இலங்கைச் செய்திகள்

யாழ். பொது நூலகம் எரிப்பு : 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன? - வீரகேசரி நாளிதழ் குறிப்புகள்

அமைச்சர் விஜித்த ஹேரத் - நியூஸிலாந்து அமைச்சர் டாட் மெக்லே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவான பேச்சு!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் போராட்டம்


யாழ். பொது நூலகம் எரிப்பு : 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன? - வீரகேசரி நாளிதழ் குறிப்புகள்

Published By: Nanthini

31 May, 2026 | 11:05 AM

வரலாற்றில் இன்று... 

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவம் 1981ஆம் ஆண்டு இதே திகதி (31) இதே கிழமை (ஞாயிற்றுக்கிழமை), நள்ளிரவில் நடந்தது. இது, காலத்தால் மறையாதது, மறக்கமுடியாதது!

யாழ். பொது நூலகம் 1981ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி நள்ளிரவு


வன்முறைக் கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. நூலகத்தில் மட்டுமன்றி, இரவோடு இரவாக பல இடங்களில் தீ வைக்கப்பட்டு, யாழ். நகர் பாரிய சேதங்களை சந்தித்தது. அன்றைய பதற்றமான சூழ்நிலையை, அந்நாட்களில் வெளியான வீரகேசரி பத்திரிகைகள் செய்திகளாக வெளியிட்டிருந்தன.

1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி வெளியான வீரகேசரி நாளிதழ், "யாழ் நகரில் இராணுவம் காவல், பல இடங்களில் தீவைப்பு, பாரிய சேதங்கள், இரவோடிரவாக நிகழ்ந்த அனர்த்தம்" என்ற தலைப்பில் பிரசுரமான விரிவான செய்திகளை இங்கு காணலாம்.


ஞாயிறன்று இரவு யாழ் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் பரவலாக நடந்த கொள்ளை, கார் எரிப்பு, கடையுடைப்பு, தீ வைப்புச் சம்பவங்களையடுத்து, நகரில் மரண அமைதி நிலவியதாகவும் மக்களின் நடமாட்டமின்றி நகர் வெறிச்சோடிக் கிடந்ததாகவும் அன்றைய வீரகேசரி பத்திரிகை பதிவு குறிப்பிட்டிருந்தது. அத்துடன், வாகனங்கள் தீக்கிரை, வீடுகள் மீது பெற்றோல் குண்டுவீச்சு, அன்றைய எம்.பி. யோகேஸ்வரனின் வீடு தரைமட்டம், அவரது ஜீப் தீக்கிரை,  எம்.பி. தனது மனைவியுடன் சுவர் ஏறிக்குதித்துத் தப்பிய சம்பவம், கோவில் தேருக்கு தீ வைப்பு, கட்டடங்கள், கடைகளுக்கு தீவைப்பு என பலப் பல அசம்பாவிதங்கள் நடந்ததை அன்றைய வீரகேசரி தெளிவுபட குறிப்பிட்டிருந்தது.   நன்றி வீரகேசரி 



அமைச்சர் விஜித்த ஹேரத் - நியூஸிலாந்து அமைச்சர் டாட் மெக்லே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவான பேச்சு!

29 May, 2026 | 07:07 PM

(நா.தனுஜா)

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் நியூஸிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டுக் கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்துதல் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுன் 3 ஆம் திகதி வரை நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கிறார்.

அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை (26) நியூஸிலாந்தை


சென்றடைந்த அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு உயர்மட்டப் பிரதிநிதிகள் பலருடனும் சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய நியூஸிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லே சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டுக் கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்துதல் உட்பட பரஸ்பர நலன் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து நியூஸிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான இராஜாங்க அமைச்சர் நிக்கோலா கிரிக்கை சந்தித்த விஜித்த ஹேரத், வர்த்தக ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் உலகப் பொருளாதாரம் என்பன உள்ளடங்கலாக இருநாடுகளினதும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.


அத்தோடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து அந்நாட்டு அமைச்சருக்கு விளக்கமளித்ததுடன், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு நியூஸிலாந்து வர்த்தகர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

அதேபோன்று இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், தொழிற்பயிற்சிக்கான திறன் மேம்பாடு மற்றும் கல்வித்துறைசார் வாய்ப்புக்கள் தொடர்பில் நியூஸிலாந்தின் உயர்கல்வி அமைச்சர் பென்னி சிம்மண்ட்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டது.   








நன்றி வீரகேசரி 





சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் போராட்டம்

29 May, 2026 | 06:11 PM

சிறுவர்களுக்கு மீதான வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாக யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) போராட்டம் நடத்தப்பட்டது. 

இதில் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டு குரல் கொடுத்தனர்.



















நன்றி வீரகேசரி 

No comments: