க்கரையும் கலந்தாற் போலப்
படைத்தளித்த செந்தமிழ்ப்பா மரபுக் கவிகள்
பகர்ந்திடுமே உன்புகழைப் பாரில் அன்றோ?
"கிடைத்திடுமோ அமுதேயுன் தீஞ்சொல் அமுது?
கீற்றுமதி போலெங்கு உற்றாய்"என் றேங்க
அடைக்கலமாய் இயேசுபிரான் பாதார விந்தம்
அணைத்துய்த்த அடைக்கல முத்தே சாந்தி!

ஓம் சாந்தி!

பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி
சிட்னி – அவுத்திரேலியா,

ANJANEYAM



RASANA School of Aesthetic Arts வழங்கும் ஆஞ்சநேயம் நடன நிகழ்வு சிட்னியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ம் திகதி மாலை 6.30 மணிக்கு Bankstown Townhall மண்டபத்தில் இடம் பெற இருக்கின்றது.

சிட்னி முருகன் ஆலய பூங்காவன திருவிழா

.

சிட்னி முருகன் ஆலய பூங்காவன திருவிழா













                                                                                                                       Photos by Gnani

சிட்னி முருகன் கோவில் தீர்த்த திருவிழா

.

சிட்னி முருகன் கோவில் தீர்த்த திருவிழா திங்கட் கிழமை கோலாகலமாக நடைபெற்றது. வார நாளாக இருந்தும் பக்தர்கள் வேலையில் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருந்து முருகப்பெருமானின் சன்னிதானத்தில் திரண்டிருந்தார்கள்.


வார இறுதிநாள் போலவே இந்த தீர்த்தோற்சவம் இடம் பெற்றது.

தீர்த்த திருவிழாவின் படங்களை காண்பதற்காக இணைத்துள்ளோம்.
 
 
 
                                                                                                                        Photos by Gnani
 
 
                                                                                                                                 Photos by Gnani