ஒவ்வொரு உயிரிலும் இறைவன்

 ஆன்மீகத்தின் உண்மையை உள்ளத்தில் பதியச் செய்ய, தெய்வத்தின் சன்னிதியில் இருக்கும் போது புனிதத்தையும் வணக்கத்திற்குரிய நிலையையும் பெறும் விலங்குகளின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். பாம்பு, சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் போது அனைவராலும் வணங்கப்படுகிறது. ஆனால் வேறு இடங்களில் அதைக் கண்டால், மக்கள் அதை கொல்லத் தயங்குவதில்லை. அதுபோலவே, விநாயகரின் வாகனமான எலி, விநாயகருடன் இருக்கும் போது வணக்கத்திற்குரியதாகிறது; ஆனால் அதையே உங்கள் வீட்டில் கண்டால், அதை பிடித்து அகற்ற முயல்கிறீர்கள்.

இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், நாம் இறைவனின் சன்னிதியில் இருக்கும்போது உயர்ந்த மரியாதையைப் பெறுகிறோம் என்பதே. எவ்வாறு உடலின் அங்கங்கள் நமது உடலின் பகுதிகளோ, அதுபோல நாமெல்லாரும் அந்த விச்வரூபமான இறைவனின் உடலின் அங்கங்களே. அந்த விச்வரூபம் ஆயிரக்கணக்கான தலைகள், கால்கள், கைகள் மற்றும் கண்கள் கொண்டது. எல்லா உயிரினங்களின் உடல்களும் அவருடையதே.

இதில் உறுதியான நம்பிக்கை வளர்த்துக் கொண்டால், தெய்வீகத்தை அதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்துகொள்ள முடியும். சிவன் கோவிலில் கல்லால் செய்யப்பட்ட நந்தியைப் பார்க்கும்போது நாம் அதை வணங்குகிறோம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் ஒரு காளையைப் பார்த்தால், அதை அடிக்கவும் தயங்குவதில்லை. இது ஒவ்வொரு உயிரிலும் இறைவனை காணாத மனிதனின் அறியாமையாலேயே ஏற்படுகிறது. எறும்பிலிருந்து யானை வரை, எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான்!

No comments: