நாம் மூவர் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் , சிவாஜி இருவரும் ஒரே ஒரு படத்தில் சேர்ந்து நடித்ததுடன் தொடர்ந்து சேர்ந்து நடிப்பதை விட்டு விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு பின் நடிக்க வந்த இளம் நடிகர்களான ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் இருவரும் வெற்றி பட நாயகர்களாக திகழ்ந்த போதும் சேர்ந்து நடிக்க எவ்வித தயக்கமும் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு அவர்கள் இணைந்து நடித்த ஆரம்ப கால படங்களில் ஒன்று நாம் மூவர். 


 நாம் மூவர் என்று படத்துக்கு பேர் என்றால் மூன்றாவது நடிகர் யார் என்ற கேள்வி எழும் அல்லவா , அவர் வேறு யாரும் அல்ல நாகேஷ் தான்! 

 ஏற்கனவே எம் ஜி ஆர் நடிப்பில் தாயின் மடியில் படத்தை எடுத்த கே ஆர் பாலன் இனி எடுக்கும் படங்கள் புது நடிகர்களின் நடிப்பில் வணிக ரீதியான படங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற முடிவில் முழு மசாலா படமாக நாம் மூவர் படத்தை தயாரித்தார். 

 தான் எடுக்கும் மசாலா படத்துக்கு கதை எழுத அவரால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் தான் மகேந்திரன். பின் நாட்களில் ஜனரஞ்சக படங்களை விமர்சனம் செய்து கொண்டும், மட்டம் தட்டிக் கொண்டும் இருந்த மகேந்திரன் தான் இப் படத்தின் கதையை எழுதினார் . இந்தப் படத்துடன்தான் அவரின் திரையுலக பிரவேசம் ஆரம்பமானது. 

 செல்வ செழிப்பில் வாழும் ஓர் இளைஞன் , வருமானம் தேடி கிராமத்தில் இருந்து பட்டணம் வரும் மற்றுமோர் இளைஞன், தெருவில் வரும் கார்களை பஞ்சராக்கி , பின்னர் அதை திருத்திக் கொடுத்து அதன் மூலம் வருமானம் தேடும் ஒருவன் மூவரும் சந்தித்து இணை பிரியாத நண்பர்களாகிறார்கள். கால ஓட்டத்தில் மூவருக்கும் காதலிகள் கிடைக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழலால் ஒருவன் மீது கொலைப் பழி விழுகிறது. அவனை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு அவன் நண்பன் மீது சுமத்தப் படுகிறது. மூன்றாவது நண்பனோ இறந்து விட்டவனாக மறைந்து வாழ்கிறான். இவர்கள் மூவரும் மீண்டும் இணைந்தார்களா என்பதுதான் படத்தின் மீதி. 

 இந்த கதையை ஆடல் , பாடல், கவர்ச்சி நடனம், பலவிதமான

அடிதடிகள், என்று கலந்து காரசாரமாக படமாகியிருந்தார்கள். ஆனாலும் இடையில் அம்மா செண்டிமெண்ட் , அண்ணன், தங்கை பாசப் பிணைப்பு இவற்றையும் சேர்த்துக் கொள்ள தவறவில்லை. இதனால் எல்லா அம்சங்களும் கலந்த படமாக நாம் மூவர் செட்டானது. 

 படத்தில் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், நாகேஷ் மூவருக்கும் சமமான விதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது . இதனால் மூவரின் ரசிகர்களுக்கும் திருப்தி. படத்தில் ஆர். என். நம்பியார் அமைத்த சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன. அதே போல் நடனங்களும் ரசிக்கும் படி அமைந்தன. குறிப்பாக எல். விஜயலஷ்மி வளைந்து நெளிந்து ஆடுகிறார். ரத்னாவும் சமாளிக்கிறார். 

 ரவிச்சந்திரன் , ஜெய்சங்கர் இருவரும் முதல் முறையாக சேர்ந்து இப்

படத்தில் தான் நடித்தார்கள். படம் முழுதும் இருவரும் வில்லன்களுடன் சண்டை போடுகிறார்கள். எங்கே எப்போது சண்டை என்று யூகிக்க முடிய வண்ணம் திடீர் திடீர் என்று சண்டை நடக்கிறது. இவ்வளவுக்கு பெரிய வில்லன் நடிகர்கள் எவரும் படத்தில் இல்லை. கவர்ச்சி வில்லன் என்று அறியப்பட்ட கே. கண்ணன் இப் படத்தின் மூலம் பிரபலமானார். வி .கே. ராமசாமி, நாகேஷ், மாதவி காமெடியை ரசிக்கலாம். இவர்களுடன் திருப்பதிசாமி, குண்டுமணி ஆகியோரும் படத்தில் உள்ளனர். 

 தமிழ் திரை இசையில் பலருக்கு ஏணியாக இருந்த எஸ். எம்.
சுப்பைய்யா நாயுடு வாய்ப்பிழந்து இருந்த கட்டத்தில் அவருக்கு பக்க பலமாக இருந்தவர் பாலன் . இந்தப் படத்துக்கு எஸ் எம் எஸ் இசையமைக்க வாய்ப்பளித்திருந்தார் . அவருடைய இசையில் காலம் கடந்து என்றும் ஒலிக்கும் பாடலாக பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பாடல் ஒலிக்கிறது. அதே போல் எல் ஆர் ஈஸ்வரி, டி எம் எஸ் பாடிய சிங்கபூர் மச்சான் சிரிக்க சிரிக்க வச்சான் பாடல் தூக்கலாக கவர்ந்தது. பாடல்கள் வாலி. 

 படத்தின் வசனங்களை முல்லை சத்தி எழுதினார். “கை கட்டி

சேவகமா இந்த உடம்பு தாங்குமா , வெறும் கோயிலான இங்கே மூல விக்ரத்தையே கொண்டு வந்திருக்கிறேன் , வசதி இல்லாதவங்க தங்களுக்காக உழைக்கணும் வசதி உள்ளவங்க மத்தவங்களுக்காக உழைக்கணும் “ போன்ற வசனங்கள் கவர்ந்தன. ஆக்சன் படங்களுக்கு பேர் பெற்ற ஒளிப்பதிவாளர் எம். கர்ணன் இந்தப் படத்தில் தான் முதல் தடவையாக ஸ்டண்ட் காட்சிகளை தன் கமரா மூலம் வித விதமாக படமாக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டார். இந்த
படத்தில் இருந்து தான் அவரின் ஸ்டண்ட் படப் பயணம் ஆரம்பமானது.

படத்தை ஜம்பு இயக்கினார். நாடோடி மன்னன் உட்பட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி , உதவி இயக்குனராகவும் செயற்பட்ட ஜம்பு இப் படம் மூலம் முதல் முறையாக இயக்குநரானார். இப் படத்தோடு ஜம்புவின் பட வாய்ப்புகள் ஜம்ப் பண்ணின ! 

 பெரிய தயாரிப்பாளர்கள் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் ஒரே படத்துடன் எம் ஜி ஆரை விட்டு விலகி புதியவர்களை பயன் படுத்தி வெற்றி கண்டவர் கே .ஆர் .பாலன்.

No comments: