மவுண்ட் றூட் தமிழ் கல்வி நிலையத்தில் தமிழர் பண்பாடு மற்றும் மரபுகளைப் போற்றும் வகையில் சித்திரைப் புத்தாண்டு விழா 09/05/2026 அன்று சனிக்கிழமை மாலை பள்ளியின் மண்டபத்தில்மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், விருந்தினர்கள், பெற்றோர், பள்ளி நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அதிபர் திரு. சிவசங்கர்
சிவசுப்பிரமணியம், சிறப்பு விருந்தினர்
முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன், ஆசிரியர் பாமரதி மகேஸ்வரமூர்த்தி ஆசிரியர் திருமதி .இரதிசங்கர் ஆகியோரால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. குத்துவிளக்கின் ஒளி அறிவையும் நற்குணங்களையும் குறிக்கும் வகையில் நிகழ்விற்கு மேலும் சிறப்பூட்டியது.
அதனைத் தொடர்ந்து நாம் வாழும் நாட்டின் பூர்வீக மக்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள், போராட்டத்தில் உயிர்நீத்த பொதுமக்கள், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் மற்றும் தமிழர் நிலம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக ஈகைச்சாவடைந்த அனைத்து தமிழ் உறவுகளையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவன் செல்வன் ரதுஷான் முரளிதரன் அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளியின் தலைவர் கௌரீஸ்வரன் கந்தசாமி
அவர்கள் தலைமை உரையாற்றினார். தனது உரையில், இன்றைய நிகழ்வில் நடைபெற
இருக்கின்ற பட்டிமன்றத்தின் தலைப்பு சித்திரைப் புத்தாண்டை ஒட்டியதாக இருப்பதால்
அதுகுறித்து விரிவாக பேசுவது ஏதோ ஒரு தரப்பினரின் கருத்தை வலுப்படுத்துவதாக
அமையக்கூடும் எனக் குறிப்பிட்டார். மேலும், மாணவர்கள் ஏன் இவ்வாறான
பட்டிமன்றங்களில் பங்கேற்க வேண்டும் என்பதையும் விளக்கினார். பட்டிமன்றங்கள் மூலம்
மாணவர்கள் பல நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதுடன், பிறரது கருத்துகளை
மதிக்கக் கற்றுக்கொள்வார்கள், தன்னம்பிக்கை பெறுவார்கள், தெளிவாக பேசும் திறனை வளர்த்துக் கொள்வார்கள் என்பதையும் அவர்
வலியுறுத்தினார்.
அடுத்து உரையாற்றிய பள்ளியின் அதிபர் திரு சிவசங்கர் சிவசுப்பிரமணியம் அவர்கள், பட்டிமன்றத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தனது ஆசியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், இன்றைய விழா ஆசிரியர்கள், நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் பலரின் ஒத்துழைப்பினால் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வான பட்டிமன்றத்தை பள்ளி மாணவன் செல்வன் கேசிகன் அருளாளன் அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து செல்வி சுடர்க்கொடி முத்தரசு அவர்களின் தலைமையில் “புலம்பெயர் நாட்டில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் அவசியமா? அவசியமற்றதா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இப்பட்டிமன்றத்தில் அவசியம் என்ற அணியில் செல்வி தரணி தமிழ்ச்செல்வன் தலைமையில் செல்வன் சாருஷன் ஜெகதீஸ்வரன், செல்வி கமலி கணநாதன், செல்வி டிலானி டேவிட் மதன்ராஜ் ஆகியோரும் அவசியமற்றது என்ற அணியில் ரோமில்டா ஜோன் கலீசியஸ் அவர்களின் தலைமையில் செல்வி கர்ணி சதீஸ்கரன், செல்வன் தக்சன் சீராளன் செல்வி சியானி சுதாகரன் கலந்து கொண்டு தங்களது சிறப்பான வாதங்களை முன்வைத்தனர்
இரு அணிகளும் ஆணித்தரமான வாதங்களையும்
பிரதிவாதங்களையும் முன்வைத்து சபையினரின் பாராட்டைப் பெற்றனர். மாணவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத் திறன், உச்சரிப்பு, கருத்துக்களை ஆதாரப்பூர்வமாக முன்வைத்த விதம், பேச்சின் ஓட்டம், சொல் தேர்வு மற்றும் தன்னம்பிக்கையுடன் கருத்துகளை வெளிப்படுத்திய திறன் ஆகியவை அனைவராலும் பாராட்டப்பட்டன.
பட்டிமன்றம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதிப்பீட்டு உரையை
வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தகைமைசார் ஓய்வுநிலை முதலாவது பீடாதிபதி முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன் அவர்கள் உரையாற்றினார். தனது உரையில் மாணவர்களின் குரல் ஏற்ற இறக்கம், நேர மேலாண்மை, எதிர் அணியின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் திறன் போன்ற அம்சங்களைச் சுட்டிக்காட்டி பாராட்டினார். மேலும், “இன்றைய நிகழ்வில் நான் கலந்து கொள்ளாதிருந்தால், என் வாழ்நாளில் இவ்வாறான சிறப்பான நிகழ்வொன்றை தவறவிட்டிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வை சிறப்பாக திட்டமிட்டு ஒழுங்கமைப்பதிலும்,
மாணவர்களை திறமையாக வழிநடத்தி மேடைக்கு தயார்படுத்துவதிலும் ஆசிரியர்களான திருமதி.நிர்மலா திலகரட்னே மற்றும் திருமதி .ஜெகதேவன் சாந்தினி ஆகியோர் அளித்த அர்ப்பணிப்பும் உழைப்பும் இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறினால் அது மிகையாகாது. மாணவர்களின் பேச்சுத்திறன், தன்னம்பிக்கை மற்றும் மேடை ஆளுமை ஆகியவற்றில் அவர்களின் வழிகாட்டுதல் தெளிவாக பிரதிபலித்தது.
மேலும், நிகழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நேர்த்தியாக
ஒருங்கிணைத்து, சபையினரை ஈர்க்கும் வகையில் முழு நிகழ்வையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய நிர்வாக உறுப்பினர் திருமதி அனேஷா சிவபாதம் அவர்களின் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கதாக அமைந்தது. அவர்களின் ஒழுங்கமைப்புத் திறனும் மேடை நடத்தும் ஆற்றலும் நிகழ்விற்கு மேலும் மெருகூட்டியது.”
தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக மாணவர்கள்,
தலைவர், அதிபர், விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே புது வருட கைமாறல் நடைபெற்றது. (புது வருட கைமாறல் என்பது புத்தாண்டு தினத்தில் பெரியவர்கள் இளையோரின் கைகளில் பணமோ அல்லது வெற்றிலையோ வழங்கி வாழ்த்தும் தமிழர் பாரம்பரிய மரபாகும்.)
இறுதியாக நன்றி உரையாற்றிய பள்ளியின் செயலாளர் திரு மயூரதன் தங்கவேல் அவர்கள் இன் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய தலைவர் ,அதிபர் ,ஆசிரியர்கள், விருந்தினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ,பள்ளியின் நலன் விரும்பிகள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் மேலும், நிகழ்விற்காக ஒலி–ஒளி அமைப்பு, புகைப்படம், காணொளி மேடை அலங்காரம் மற்றும் பலகாரங்களான லட்டு, வடை, முறுக்கு, பயித்தம் பணியாரம் ஆகியவற்றை வழங்கி உதவி, நிகழ்வு ஏற்பாடுகளில் பங்களிப்பு செய்த அனைவருக்கும் தனது விசேட நன்றியை தெரிவித்தார்
“இத்துடன்
சித்திரை புத்தாண்டு இனிதே நிறைவு பெற்றது.”
ஆக்கம்: கௌரீஸ்வரன் கந்தசாமி



























No comments:
Post a Comment