தெற்கு லெபனானில் இரு இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் - சிறுமி உட்பட 10 பேர் பலி
ஆபிரிக்காவில் ‘பண்டிபுஜியோ’ எபோலா வைரஸ் பரவல் தீவிரம் : தடுப்பூசி கண்டுபிடிக்க 9 மாதங்கள் ஆகலாம் - WHO
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா சென்றார் ரஷ்ய அதிபர் புதின்
தெற்கு லெபனானில் இரு இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் - சிறுமி உட்பட 10 பேர் பலி
23 May, 2026 | 09:45 AM
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு லெபனானில் இரு இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலில் ஹனுயே கிராமத்துக்கு குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்லாமிய சுகாதார சங்கத்தைச் சேர்ந்த 4 மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதன் பின்னர், டயர் மாகாணத்தில் உள்ள டெய்ர் குவானன் அல் நஹ்ர் கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு சிறுமி, 2 மருத்துவ பணியாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் சிரியாவைச் சேர்ந்த சிறுமியும் ஹிஸ்புல்லாவின் நட்பு அமைப்பான அமல் இயக்கத்தைச் சேர்ந்த 2 மருத்துவ பணியாளர்கள் இறந்துவிட்டதாக குறிப்பிடப்படுகிறது,
இஸ்ரேல் - லெபனான் இடையே தொடர்ச்சியாக போர் இடம்பெற்று வந்த நிலையில், அண்மையில் அந்தப் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் வகையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது.
எனினும், லெபனானின் எல்லைப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே நேற்று தெற்கு லெபனானில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. நன்றி வீரகேசரி
ஆபிரிக்காவில் ‘பண்டிபுஜியோ’ எபோலா வைரஸ் பரவல் தீவிரம் : தடுப்பூசி கண்டுபிடிக்க 9 மாதங்கள் ஆகலாம் - WHO
Published By: Digital Desk 2
21 May, 2026 | 06:48 PM
ஆபிரிக்க பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் அரிய வகை 'பண்டிபுஜியோ' எபோலா வைரஸ் பரவலுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக உருவாக்குவதற்கு இன்னும் 9 மாதங்கள் வரை ஆகலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எபோலா வைரஸ் வகைக்கு எதிராக இரண்டு சாத்தியமான தடுப்பூசி மாதிரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றபோதிலும், அவை இன்னும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் வசீ மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுவரை 600க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த நோயினால் மரணங்களின் எண்ணிக்கை 139ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தொற்றைக் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசுஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரம்:
முதலாவது தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்ட கொங்கோவில் 51 பேருக்கு தற்போது எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்டை நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் கொங்கோவில் இருந்து பயணித்த இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொங்கோவின் கிழக்கு இத்தூரி காணமே இந்த வைரஸ் பரவலின் மையப்பகுதியாகக் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, உலக சுகாதார நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருந்தது. எனினும், இது உலகளாவிய ரீதியில் ஒரு பெருந்தொற்று அல்ல என்றும், தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களிலேயே இதன் ஆபத்து அதிகமாகக் காணப்படுவதாகவும் டெட்ரோஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பி வழிவதாகவும், போதிய தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சுகாதாரப் பணியாளர்கள் பெரும் ஆபத்தான சூழலில் பணியாற்றி வருவதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 20 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவியை அறிவித்துள்ளது.
சுமார் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னரே இந்த பண்டிபுஜியோ எபோலா வகை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பரவலாகக் காணப்படும் 'சைர்' எபோலா வகையை விட இது வீரியம் குறைந்ததாகக் கருதப்பட்டாலும், இதற்கென அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்தியேக மருந்துகளோ தற்சமயம் இல்லாததே தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும். நன்றி வீரகேசரி
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா சென்றார் ரஷ்ய அதிபர் புதின்
Published By: Vishnu
20 May, 2026 | 06:26 AM
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக செவ்வாய்க்கிழமை (19) சீனா சென்றடைந்தார். இது உலக அரசியல் அரங்கில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சீனப் பயணம் முடிவடைந்து ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திலேயே ரஷ்ய அதிபர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், அவரது பழைய நண்பரான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக பெய்ஜிங் வந்தடைந்தார்.
இங்கு ரஷ்ய அதிபருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது ரஷ்ய அதிபரின் 25வது சீனப் பயணமாகும்.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த இரண்டு நாட்டுத் தலைவர்களான டிரம்ப் மற்றும் புதின் ஆகியோரை ஒரு வாரத்தில் தனது நாட்டிற்கு அழைத்து வருவதன் மூலம், தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் உலக அரசியலில் சீனா ஒரு நிலையான மற்றும் நம்பகமான சக்தியாக உருவெடுத்து வருவதை பெய்ஜிங் நிர்வாகம் காட்ட முயற்சிக்கிறது.
இந்த இராஜதந்திர சந்திப்பின் மூலம், எந்தவொரு சூழ்நிலையையும் தாங்கக்கூடிய இரு நாடுகளுக்கும் இடையிலான உடைக்க முடியாத உறவை உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.
மேற்கத்தியத் தடைகளுக்கு மத்தியில், சீனாவுடனான எரிசக்தி உறவுகளை ரஷ்யா மேலும் வலுப்படுத்துவதும் இந்தப் பயணத்தின் ஒரு நோக்கமாகும்.
நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டுள்ள 'பவர் ஆஃப் சைபீரியா 2' எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு இரு நாடுகளின் தலைவர்களும் சிறப்பு கவனம் செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச, பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வார்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment